Formula 1 : அட்டகாசமாகத் தொடங்கியது ஹாமில்டன் Vs வெர்ஸ்டப்பன்... மிரட்டல் ரேஸில் முந்தியது யார்?!

39-வது லேப்பில் தன் இரண்டாவது பிட் ஸ்டாப்பை வெர்ஸ்டப்பன் எடுக்க, ஆட்டம் அவர் பக்கம் திரும்பும் என்று கருதப்பட்டது. புதிய டயர் எடுத்ததும் இடைவெளியைக் குறைத்துக்கொண்டே இருந்தார். 40-வது லேப்பில் 8.7 விநாடிகள் பின்தங்கியிருந்தவர், 43-வது லேப்பின்போது 5.25 விநாடிகளே பின்தங்கினார்.
2021 ஃபார்முலா 1 சீசன், கடந்த ஆண்டு முடிந்த இடத்தில் இருந்தே தொடங்கியிருக்கிறது. லூயிஸ் ஹாமில்டன், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், வால்டேரி போட்டாஸ் மூவரும் போடியம் ஏறியிருக்கிறார்கள். அணிகளுக்கான புள்ளிப் பட்டியலில் மெர்சிடிஸ், ரெட் புல், மெக்லாரன் முறையே முதல் மூன்று இடங்களில் அமர்ந்திருக்கின்றன. ஹாமில்டன் ரேஸை வென்றிருக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் மிகவும் சுமாராக செயல்பட்டிருக்கிறார். செர்ஜியோ பெரஸ் அட்டகாசமான கம்பேக் கொடுத்திருக்கிறார். இப்படி கடந்த ஆண்டு பார்த்த பெரும்பாலான விஷயங்கள்தான் இந்த முதல் ரேஸில் அரங்கேறியிருக்கிறது. ஆனால், பல புதிய மாற்றங்கள் இந்த புதிய சீசனை இன்னும் மெருகேற்றியிருக்கிறது! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடந்த இந்த பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ ரேஸின் ஹைலைட்ஸ் இங்கே!
காரில் கோளாறு
முதல் மாற்றமாக, இந்த ரேஸை ‘ஃபேவரிட்’ ஆகத் தொடங்கியது என்னவோ வெர்ஸ்டப்பன்தான். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரெட் புல் கார்கள் அட்டகாசமாக அப்கிரேட் ஆகியிருப்பதால், மெர்சிடிஸ் வீரர்களுக்கு மிகப்பெரிய சவால் இருக்கும் என்பது ப்ரீ சீசனில் இருந்தே கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றதுபோல், போல் பொசிஷனைத் தனதாக்கினார் 23 வயது இளம் வீரரான வெர்ஸ்டப்பன். ஆனால், ரெட்புல் கார்களில் சில டெக்னிக்கல் பிரச்னைகள் ஏற்பட்டதால் நேற்று காலையில் இருந்தே சிறு பதற்றம் நிலவியது. அதற்கு ஏற்றதுபோல் ஃபார்மேஷன் லேப்பின்போது பவர் பிரச்னை ஏற்பட்டு, டிராக்கிலிருந்து ஓரம் கட்டினார் மற்றொரு ரெட் புல் வீரரான செர்ஜியோ பெரஸ்.

புதிய அணிக்காக அவரது முதல் ரேஸ் தொடங்காமலேயே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டது. அவர் டிராக்கில் இருந்து விலகுவதற்காக, கூடுதல் ஃபார்மேஷன் லேப் போக, ரேஸின் மொத்த லேப்களின் எண்ணிக்கை 56 ஆக மாறியது. ஒருவழியாக பிரச்னை சரியாக பிட்டில் இருந்து ரேஸைத் தொடங்கினார் பெரஸ்.
மோசமான தொடக்கம்
இந்த முதல் ரேஸ் அவருக்கு மட்டுமல்ல, இளம் வீரர் நிகிதா மேஸபினுக்கும் சரியாகத் தொடங்கவில்லை. ரேஸ் தொடங்கிய வேகத்தில், மூன்றாவது திருப்பத்திலேயே காரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்கிலிருந்து வெளியேறினார் ஹாஸ் அணியின் அறிமுக வீரர் மேஸபின். வெளியேறிய கார் சேதமடைந்ததால், அவரால் போட்டியைத் தொடர முடியவில்லை. "அதிவேகத்தில் வந்து, திருப்பத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் traction கிடைக்காமல் டிராக்கிலிருந்து வெளியேறியிருக்கிறது அவர் கார்” என்று அந்த அறிமுக வீரர் செய்த தவறை சுட்டிக்காட்டினார்கள் வர்ணனையாளர்கள். ஒரு லேப் கூட முடிக்காமல் முடிவுக்கு வந்தது அவரது முதல் F1 ரேஸ்.
கம்பேக் நாயகன்
ஆனால், பெரஸின் முதல் ரேஸ் இப்படி முடியவில்லை. பிட்டில் இருந்து கடைசியாகப் போட்டியைத் தொடங்கியவர் புயலென முன்னேறிக்கொண்டே இருந்தார். ரெட் புல் காரின் வேகம், பெரஸின் பிடிவாதம், அனுபவம் அனைத்தும் ஒன்றுசேர, ஒவ்வொரு டிரைவராக முந்திக்கொண்டே இருந்தார் அந்த முன்னாள் ஃபோர்ஸ் இந்தியா வீரர். முதல் 6 லேப்கள் முடிவதற்குள்ளாகவே 5 வீரர்களை முந்தியிருந்தார் பெரஸ்.

