Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக்கில் கேரள நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்… 'பொறாமை' ஸ்டேட்டஸ் போட்ட ஆனந்த் மஹிந்திரா!

சஜன் பிரகாஷ்
சஜன் பிரகாஷ்

கேரள மாநிலத்தை சேர்ந்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் கடந்த சனிக்கிழமையன்று இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற Setti Colli நீச்சல் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கின்றன.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்ட விளையாட்டு வீரர்கள், இந்த பேரிடர் காலத்திலும் விடா முயற்சியை கைவிடாமல் தீவரமாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரையில் பங்கேற்ற விளையாட்டுகள் தவிர்த்து புதிதாக சிலவற்றில் முதல் முறையாக தகுதி பெற்றிருக்கிறார்கள். பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பும் இம்முறை பிரகாசமாக இருக்கிறது.

இதில் மற்றுமொரு நற்செய்தியாக கேரள மாநிலத்தை சேர்ந்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் கடந்த சனிக்கிழமையன்று இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற Setti Colli நீச்சல் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான 200 மீட்டர் Butterfly Stroke பிரிவில் கலந்து கொண்ட சஜன் 1.56.38 என்ற நேரத்தில் எல்லைக் கோட்டைத் தொட்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் புதியதொரு தேசிய சாதனையும் படைத்துள்ளார். கேரள காவல் துறையில் பணிபுரிந்து வரும் இவர் சென்ற முறை ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று இருந்தாலும் இம்முறையே நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

சஜன் பிரகாஷ்
சஜன் பிரகாஷ்

டோக்கியோ செல்லவிருக்கும் சஜனுக்கு இணையம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ள நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்ராவின் கருத்து தனி கவனத்தை பெற்றுள்ளது. பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக் பிரிவில் சஜன் தகுதி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. “ உங்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. சிறுவயதில் இருந்தே நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் எனக்கு பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக்கின் நேர்த்தி மட்டும் இன்னும் கைகூடவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ‘’நீச்சல் போன்ற ஒலிம்பிக்கின் மிக முக்கிய விளையாட்டுகளில் நேரடியாகத் தகுதி பெறுவது இந்திய விளையாட்டில் துறையில் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கம்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் பேரலையாய் எழும்பி பதக்கங்கள் வென்றுவர வாழ்த்துகள் சஜன்!

அடுத்த கட்டுரைக்கு