Published:Updated:

Commonwealth Games: நாடுகளுக்கிடையே நல்லுறவு - காமன்வெல்த் போட்டிகள் உருவான வரலாறு தெரியுமா?

Commonwealth Games

பொதுவாகவே காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வது வழக்கம். இந்த காமன்வெல்த் போட்டிகள் உருவான வரலாறு என்ன? இந்தப் போட்டிகள் எப்படியெல்லாம் உருமாற்றம் அடைந்தன? ஒரு குட்டி ரீவைண்டு!

Commonwealth Games: நாடுகளுக்கிடையே நல்லுறவு - காமன்வெல்த் போட்டிகள் உருவான வரலாறு தெரியுமா?

பொதுவாகவே காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வது வழக்கம். இந்த காமன்வெல்த் போட்டிகள் உருவான வரலாறு என்ன? இந்தப் போட்டிகள் எப்படியெல்லாம் உருமாற்றம் அடைந்தன? ஒரு குட்டி ரீவைண்டு!

Published:Updated:
Commonwealth Games
பிரிட்டனைச் சேர்ந்த ரெவரண்ட் அஸ்ட்லி கூப்பர் 1891-ம் ஆண்டு `தி டைம்ஸ்' நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில், பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்த நாடுகளுக்கிடையே நல்லுறவும் புரிதலும் ஏற்பட வேண்டும் என்றால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை Pan-Britannic-Pan-Anglican போட்டிகளைப் பெரிய திருவிழாவாக நடத்த வேண்டும் என்று அவர் அரசுக்கு ஆலோசனை கொடுத்திருந்தார். ஆனால், அதற்குள் முதல் ஒலிம்பிக் போட்டிகள் 1896-ல் தொடங்கியதால் `Empire Games' என்ற யோசனையை அப்போதே செயல்படுத்த முடியாமல் போனது.
Commonwealth Games
Commonwealth Games

பின்னர், 1911-ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவைக் கொண்டாட 'Festival of Empire' என்ற மிகப்பெரிய திருவிழாவை நடத்தியது பிரிட்டிஷ் அரசு. அதன் ஒரு பகுதியாக 'Inter Empire Championship' நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக காமன்வெல்த் போட்டி இல்லையென்றாலும் அதன் முன்னோடியாகப் பார்க்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நான்கு நாடுகள் பங்குபெற்றன. குத்துச்சண்டை, மல்யுத்தம், நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றனர். இந்தத் தொடரை வெல்லும் நாட்டுக்கு ஒரு பிரமாண்ட கோப்பையை வழங்குவதாக அறிவித்தார் லார்ட் லான்ஸ்டேல். சுமார் 10 கிலோ எடை, இரண்டரை அடி உயரம் கொண்ட இந்தக் கோப்பையை ஒரேயொரு புள்ளி வித்தியாசத்தில் கனடா கைப்பற்றியது. அப்போது இது பெரிய விஷயமாகப் பேசப்பட்டாலும் அதன்பின் அதுபோன்று எந்தப் போட்டிகளும் நடத்தப்படாமலேயே இருந்தன.

பத்திரிகையாளரும் கனடா ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினருமான எம்.எம்.பாபி ராபின்சன்தான் மீண்டும் காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னெடுப்பை 1928-ம் ஆண்டு தொடங்கினார். பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி கனடாவில் இருக்கும் ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கலாம் என்ற யோசனையைக் கூறினார். இதற்கான தீவிர முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

Commonwealth Games
Commonwealth Games
Miles Willis

அதன் விளைவாக, 1930-ம் ஆண்டு ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவு செய்து ஆகஸ்ட் மாதமே எல்லா ஏற்பாடுகளையும் செய்து அசத்தியது கனடா. முதல் காமன்வெல்த் போட்டிகளில் வெறும் 11 நாடுகளே பங்கேற்றன. அவை ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, பெர்முடா, பிரிட்டிஷ் கயானா, கனடா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, நியூ ஃபவுன்ட்லேண்ட், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வேல்ஸ். அன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடுவில், 1942 மற்றும் 1946-ல் மட்டும் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. இந்தியா முதல்முறையாக 1934-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றது. 1930, 1950, 1962, 1986 ஆகிய நான்கு காமன்வெல்த் போட்டிகள் தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் இந்தியா பங்குபெற்றுள்ளது.