ஒன்பதாவது லேப்பின்போது 13-வது இடம். 21-வது லேப்பின்போது 11-வது இடம். 22-ல் ஒன்பது, 27-ல் ஏழு என முன்னேறிக்கொண்டே இருந்தவர், 44-வது லேப்பில் ஆறாவது இடத்துக்கும் வந்தார். இறுதி கட்டத்தில் ஃபெராரி வீரர் சார்ல் லெக்லரக்கையும் முந்தி ஐந்தாவது இடம் பிடித்தார். ஃபார்முலா 1 வரலாற்றிலேயே, முதல் லேப் முடிவில் கடைசி இடத்தில் இருந்துவிட்டு ரேஸை வென்ற ஒரே டிரைவர் இவராயிற்றே. இது இவருக்குப் பெரிய விஷயமா என்ன! வழக்கம்போல் ரேஸை ஜெயிப்பது யாராக இருந்தாலும், ‘டிரைவர் ஆஃப் தி டே’ நான் தான் என்பதை நிரூபித்தார் பெரஸ். மக்களும் அவரையே நேற்றைய ரேஸின் சிறந்த டிரைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
சூப்பராகத் தொடங்கிய சுனோடா
ஹாஸ் அணியின் மேஸபினுக்கு முதல் ரேஸ் மோசமாக அமைந்த நிலையில், இன்னொரு அறிமுக வீரரான யூகி சுனோடா தன் ஃபார்முலா ஒன் கரியரை சிறப்பாகத் தொடங்கினார். ஆல்ஃபா டூரி அணிக்காகப் பங்கேற்ற இந்த 20 வயது ஜப்பானிய வீரர்தான், இந்த சீசனின் மிகவும் இளம் ரேஸர். ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஓட்டிய அவர், முன்னணி வீரர்களையெல்லாம் இலகுவாகக் கடந்து அனைவரையும் கவர்ந்தார்.

கிமி ராய்கோனன், செபாஸ்டியன் வெட்டல் போன்ற ஜாம்பவான்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய அவர், லான்ஸ் ஸ்ட்ரோலை விட ஒரு விநாடி முன்னதாக முடித்து ஒன்பதாம் இடம் பிடித்தார். ஒருகட்டத்தில் அதிவேக லேப் டைமிங் (1:34.761 - 38வது லேப்) வைத்திருந்தார் சுனோடா. இந்த ரேஸில் இரண்டு புள்ளிகள் பெற்றிருக்கும் சுனோடாதான் ஃபார்முலா 1 அறிமுக ரேஸிலேயே பாயின்ட்ஸ் எடுத்த முதல் ஜப்பானியர். தன் முதல் ஃபார்முலா 1 ரேஸை ஓட்டிய மிக் ஷுமேக்கர், 16-வது இடம் பிடித்தார்.
ஹாமில்டன் vs வெர்ஸ்டப்பன்
ரேஸின் முக்கிய யுத்தத்துக்கு வருவோம். கடந்த சீசன் தன் டீம்மேட் போட்டாஸ் ஆரம்பத்தில் போட்டியளித்தாலும், பின்பாதியில் தனிக்காட்டு ராஜாவாகப் பயணித்துக்கொண்டிருந்தார் ஹாமில்டன். இம்முறை தொடக்க ரேஸிலிருந்தே சவால் இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறார் வெர்ஸ்டப்பன். காரின் வேகம், வெர்ஸ்டப்பனின் தைரியம் இரண்டும் ஹாமில்டனுக்கு பெரிய போட்டியாக அமைந்தது. ஆனால், தன் அனுபவத்தாலும் சாதுர்யத்தாலும் அணியின் சரியான திட்டமிடலாலும் வெற்றியை ருசித்துவிட்டார் நடப்பு சாம்பியன்.

