சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஒலிம்பிக் நவரசா!

ஒலிம்பிக் நவரசா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒலிம்பிக் நவரசா!

உ.ஸ்ரீராமநாராயணன்

நீங்கள் கருணையை எதிர்பார்க்கும் நேரத்தில் இந்தச் சமூகம் அருவருப்பு முகத்தைக் காட்டிவிட்டுச் செல்லலாம். ‘ஏதோ அற்புதத்தை நிகழ்த்திவிட்டோம்’ என நீங்கள் உணரும்போது அங்கீகாரத்தைக் கொடுக்காமல் துச்சமெனக் கடந்து செல்லலாம். உணர்வுகளின் குவியலே மனிதர்கள். சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் ஒலிம்பிக்ஸ் வெறுமனே அதன் பிரமாண்டத்திற்காகவும் பதக்கங்களுக்காகவும் மட்டுமே கொண்டாடப்படவில்லை. அங்கே வீரர் / வீராங்கனைகள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திர வெளி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஒலிம்பிக்ஸ் அரங்கில் வெளிப்பட்ட நவரச தருணங்களின் தொகுப்பு இங்கே...

ஒலிம்பிக் நவரசா!
ஒலிம்பிக் நவரசா!
John Locher

அற்புதம்/ஆச்சர்யம்

1948 லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றிருந்தது. இந்தியாவின் கொடி பிரிட்டனின் கொடிக்கு மேல் பறந்தது. சுதந்திர இந்தியாவிற்குக் கிடைத்த முதல் கௌரவம் அது. அந்தக் காலத்தில் வீழ்த்தவே முடியாத அணியாக உச்சத்தைத் தொட்டிருந்தது இந்திய ஹாக்கி அணி. ஒலிம்பிக்கில் மட்டும் 8 தங்கப்பதக்கங்கள். ஆனால், இதெல்லாம் 1980 வரைதான். அதன்பிறகு இந்திய ஹாக்கி அணி சந்தித்ததெல்லாம் வீழ்ச்சி மட்டுமே. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணி தகுதிகூடப் பெறவில்லை. இப்படி மொத்தமாக சொதப்பியிருந்த ஹாக்கி அணி இந்த முறை வீறுகொண்டு எழுந்துள்ளது. 41 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இழந்த பெருமைகளை மீட்டெடுத்துள்ளது. பெண்கள் அணி அதற்கு ஒரு படி மேலே சென்று அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியது. ரியோ ஒலிம்பிக்கில் கடைசி இடத்தைப் பிடித்தார்கள். இந்த முறை மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டு வந்து வெற்றிகளைப் பெற்று நாக் அவுட் சுற்று முன்னேறினார்கள். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோற்றிருந்தாலும் நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியதே தங்கம் வென்றதற்கு சமம். ஹாக்கியில் இந்தியாவின் உயிர்த்தெழுதலை உலகமே அதிசயமாகப் பார்க்கிறது.

ஒலிம்பிக் நவரசா!
John Minchillo

அருவருப்பு

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தோற்ற போது சில ஆதிக்க ஜாதியினர், பட்டியலினத்தைச் சேர்ந்த ஹாக்கி வீராங்கனையான வந்தனா கட்டாரியாவின் வீட்டு முன்பு வெடிவெடித்துக் கொண்டாடினர். ‘பட்டியல் இனத்தினர் அதிகம் இருப்பதாலேயே இந்திய அணி தோற்கிறது’ எனக் கூச்சல் போட்டிருக்கிறார்கள். வந்தனா கட்டாரியாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் ஹாக்கி அரங்கில் இந்திய மகளிர் அணியின் முதல் ஹாட்ரிக் அடித்த ஒரு வீராங்கனைக்கு, தந்தையின் இறுதிச் சடங்குக்குப் போகாமல் பயிற்சி செய்த ஒரு வீராங்கனைக்கு இழைக்கப்பட்ட அநீதி இது.

