சினிமா
தொடர்கள்
Published:Updated:

பகுதிநேர வேலைகள் செய்து பதக்கம் வென்றவர்!

ரோசி மீனா பால்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரோசி மீனா பால்ராஜ்

தஞ்சாவூரில் போல் வால்ட் விளையாடுவதற்கான வசதிகள் எதுவும் கிடையாது. பயிற்சியாளர்களும் கிடையாது. மக்களுக்கு இந்த விளையாட்டைப் பற்றியும் தெரியாது.

குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில், போல் வால்ட் விளையாட்டில் தங்கப்பதக்கத்துடன் புது தேசிய சாதனையைப் படைத்துள்ளார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரோசி மீனா பால்ராஜ். அவர் தேசிய சாதனைக்காகக் களத்தில் தாண்டிய உயரம் 4.20 மீட்டர். ‘‘எட்டு வருடங்களாக யாரும் முறியடிக்காத தேசிய சாதனையை முறியடித்தது ஒரு குட்டி சந்தோஷம். தேசிய சாதனை நான் ரொம்ப நாள்களாக எதிர்பார்த்த ஒன்று. இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு 4.50 மீட்டர் உயரத்தைத் தாண்ட வேண்டும் என்ற எண்ணமே பெரிதாய் இருக்கிறது'' என்று பேசத் தொடங்கினார் ரோசி.

‘‘எப்போது போல் வால்ட் மீது ஆர்வம் வந்தது?’’

‘‘எனக்குச் சின்ன வயதிலிருந்தே போல் வால்ட் விளையாட ஆசை இருந்தது. இதற்குமுன் ஈட்டி எறிதல் விளையாட முயன்றேன். அது நன்றாக வந்தது. மதுரையில்தான் ஈட்டி எறிதல் பயிற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், போல் வால்ட் மீதான ஆசை குறையவே இல்லை. அதனால் 2019-ல் சென்னை வந்து போல் வால்ட் விளையாடத் தொடங்கிவிட்டேன். அப்போது முதலே பல போட்டிகளில் பங்கேற்று நிறைய பதக்கங்களை வென்றுள்ளேன்.’’

பகுதிநேர வேலைகள் செய்து பதக்கம் வென்றவர்!
பகுதிநேர வேலைகள் செய்து பதக்கம் வென்றவர்!

‘‘போல் வால்ட் விளையாடுவதற்கு நிறைய வசதிகள் தேவைப்படும். அதையெல்லாம் பெற முடிந்ததா?’’

‘‘தஞ்சாவூரில் போல் வால்ட் விளையாடுவதற்கான வசதிகள் எதுவும் கிடையாது. பயிற்சியாளர்களும் கிடையாது. மக்களுக்கு இந்த விளையாட்டைப் பற்றியும் தெரியாது. ஏதாவது ஒரு உதாரணம் சொல்லியே போல் வால்ட்டைப் புரிய வைக்கக்கூடிய நிலைமைதான் இருந்தது. அங்கு வசதி இருந்திருந்தால் நிச்சயம் சின்ன வயதிலேயே விளையாடத் தொடங்கிருப்பேன். 23 வயதில்தான் சென்னை வந்து விளையாட ஆரம்பித்தேன். எனக்குப் பொதுவாகவே விளையாட்டு ஆர்வம் அதிகம். அதனால்தான் சூழ்நிலைக்கேற்ப கிடைத்த வசதிகளை வைத்து விளையாட முடிந்த விளையாட்டுகளை விளையாடி வந்தேன். ஒரு கட்டத்தில் எந்தெந்த விளையாட்டுகளுக்கு எங்கெங்கு வசதிகள் உள்ளன, போட்டிகள் நடக்கின்றன என்பதை யெல்லாம் அறிந்து கொண்டேன். அதன்பின் நானே கிளம்பி அங்கெல்லாம் செல்ல ஆரம்பித்தேன்.''

பகுதிநேர வேலைகள் செய்து பதக்கம் வென்றவர்!

‘‘இந்தப் பயணம் உங்களுக்கு எளிதாக இருந்ததா?’’

‘‘எனக்கு வேலையில் இல்லாதது பொருளாதாரரீதியாக ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. போல் வால்ட் விளையாடப் பயன்படுத்தும் போல்-ஐ இன்றுவரை என்னால் சொந்தமாக வாங்க முடியவில்லை. பயிற்சியாளரின் ‘போல்’தான் பயன்படுத்தி வருகிறேன். இதன் விலை மட்டும் சுமார் ஒரு லட்சம் வரை வரும். சரியான போல் இல்லாத காரணத்தினால் போட்டியில் ஜெயிக்க முடியாத சூழ்நிலையெல்லாம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சென்னையில் விலைவாசி அதிகம். இங்கு தங்கி அதைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். பகுதிநேர வேலைகள் செய்தும், ஃபிட்னெஸ் பயிற்சியாளராகப் பணிபுரிந்தும் தான் பணக்கஷ்டங்களைச் சமாளித்தேன்.’’

‘‘உங்கள் பயிற்சியாளர் பற்றிச் சொல்லுங்கள்?’’

‘‘அவர் பெயர் மெல்பர். இதற்கு முன் ஃபிட்னெஸ் பயிற்சியாளராக இருந்தார். தற்போது நேரு மைதானத்தில் ஸ்கைவால்ட் அகாடமி நடத்திவருகிறார். ஜூனியர் பிரிவு முதல் சீனியர் பிரிவு வரை நிறைய சிறந்த வீரர்கள் இங்கிருந்துதான் உருவாகிறார்கள். காலை, மாலை என இரு நேரங்களிலும் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதால் தன் வேலையையே விட்டுவிட்டார். மேலும் தேசிய விளையாட்டுத் தொடருக்கு மூன்று மாதங்களாக முழுக்கவனத்துடன் பயிற்சியளித்தார். நாங்கள் எதிர்பார்த்ததைச் செயல்படுத்த முடிந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.’’

பகுதிநேர வேலைகள் செய்து பதக்கம் வென்றவர்!

‘‘எதிர்காலத்தில் ரோசி மீனா பால்ராஜ் யாராக இருப்பார்?’’

‘‘ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என் பெரிய கனவு. இப்போது 2023-ல் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் ஜெயிப்பதே அடுத்த இலக்கு. அதற்காகத் தொடர்ந்து பயிற்சி செய்துவருகிறேன்!’’