ரேஸின் முதல் லேப்பிலேயே Safety car வர நேர்ந்தது. நான்காவது லேப்பில் virtual safety car. இப்படி ஒவ்வொரு முறையும் தன் முன்னிலையைத் தக்கவைக்க வெர்ஸ்டப்பனுக்கு நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அதை சமாளித்து முன்னிலை பெற்றார் வெர்ஸ்டப்பன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த முன்னிலையை அவர் அதிகரிக்க நினைத்தாலும் ஹாமில்டன் அதற்கு விடவில்லை. 2 நொடிக்கு மேல் ஒரு பெரிய வித்யாசத்தை அந்த ரெட் புல் வீரரால் ஏற்படுத்த முடியவில்லை.
அப்போதுதான் ஒரு சமயோஜித முடிவை எடுத்து போட்டியை மாற்றியது மெர்சிடிஸ். மீடியம் டயரோடு ரேஸைத் தொடங்கிய ஹாமில்டன், 13-வது நிமிடத்திலேயே பிட்டுக்குள் நுழைந்து ‘ஹார்ட்’ டயருக்கு மாறினார். புதிய டயரின் வேகத்தைப் பயன்படுத்தி வெர்ஸ்டப்பனுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்தார் ஹாமில்டன். புதிய டயரின் வேகம் இடைவெளியைக் குறைத்துக்கொண்டே இருந்தது. 17-வது லேப்பில் பிட் எடுத்து வெளியேறியபோது ஹாமில்டனை விட 6 விநாடிகள் பின்தங்கினார் வெர்ஸ்டப்பன்.

39-வது லேப்பில் தன் இரண்டாவது பிட் ஸ்டாப்பை வெர்ஸ்டப்பன் எடுக்க, ஆட்டம் அவர் பக்கம் திரும்பும் என்று கருதப்பட்டது. எதிர்பார்த்ததுபோல் புதிய டயர் எடுத்ததும் தன் வேகத்தால் இடைவெளியைக் குறைத்துக்கொண்டே இருந்தார் அவர். 40-வது லேப்பில் 8.7 விநாடிகள் பின்தங்கியிருந்தவர், 43-வது லேப்பின்போது 5.25 விநாடிகளே பின்தங்கினார். அடுத்தடுத்த லேப்களில் 3.9, 2.9, 2.6, 2.1 என அந்த வித்யாசம் குறைந்துகொண்டே இருந்தது.
முந்திவிட்டு பின்வாங்கிய வெர்ஸ்டப்பன்
52-வது லேப்பில் ஹாமில்டனை வெர்ஸ்டப்பன் முந்திவிடுவார் என்று கணிக்கப்பட்டிருந்தது. நினைத்ததுபோலவே ஹாமில்டனை அவர் நெருங்கி, DRS ரேஞ்சுக்குள் வந்தார். மிகவும் துரிதமாக செயல்பட்ட ஹாமில்டன், வெர்ஸ்டப்பனை முந்த விடவேயில்லை. அவர் டிராக்கின் வெளிப்புறம் நகருமாரு தன் காரை ஓட்டினார் ஹாமில்டன். முந்த முடியாமல் காத்துக்கொண்டே இருந்த வெர்ஸ்டப்பன், நான்காவது வளைவில் பொறுமை இழந்து, டிராக்குக்கு வெளியே சென்று அவரை முந்தினார்.

விதிமுறைப்படி அவர் செய்தது தவறு என்பதால், போட்டி நிர்வாகம் வெர்ஸ்டப்பனைப் பின்வாங்கச் சொல்லுமாறு ரெட்புல் டீமுக்கு அறிவுறுத்த, அவர்கள் அதை வெர்ஸ்டப்பனுக்குத் தெரிவிக்க, அவரும் பின்வாங்கி ஹாமில்டன் முன்னால் செல்ல வழிவிட்டார். அதன்பிறகு மீண்டும் அவரை முந்த எடுத்த வெர்ஸ்டப்பனின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில், வெறும் 0.745 விநாடி வித்யாசத்தில் வென்றார் லூயிஸ் ஹாமில்டன்.
கூடுதல் பிட் ஸ்டாப், கூடுதல் பாயின்ட்!
முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பது போட்டாஸுக்கு வாய்ப்பில்லாத காரியமாக மாறியது. அதேசமயம், தனக்குப் பின்னால் இருந்த வீரர்களோ சுமார் 30 விநாடிகளுக்கு மேல் பின்தங்கியிருந்தார்கள். அதனால், fastest lap மூலம் கிடைக்கும் ஒரு புள்ளியை வசப்படுத்த திட்டமிட்டார் போட்டாஸ். கடைசி லேப்புக்கு முன்பு ஒரு கூடுதல் பிட் எடுத்து soft டயர்களுக்கு மாறினார். 1:32.090 விநாடிகளில் லேப்பை முடித்து அந்த 1 புள்ளியைத் தனதாக்கினார் போட்டாஸ்.