ஒலிம்பிக் நவரசா!
Aaron Favila

அமைதி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்கள் துள்ளிக் குதிப்பார்கள். ஆர்ப்பரிப்பார்கள். சிலர் ஆனந்தக் கண்ணீர் சிந்துவார்கள். இந்தியாவுக்காக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியா ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கவில்லை. ரொம்பவே அமைதியாக தன்நிலை மாறாமல் இருந்த அவரின் குணம் அனைவரையும் ஈர்த்தது. இத்தனைக்கும் பயங்கரமாகப் போராடியே இறுதிப்போட்டி வரை வந்திருந்தார். அரையிறுதில் கஜகஸ்தான் வீரர் அத்தனை பல்லும் பதியும் அளவுக்கு வலுவாக அவரின் கையில் கடித்திருந்தார். அப்போதுமேகூட அவர் பெரிதாக உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அமைதிக்குப் பெயர்தான் ரவிக்குமார் தாஹியா!

ஒலிம்பிக் நவரசா!

சிரிப்பு

கொரோனாப் பெருந்தொற்றுப் பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றதால் இந்த முறை வீரர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதில் சில சர்ச்சைகளும் எழுந்தன. வீரர்கள் தங்கும் அறையில் கார்ட்போர்டு அட்டைகளினால் ஆன படுக்கை வசதியே செய்யப்பட்டிருந்தது. வீரர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதற்காக ஒருவரின் எடையைத் தாங்குமளவுக்கே இந்தப் படுக்கைகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ‘வீரர்களுக்குப் படுக்கை வசதிகூட சரியாக இல்லை’ என இதனால் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ஒன்றிரண்டு நாளிலேயே இது காமெடியாக மாறிவிட்டது. பல வீரர்களும் கட்டிலில் ஏறிக் குதித்து உடைகிறதா இல்லையா என சோதனை செய்து வீடியோ வெளியிட்டனர். இது பயங்கர வைரலாக அனைவரையும் கவர்ந்தது. இஸ்ரேல் பேஸ்பால் அணி ஒலிம்பிக்கின் கடைசி நாள்களில் கட்டிலில் ஏறிக் குதித்து டிக்டாக் செய்கிறேன் என வெற்றிகரமாக உடைத்து நொறுக்கிவிட்டார்கள்.

ஒலிம்பிக் நவரசா!
Seth Wenig

அச்சம்

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர்... இந்த சீசனின் அத்தனை கிராண்ட் ஸ்லாம்களையும் வென்றவர் ஜோகோவிச். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுவிட்டால் இந்த சீசனை கோல்டன் ஸ்லாம் சீசனாக முடிக்கலாம் என்ற கனவோடு களமிறங்கினார். ஆனால், இந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் மிகப்பெரிய அப்செட்டாக அமைந்தது அவரது தோல்விதான். தன்னைவிடத் தரவரிசையில் கீழே இருக்கும் இரண்டு வீரர்களிடம் தோற்று வெண்கலப் பதக்கம்கூட வெல்லாமல் வெளியேறினார் ஜோகோவிச். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பாப்லோ கரேனோவுடன் ஆடும்போது விரக்தியிலும் தோல்வி அச்சத்திலும் பல முறை ரேக்கட்டைத் தூக்கி வீசியிருப்பார் ஜோகோவிச். போதாக்குறைக்கு கூரையிலிருந்து வந்த வெளிச்சத்தைப் பற்றியும் அடிக்கடி நடுவரிடம் புகார் செய்தார். தோல்வி பயம் அவரை சாக்குச் சொல்லும் குழந்தையைப்போல் மாற்றியிருந்தது.

ஒலிம்பிக் நவரசா!

கோபம்

உடை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது என்பது விளையாட்டுக்குமே பொருந்திப்போகும். ஆனால், சில விளையாட்டுகளில் இன்னமும் இதைப் புரிந்துகொள்ளாத நடைமுறையே இருக்கிறது. சமீபத்தில் யூரோ தொடர் ஒன்றில் பீச் வாலிபால் போட்டியில் நார்வே வீராங்கனைகள் பிகினி உடைக்குப் பதில் ஷார்ட்ஸ் அணிந்து ஆடினர். அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ‘ஆண்கள் உடலை முழுவதுமாக மூடிய உடைகளை அணிந்து ஆடும்போது நாங்கள் மட்டும் பிகினியில் ஆட வேண்டுமா?’ என அழுத்தமான கேள்வியை எழுப்பியிருந்தனர் நார்வே வீராங்கனைகள். இதே குரல் ஒலிம்பிக்கிலும் எழுந்திருந்தது. ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் தங்கள் உடல் முழுவதையும் மூடும் வகையிலான ஆடைகளையே அணிந்திருந்தனர். இதற்கு ஒலிம்பிக் அமைப்பும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆடை சுதந்திரத்திற்கு எதிரான கட்டுப்பாடுகள் உண்டாக்கிய கோபத்தின் வெளிப்பாடே இது. ‘எங்கள் உடையை நாங்கள் முடிவு செய்கிறோம்’ என்பதே பெண்கள் மீண்டும் மீண்டும் உலகிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும் செய்தி.