அதேபோல் காமன்வெல்த் போட்டிகள் பெயரளவிலும் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. 1930-1950-ல் 'British Empire Games' என்று அழைக்கப்பட்டது. 1954-1966-ல் 'British Empire and Commonwealth Games' என்று அழைக்கப்பட்டது. 1970-1974-ல் 'British Commonwealth Games' என்று அழைக்கப்பட்டது. இறுதியாக 1978-ம் ஆண்டில்தான் இந்தத் தொடருக்கு 'Commonwealth Games' என்ற பெயர் வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 1958-ல் பனிப்பிரதேச விளையாட்டுகளுக்கு 'Commonwealth Winter Games', 1962-ல் மாற்றுத்திறனாளிகளுக்கு Paraplegic போட்டிகள், 2000-ல் 14-18 வயதில் இருப்பவர்களுக்கு 'Commonwealth Youth Games' என்று பல்வேறு வித்தியாசமான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அனைத்துமே சில ஆண்டுகள் நடந்து பின்பு நிறுத்தப்பட்டன.

இது இல்லாமல், காமன்வெல்த் போட்டிகளுக்கென சில வரலாற்றுப் பழக்கங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று 'Queen's Baton Relay'. இந்த கோலானது காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும் முன்னே உலகம் முழுவதும் சென்று வரும். கோலின் பயணம் தொடங்கும் இடம் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் மாளிகை. இந்தக் கோலில் காமன்வெலத் தலைவரின் குறுஞ்செய்தி இடம்பெற்று இருக்கும். கோல் உலகம் முழுதும் சுற்றி வந்த பின் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியால் அதில் இருக்கும் குறுஞ்செய்தி சத்தமாக வாசிக்கப்பட்டு காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும். இதுவே வழக்கம். 1930-ல் அரசர் ஐந்தாம் ஜார்ஜில் தொடங்கிய இந்த வழக்கம் இன்று இரண்டாம் எலிசபெத் வரை தொடர்கிறது.

பல ஆண்டுகளுக்கு, டீம் ஸ்போர்ட்ஸ் (குழு விளையாட்டுகள்) எதுவுமே காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறாமலேயே இருந்தன. முதல்முறையாக 1998-ம் ஆண்டுதான் ஒருநாள் கிரிக்கெட், ஹாக்கி, நெட்பால், ரக்பி ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இன்றும் ஹாக்கி, நெட்பால் மற்றும் ரக்பி காமன்வெலத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அதன் பின் 2002-ம் ஆண்டு மான்சஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளும் ஒரே தொடராகச் சேர்க்கப்பட்டன. 2006-ல் கூடைப்பந்து, 2010-ல் டென்னிஸ் மற்றும் பெண்கள் மல்யுத்தம், 2018-ல் பீச் வாலிபால் என்று புது விளையாட்டுகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன. 2018 கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் முதல்முறையாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பதக்கங்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும் வகையில் போட்டிகள் நடந்தன.

Commonwealth Games
Commonwealth Games

இன்று தொடங்கும் பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் மொத்தம் 280 போட்டிகள் நடக்கவிருக்கின்றன. பெண்கள் டி20 கிரிக்கெட்டும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. வில்வித்தையைச் சேர்க்கக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. ஒரு முன்னோட்டமாக Dota, e-football, Rocket league போன்ற ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அவற்றுக்குப் பதக்கங்கள் இருக்காது. வருங்காலத்தில் இதுபோன்ற ஈ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளைச் சேர்க்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த காமன்வெல்த் போட்டிகளை இந்தக் காரணத்துக்காகக் கூர்ந்து கவனிக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான பாஸ்கெட்பால், டேபிள் டென்னிஸும் இம்முறை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பொதுவாகவே காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வது வழக்கம். இதுவரை நடந்த அனைத்து காமன்வெல்த் போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 181 தங்கப்பதக்கங்களை வென்று நாலாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதல் இடத்தில் 932 தங்கப்பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இருக்கிறது. 2010 டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது இந்தியா. மீண்டும் காமன்வெல்த் போட்டிகளில் வரலாறு படைக்குமா இந்தியா? பொறுத்திருந்து பார்ப்போம்!