Published:Updated:

`கபடி வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு!’ – உலக சாம்பியன் கோரிக்கை

குருசுந்தரி
News
குருசுந்தரி

"என் உறவினர்கள், `பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணு' எனப் பெற்றோருக்கு அறிவுரை செய்தனர். உலகக் கோப்பை வென்றபிறகு ஊருக்குள் வரும்போது கெத்தாக இருந்தது."

Published:Updated:

`கபடி வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு!’ – உலக சாம்பியன் கோரிக்கை

"என் உறவினர்கள், `பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணு' எனப் பெற்றோருக்கு அறிவுரை செய்தனர். உலகக் கோப்பை வென்றபிறகு ஊருக்குள் வரும்போது கெத்தாக இருந்தது."

குருசுந்தரி
News
குருசுந்தரி

மலேசியாவில் நடைபெற்ற மகளிர்க்கான சர்வதேச கபடி உலகக் கோப்பையில், இந்திய அணியின் வெற்றிக்காக உழைத்து வெற்றியுடன் திரும்பியிருக்கிறார் குருசுந்தரி. தமிழக வனத்துறையில் பயிற்சி வனக்காப்பாளராகப் பணியாற்றி வரும் குருசுந்தரியிடம் பேசினோம்.

"மதுரை ஜெய்ஹிந்த் புரம்தான் எங்கள் பகுதி. அப்பா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். அம்மா இல்லத்தரசி. வீட்டில் மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். என் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நான் மாநகராட்சிப் பள்ளியில் படித்தேன்.

படிக்கும்போது விளையாட்டாக கபடி விளையாடத் தொடங்கினேன். நிறைய போட்டிகளில் கலந்துகொண்டேன். அப்போது, ஒரு முறை தங்கப்பதக்கம் வென்றேன். அது படிப்படியாக உலகக் கோப்பைக்கு இழுத்துவிட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை" என, இன்ட்ரோ கொடுத்தார்.

குருசுந்தரி
குருசுந்தரி

"பள்ளியில் நாங்கள் சிறப்பாக கபடி விளையாடியதைப் பார்த்து, என்னுடைய பயிற்சியாளர்கள், எங்கள் அணியை அப்படியே கல்லூரியில் சேர்த்துவிட்டனர். தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டே, போட்டிகளில் விளையாடினோம்.

கபடி விளையாடும்போது கை, கால் என்று பல பகுதிகளில் கடுமையாக அடிபடும். சமயத்தில் உட்காரவோ, தூங்கவோகூட முடியாது. அதை எல்லாம் வீட்டில் சொல்ல மாட்டேன். ஹாஸ்டல் யே தங்கிவிடுவேன். அந்த வலிகளுடன்தான் பயிற்சி செய்தேன். மதுரையில் ஆசிய கபடி போட்டி நடந்தது. அதை நேரில் பார்த்தேன். அப்போதிருந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற வெறி அதிகமாகிவிட்டது. இந்திய அணி ஜெர்ஸியுடன் ஒரு போட்டியாவது விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

குருசுந்தரி
குருசுந்தரி

நான் எம்.பில் தமிழ் முடித்துள்ளேன். ஆரம்பத்தில் என் வீட்டிலும் கபடிக்கு க்ரீன் சிக்னல்தான். தேசிய போட்டிகள் வரை விளையாடினோம். தமிழக கபடி அணிக்கு கேப்டனாக இருந்தேன். ஆனால், படிப்பு முடிந்து வேலை கிடைக்காமல், பயிற்சி மேற்கொள்ளும்போதுதான் சங்கடமாக இருந்தது. ஒருபக்கம் குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை.

மறுபக்கம் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் கபடி பயிற்சி செய்ய முடியாத நிலை. அப்போது பயிற்சியாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். இந்திய அணியில் இடம் பெறுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

இந்திய கபடி அணி
இந்திய கபடி அணி

ஆசிய சாம்பியன்ஷிப்பில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். ஆனால், அப்போது இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இதனிடையே, வனத்துறையில் பணி கிடைத்தது. பயிற்சிக்கு, வனத்துறையினர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஹரியானாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் கலந்துகொண்டு, இந்திய அணிக்கு தேர்வானேன். கிட்டத்தட்ட என் 15 ஆண்டுக்கால கனவு நிறைவேறும் தருணம்.

அந்த நேரத்தில்தான், நான் இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்று ஆசையோடு இருந்த என் பயிற்சியாளர் ஜனா திடீரென இறந்துவிட்டார். எவ்வளவோ கடினமான சூழ்நிலைகளில் கூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், இந்தச் சூழ்நிலையில் என்னால் எளிதாகப் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை" என்று கண் கலங்கினார்.

குரு சுந்தரியின் பயிற்சியாளர்கள்
குரு சுந்தரியின் பயிற்சியாளர்கள்

அவரை ஆசுவாசப்படுத்தி, இந்திய அணிக்கு விளையாடிய அனுபவம் குறித்து பேசினோம். "இந்தியா என்ற ஜெர்ஸி அணிந்து விளையாட வேண்டும் என்பது என்15 ஆண்டுக்கால கனவு. அந்த நொடி வாழ்வில் என்னால் மறக்கவே முடியாது. போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்ந்தேன்.

உலகக் கோப்பையில் எனக்குக் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை என்றாலும், அரையிறுதியில் விளையாடியது நிறைவைத் தருகிறது. உலகக் கோப்பை வென்ற அந்தத் தருணத்தையும் என்னால் மறக்கவே முடியாது.

இந்திய கபடி அணி
இந்திய கபடி அணி

வாய்ப்பு கிடைப்பதற்கு முன் என் உறவினர்கள், 'பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணு' எனப் பெற்றோருக்கு அறிவுரை செய்தனர். உலகக் கோப்பை வென்றபிறகு ஊருக்குள் வரும்போது கெத்தாக இருந்தது. போனில் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. பேனர், பிளக்ஸ் எல்லாம் வைக்கிறார்கள்.

அடுத்ததாக, ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும். என்னைப் போல பல பெண்கள் நம் ஊரில் கபடி விளையாடுவார்கள். ஆனால், வேலை வாய்ப்பு என்ற ஒரே காரணம், அவர்கள் கனவைத் தகர்த்துவிடுகிறது. வட இந்தியாவில், கபடி வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கின்றனர்.

குருசுந்தரி
குருசுந்தரி

ஆண்களுக்கு ப்ரோ கபடி இருப்பதைப் போல பெண்களுக்கும், ப்ரோ கபடி கொண்டு வர வேண்டும். முக்கியமாக, நம் ஊரில் பெரும்பாலும் மண் தரையில்தான் கபடி பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. போட்டிகள் நடப்பதோ மேட் தரையில். மண் தரையில் பயிற்சி மேற்கொள்வதால், நிறைய அடிபடுகிறது.

எனவே, பயிற்சிக்கு மேட் தரை அமைத்துத்தர வேண்டும். இவற்றையெல்லாம் செய்து கொடுத்தால், கபடியில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம்மை யாராலும் அசைக்க முடியாது!" என நம்பிக்கையோடு முடித்தார்.