ஒலிம்பிக் நவரசா!
Natacha Pisarenko

வீரம்

விளையாட்டு வீரர்களின் மனநலம் பற்றி இப்போது அதிகமாக விவாதிக்கப்படுகிறது. மனநலப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசுபவர்களை விநோதமாகப் பார்க்கும் போக்கு உலகமெங்குமே இருக்கிறது. அதனாலேயே பலரும் பேசத் தயங்குகின்றனர். ஆனால், ஒலிம்பிக் களத்திலேயே இதுகுறித்து தைரியமாகப் பேசி இடையிலேயே வெளியேறியிருந்தார் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ். முந்தைய ஒலிம்பிக் தொடர்களில் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கங்களை வென்று குவித்த நிகரில்லா வீராங்கனை இவர். தான் மன அழுத்தத்தில் ரொம்பவே சோர்வாக இருப்பது குறித்துத் துணிச்சலாகப் பேசினார் இவர். ஒலிம்பிக் பதக்கத்திற்காகப் பல நாடுகளும் ஏங்கிக்கொண்டிருக்கும் சூழலில், பதக்க வேட்டை நடத்தும் வாய்ப்பிருந்தும் ஒலிம்பிக் போட்டியையே துறக்க முன்வந்த இந்தத் துணிச்சல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஒலிம்பிக் நவரசா!

கருணை

நிலமற்று அதிகாரமற்று அடையாளமே இல்லாமல் இருப்பவர்கள் அகதிகள். அவர்களைக் கருணை உள்ளத்தோடு அணுகும் நாடுகள் ரொம்பவே குறைவு. ஆனால், ஒலிம்பிக் அவர்களுக்கு அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் அகதிகளுக்கான அணி பங்கேற்றது. கிரீஸ் முதலில் கொடியேந்தி அணிவகுப்பு செய்ய அவர்களுக்குப் பின்னால் இரண்டாவதாகக் கொடியேந்தி கௌரவமாக நடைபோட்டனர் அகதிகள். எல்லைகளில் கோட்டைச் சுவரை எழுப்பிய நாடுகளும், சட்டங்கள் மூலம் விரட்டியடித்த நாடுகளும் அகதிகளுக்கு வழங்கப்பட்ட முதல் மரியாதையை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ‘அகதிகளும் மனிதர்களே. அவர்களையும் உள்ளன்போடு சகமனிதர்களாக மதிப்புடன் நடத்த வேண்டும்’ என ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் தாமஸ் பேச் பேசியுள்ளார். ஒலிம்பிக் காட்டிய இதே கருணையை உலக நாடுகள் அத்தனையும் உணர வேண்டும்.

ஒலிம்பிக் நவரசா!

அன்பு

ஆகஸ்ட் 1, நண்பர்கள் தினத்தில் நெகிழ்ச்சிமிக்க சம்பவம் ஒன்று ஒலிம்பிக்கில் அரங்கேறியது. இத்தாலியைச் சேர்ந்த தம்பேரியும் கத்தாரைச் சேர்ந்த பார்ஷிமும் நெருங்கிய நண்பர்கள். ஜூனியர் லெவல் போட்டிகளிலிலிருந்தே இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இருவரும் பங்கேற்றிருந்தனர். போட்டி டையில் முடிந்தது. முடிவைத் தீர்மானிக்க இருவரும் ஒரு முறை தாண்டலாம் என நடுவர் கூறுகிறார். அதற்கு பார்ஷிம், ‘இரண்டு தங்கங்களுக்கு வாய்ப்பிருக்கிறதா?’ எனக் கேட்க, நடுவரும் ‘அது உங்கள் விருப்பம்’ எனக் கூறிவிட்டார். பார்ஷிம் தம்பேரியை நோக்கினார். தம்பேரி கண்ணைச் சிமிட்டினார். அவ்வளவுதான்... அதன்பின் நடந்ததெல்லாம் முஸ்தபா... முஸ்தபா தருணங்கள். இருவரும் தங்கப்பதக்கத்தைப் பங்கிட்டுக்கொண்டு வரலாறு படைத்தனர்!