Published:Updated:

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை : சமத்துவம் பேசும் நியூஸிலாந்தில் வலுக்கும் எதிர்ப்புகள்!

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற வரலாறு படைக்கப்போகிறார் பளுதூக்குதல் வீராங்கனை லாரல் ஹப்பார்ட்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாற்றியமைக்கப்பட்ட ஒலிம்பிக் விதிகளின் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். இருந்தாலும், நியூசிலாந்து பளுதூக்குதல் வீராங்கனைகள் மத்தியில் இது சில எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்தவரான லாரல் ஹப்பார்டின் வயது 43. 2020-ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த பளுதூக்குதல் உலகக் கோப்பையில், 87 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார் ஹப்பார்ட். 2019-ம் ஆண்டு சமோவாவில் நடந்த பசிபிக் போட்டியில் தங்கம் வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியிலுமே இவர் பங்கேற்றிருக்கவேண்டியது. ஆனால், காயம் ஏற்பட்டதால் அவர் கலந்துகொள்ளமுடியவில்லை. இப்படி பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும், ஒலிம்பிக் என்பது அவருக்கு எட்டாக் கனவாகவே இருந்தது. ஆனால், இப்போது அது நிறைவேறப்போகிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை : சமத்துவம் பேசும் நியூஸிலாந்தில் வலுக்கும் எதிர்ப்புகள்!

ஒவ்வொரு எடைப் பிரிவிலும் ஒரு நாடு ஒரு வீரரை ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பலாம். சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் நியூசிலாந்து அணி ஹப்பார்டை அனுப்புவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இன்னும் அது 100 சதவிகிதம் உறுதியாகவில்லை என்றாலும், “அனைவரையுமே ஏற்றுக்கொள்வது நியூசிலாந்து அணியின் கலாசாரத்தில் இருந்துவருகிறது. டோக்கியோ செல்லும் ஒவ்வொரு அத்லெட்டையும் ஆதரிக்க காத்துக்கொண்டிருக்கிறோம்” என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2012-ம் ஆண்டுவரை ஆண்கள் பிரிவில் கலந்துகொண்டுவந்த ஹப்பார்ட், 2015-ல் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் செயல்படுத்திய மாற்றங்களுக்குப் பிறகு பெண்கள் பிரிவில் கலந்துகொள்ளமுடிந்தது. சில வருடங்கள் முன்பு இதுகுறித்துப் பேசிய அவர், “10 வருடங்களுக்கு முன்பு என்னைப் போன்ற ஒரு அத்லெட்டை இந்த உலகம் ஏற்றுக்கொண்டிருக்காது. ஏன் இப்போதுமேகூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், குறைந்தபட்சம் இந்த முக்கியமான போட்டிகளில் பங்கேற்க என்னைப் பரிசீலிக்கிறார்கள். அதனால், இந்த மேடையை பயன்படுத்திக்கொள்ள இது சரியான சமயம்” என்று கூறினார்.

அவரைப் போன்ற அத்லெட்டை விளையாட்டு உலகம் இன்றும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை என ஹப்பார்ட் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. இவர் பெண்கள் பிரிவில் கலந்துகொள்வதன் மூலம் அது பெண்களுக்குப் பாதகமாக அமைவதாக வாதங்கள் கிளம்பியிருக்கின்றன. தொடர்ந்து பலரும் அவர் பெண்கள் பிரிவில் பங்கேற்பதை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

2018 காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்றபோதே ஆஸ்திரேலிய பளுதூக்குதல் சங்கம் அவர் பங்கேற்றது குறித்து புகார் தெரிவித்திருந்தது. “எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு ஆண்” என்று வெளிப்படையாகவே கூறினார் சமோவா பிரதமர் டுலீபா. அரசியல் ஆதாயங்களுக்காக பெண்களுக்கான சமத்துவம் பறிக்கப்படுகிறது என்ற வாதம் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகிறது.

நியூசிலாந்து பளுதூக்குதல் வீராங்கனைகள் இதுகுறித்துப் பேசவிடாமல் தடுக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார் 2014 காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற டிரேஸி லாம்பிரெக்ஸ். “இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதன்மூலம் சில பெண்கள் வாய்ப்பை இழப்பதை நினைத்து வருந்துகிறேன். எப்போதும் விளையாட்டில் பெண்களுக்கான சமவாய்ப்புகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது அந்த சமத்துவம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. பல பெண் அத்லெட்கள் என்னிடம் வந்து, ‘என்ன செய்வது... இது சரியே அல்ல!’ என்று வருந்துகிறார்கள். ஆனால், என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு முறை குரல் எழுப்பும்போதும் எங்களை அமைதியாக இருக்கச்சொல்லிவிடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

என்னதான் விளையாட்டு உலகம் பல மாற்றங்கள் கண்டுவந்தாலும், செமன்யா, ஹப்பார்ட் போன்றவர்கள் இன்னும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்கள் சுதந்திரமாக போட்டிகளில் பங்கேற்க இன்னும் சிலபல ஆண்டுகள் ஆகலாம். உலகமே கொண்டாடும் நியூஸிலாந்தும்கூட இன்னும் சமத்துவத்தை வேறு மாதிரிதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாம் இன்னும் பல மைல் தூரம் போகவேண்டியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு