தொடர்கள்
சினிமா
Published:Updated:

தோனி ரொம்ப ஸ்வீட்!

 வ்ரீத்யா அரவிந்த் - கார்த்திக் மெய்யப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
வ்ரீத்யா அரவிந்த் - கார்த்திக் மெய்யப்பன்

உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுப்பேன் என்று கனவுகூட கண்டதில்லை. டெஸ்ட் விளையாடும் நாடான இலங்கைக்கு எதிராக இது நடந்தது ரொம்பப் பெரிய விஷயம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களில் தமிழ்க்குரல் கேட்பது அபூர்வம். அஷ்வினும் தினேஷ் கார்த்திக்கும் இந்தியாவுக்காக அதைச் செய்ய, ஐக்கிய அரபு அமீரக அணியில் இரண்டு தமிழர்கள் இதேபோல காம்பினேஷனில் இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் எடுத்த கார்த்திக் மெய்யப்பன் மற்றும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் வ்ரீத்யா அரவிந்த் ஆகியோரே அவர்கள். இந்த இருவரிடமும் பேசினேன்.

முதலில் கார்த்திக் மெய்யப்பன். ‘‘சென்னையில் பசங்களோடு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடியிருக்கேன். அதுதான் ஆரம்பம். அதன்பின் லக்ஷ்மி நாராயணன், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் மற்றும் வெங்கட்ரமணா ஆகிய மூவரிடமும் பயிற்சி எடுத்தேன். பௌலிங்கின் அடிப்படை விஷயங்களை அப்படித்தான் கற்றுக்கொண்டேன். 2017-ல் அப்பாவின் வேலை காரணமாக துபாய்க்கு வந்தோம். இங்கு கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

நான்கு மாதங்களுக்கு முன்பு எங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராபின் சிங்குடன் சென்னைக்குப் பயிற்சிக்காக வந்திருந்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்.

தோனி ரொம்ப ஸ்வீட்!

இந்த உலகக்கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் அடுத்த சுற்றுக்குப் போகும் வாய்ப்பை இழந்தோம். கடைசிப் போட்டியை வெற்றியுடன் முடித்தோம். கடைசியாக ஐக்கிய அரபு அமீரகம் 1996-ல் தான் உலகக்கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் தற்போது டி20 உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சியான தருணம். நிறைய பேர் இங்கு கிரிக்கெட் விளையாடத் தொடங்கி வேறு நாட்டுக்குச் செல்வது வழக்கம். சிலர்தான் தொடர்ந்து இங்கு விளையாடுகிறோம். இது போன்ற வெற்றிகள்தான் மற்றவர்களையும் தொடர்ந்து இங்கு விளையாட வைக்கும்'' என்கிற கார்த்திக், தான் ஹாட்ரிக் சாதனை படைத்த தருணம் குறித்து சிலிர்ப்புடன் பேசுகிறார்.

``உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுப்பேன் என்று கனவுகூட கண்டதில்லை. டெஸ்ட் விளையாடும் நாடான இலங்கைக்கு எதிராக இது நடந்தது ரொம்பப் பெரிய விஷயம். இந்த சாதனையை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். தமிழ் பேசும் விக்கெட் கீப்பர் வ்ரீத்யா அரவிந்த் இருப்பது எனக்கு உதவியாக இருக்கிறது. நாங்கள் எப்போதும் தமிழில்தான் பேசுவோம். என்ன பந்து போடுவது என்று பேசி முடிவு செய்வோம். நம்ம தாய்மொழியிலேயே பேசுவது என்பது தனி உணர்வு. அதுமட்டுமன்றி, நாங்கள் பேசுவது பேட்ஸ்மேன்களுக்குப் புரியாது. இது களத்தில் ஒரு நல்ல விஷயம்'' என்கிறார்.

கார்த்திக் மெய்யப்பன்
கார்த்திக் மெய்யப்பன்

2020-ல் துபாயில் ஐ.பி.எல் நடந்தபோது ஆர்.சி.பி அணியில் நெட் பௌலராக இருந்திருக்கிறார் கார்த்திக். ‘‘முதல்முறையாக ஒரு பெரிய அணியுடன் இருந்தது அப்போதுதான். வளர்ந்து வரும் என்னைப் போன்ற வீரர்களுக்கு நிறைய கற்றுக்கொள்வதற்கான பெரிய வாய்ப்பு. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடுவதை மிக அருகில் பார்க்க முடிந்தது. அவர்களிடம் எளிதாகப் பேசவும் முடிந்தது. சி.எஸ்.கே அணிக்கு நெட் பௌலராக இருந்தபோது தோனியிடம் பேசியது மறக்க முடியாத தருணம். அயர்லாந்து தொடர் நடக்கவிருந்த நேரம் அது. அந்தத் தொடரை எப்படி அணுகலாம் என்று அவரிடம் கேட்டேன். தோனி ரொம்ப ஸ்வீட்... ரொம்ப நல்லா பேசினாரு'' என்கிற கார்த்திக்கின் இன்ஸ்பிரேஷன் ஷேன் வார்னே.

‘‘அவருடைய மண்ணில் தற்போது ஹாட்ரிக் எடுத்தது என் வாழ்வில் சிறப்பான தருணம். சமீபகாலமாக இலங்கை அணியின் ஹசரங்காவைப் பின்தொடர்ந்து வருகிறேன். அவருடைய பௌலிங்கும் என்னுடைய பௌலிங்கும் ஒரே மாதிரி இருக்கும். இந்த உலகக்கோப்பையில் அவரிடம் லெக் ஸ்பின் குறித்து நிறைய பேசினேன். ஐக்கிய அரபு அமீரகத்தை ஒரு டெஸ்ட் விளையாடும் அணியாக மாற்ற வேண்டும். ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்களில் உலகம் முழுதும் சென்று விளையாட வேண்டும். இதெல்லாம்தான் என் கனவுகள்'' என்று சிரிக்கிறார் கார்த்திக்.

ஐக்கிய அரபு அமீரக அணியின் விக்கெட் கீப்பர் வ்ரீத்யா அரவிந்தின் சொந்த ஊர் சென்னை. ‘‘அப்பா மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர். இந்தியா வென்ற 2011 உலகக்கோப்பை... எல்லோரும் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியை ரசித்துக்கொண்டிருந்தோம். போட்டி முடிந்ததும் வீதிக்கு வந்து வெற்றியைக் கொண்டாடினோம். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு அன்றுதான் வந்தது. அப்பாவால் இங்கு வந்தேன். ஆரம்பத்தில் நான் பேட்டிங் மற்றும் பௌலிங்தான் செய்துகொண்டிருந்தேன். ஒருமுறை U13 அணியில் விளையாடும்போது அதில் கீப்பர் இல்லை. அப்போது கீப்பிங் பண்ணத் தொடங்கி முழு நேர கீப்பராக மாறிவிட்டேன்.

உலகக்கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடியதை மாபெரும் வளர்ச்சியாகப் பார்க்கிறேன். இளம் வீரர்களைக் கொண்டு உலகக்கோப்பைக்குத் தகுதிபெற்று விளையாடுவது ரொம்பப் பெரிய விஷயம். தொடர்ந்து எங்களிடமிருந்து சிறப்பான விளையாட்டைப் பார்ப்பீர்கள்'' என்கிறார்.

 வ்ரீத்யா அரவிந்த்
வ்ரீத்யா அரவிந்த்

‘‘ஐக்கிய அரபு அமீரக மக்கள் பெரிதாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இங்கு இடம்பெயர்ந்தவர்களே ஆடுகிறோம். அப்படி இருந்துமே கிரிக்கெட்தான் இங்கு இரண்டாவது பிரபலமான விளையாட்டு. இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையில் விளையாடி இருப்பது நிச்சயம் இங்கு கிரிக்கெட்டை வளர்க்கும். எங்கள் தலைமுறைக்கு இதில் நிறைய பொறுப்பு உண்டு'' என்று அக்கறையுடன் பேசுகிறார் வ்ரீத்யா.

கார்த்திக்கும் இவரும் நீண்ட கால நண்பர்கள். ‘‘ஒன்றாக கிரிக்கெட் விளையாடத் தொடங்குவற்கு முன்பே எங்களின் குடும்பங்களுக்கு இடையே நல்ல உறவு இருந்தது. U17, U18 அணிகளுக்கு விளையாடும்போதே ஒரே அறையில் தங்குவோம். அப்போது இருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள். கார்த்திக்கின் ஹாட்ரிக்கைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. வார்த்தையில் சொல்ல முடியாத அந்தத் தருணத்தைக் கடைசி வரை நான் மறக்கமாட்டேன். எங்கள் அணிக்குக் கிடைத்த சிறந்த பௌலர்களில் ஒருவன் கார்த்திக். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹாட்ரிக் எடுத்தது அவன் உழைப்பிற்குக் கிடைத்த பயன்'' என்கிற வ்ரீத்யாவுக்குப் பிடித்த வீரர் விராட் கோலி.

‘‘நாங்கள் இருவருமே ஒரே பொசிஷனில் விளையாடுவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம். தனிப்பட்ட வாழ்விலும் கோலி எனக்கு இன்ஸ்பிரேஷன். நிறைய உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாட வேண்டும். அடுத்த முறை சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும். ஒருநாள் உலகக்கோப்பைக்கும் தகுதி பெற வேண்டும். எல்லாவற்றையும்விட டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்'' என்று கனவுகளை அடுக்குகிறார் வ்ரீத்யா.

கனவுகள் வசப்படட்டும்!