Published:Updated:

நம்பிக்கையின் மாஸ்டர்!

வாலிபால்
பிரீமியம் ஸ்டோரி
வாலிபால்

திடீர்னு வீட்டுல கஷ்டம் வந்துருச்சு. மனைவி, ரெண்டு மகன்கள் எனக் குடும்பம் பெருசானதால் துபாய்க்கு வேலைக்குப் போனேன்

நம்பிக்கையின் மாஸ்டர்!

திடீர்னு வீட்டுல கஷ்டம் வந்துருச்சு. மனைவி, ரெண்டு மகன்கள் எனக் குடும்பம் பெருசானதால் துபாய்க்கு வேலைக்குப் போனேன்

Published:Updated:
வாலிபால்
பிரீமியம் ஸ்டோரி
வாலிபால்

“வீல் சேரில் வாழ்க்கை முடங்கிப்போயிருச்சேன்னு நொந்துபோயிருந்த நேரத்தில் உள்ளூர் மாணவர்கள் சிலர் வந்து வாலிபால் பயிற்சி கொடுக்கச் சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதா மாறுச்சு’’ - நம்பிக்கை பொங்கப் பேசுகிறார், வாலிபால் பயிற்சியாளரான ராமசாமி.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருக்கிறது, அத்திவெட்டி கிராமம். காலை மற்றும் மாலை நேரங்களில் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாட்டு களைகட்டுகிறது. விளையாடும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர், 65 வயது ராமசாமி. இடுப்புக்குக் கீழ் செயல் இழந்ததால், வீல் சேரில் வாழ்க்கையை நகர்த்துபவர் அவர் என்பதுதான் ஆச்சர்யம் விதைக்கும் செய்தி.

வாலிபால் மைதானத்தை வீல் சேரில் வலம் வந்து, மாணவர்களுக்கு டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் ராமசாமி. உயரத்திலிருந்து வரும் பந்தை அடிக்கப் பாயும் மாணவனை, ‘கமான்... பிளேஸ் இட்’ என்று சொன்னதும் பந்தைச் சரியான இடத்தில் அடித்து, பயிற்சியாளரிடமிருந்து சபாஷ் வாங்குகிறார் அந்த மாணவர்.

நம்பிக்கையின் மாஸ்டர்!

“எங்க ஊரில் எப்பவுமே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இங்கே இளைஞர்கள் யாரையும் வீடியோ கேம் விளையாடுவதையோ செல்போனில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பதையோ பார்க்க முடியாது. எல்லோருமே ஓய்வு நேரங்களில் விளையாட்டில் ஆர்வமாக இருப்போம். அதுக்குக் காரணம், ராமசாமி அய்யா” என்று பெருமிதத்துடன் தொடங்குகிறார்கள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவர்கள்.

“அவர் வீல் சேரில் அமர்ந்தபடியே எங்களுக்கு வாலிபால் பயிற்சி கொடுப்பார். அவரிடம் பயிற்சி எடுத்துக்கிட்ட நிறைய பேர் ராணுவம், போலீஸ் வேலைக்குப் போயிட்டாங்க. ஒரு காலத்தில் மிகச்சிறந்த வால்பால் வீரராக இருந்த அவரிடம் பயிற்சிபெறுவது எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்” என்கிறார்கள் பெருமிதத்துடன்.

ஊரே கொண்டாடும் ராமசாமி மாஸ்டர் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனது காலத்தின் துயரம். அதுகுறித்துப் பேசும்போதே மாஸ்டருக்குக் குரல் கம்மத்தொடங்குகிறது.

”எங்க அத்திவெட்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு எம்.சி.வீரப்பன்ங்கற வக்கீல் வாலிபால் டீம் உருவாக்கிப் பயிற்சி கொடுத்து மேட்ச் நடத்திவந்தார்.

எனக்கு 12 வயசு இருக்கறப்ப, ஊர் கிரவுண்டுல பேட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்தேன். நான் ஜம்ப் பண்ணி பந்தை அடிக்கிறதைப் பார்த்த வீரப்பன் மாஸ்டர், என்னை வாலிபால் விளையாட்டுக்குக் கூட்டிவந்தார். அவரோட பயிற்சியில் வாலிபால் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். கிரவுண்டில் ஒரு காசைப் போட்டு வச்சிட்டு அந்த இடத்தில் பந்தை அடிக்கச் சொல்வார். நான் ஜம்ப் செய்து உயரத்திலிருந்து வரும் பந்தை அவர் சொன்ன இடத்தில் அடிப்பேன். என் திறமையைப் பார்த்த அவர், என்னையே எங்க ஊர் டீமுக்கான கேப்டனாக அறிவிச்சுட்டார். அதுக்குப் பிறகு திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் என்ற டீமிற்காக விளையாடினேன். தற்போது பேட்மிட்டனில் புகழ்பெற்று விளங்கும் பி.வி.சிந்துவின் அப்பா ரமணராவ் சார்தான் அந்த டீமுக்கு கோச்சாக இருந்தார்.

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் அணிக்காகப் பல மேட்ச்கள்ல ஜெயிச்சோம். இப்ப இந்திய வாலிபால் டீமின் கோச்சாக இருக்கும் ஸ்ரீதரன் சார் கூடவும் விளையாடியிருக்கேன். என்னோட விளையாட்டைப் பார்த்துட்டு நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், காவல்துறைன்னு பல இடங்களில் வேலைக்கான வாய்ப்பு வந்துச்சு. அப்ப குடும்பம் வசதி வாய்ப்பா இருந்ததாலும் கல்யாணம் செஞ்சுட்டதாலும் அந்த வாய்ப்பையெல்லாம் தவிர்த்துட்டேன்.

திடீர்னு வீட்டுல கஷ்டம் வந்துருச்சு. மனைவி, ரெண்டு மகன்கள் எனக் குடும்பம் பெருசானதால் துபாய்க்கு வேலைக்குப் போனேன். சில வருடங்கள் அங்க வேலை செஞ்சுட்டு வந்துட்டேன்.

ஊரில் இருந்தப்ப திடீர்னு எனக்கு நடக்க முடியாமப்போச்சு. சின்ன வயசில், வாலிபால் விளையாடும்போது அடிபட்டதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்காததனால ஏற்பட்ட பிரச்னையால, இடுப்புக்குக் கீழே எலும்புல ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும்னு டாக்டர் சொல்லிட்டார். அதுக்கான வசதி இல்லாததால் சிகிச்சை எடுக்காம விட்டுட்டேன்.சிகிச்சை எடுக்காததால் ஒரு கட்டத்தில் என்னோட கால்கள் சுத்தமா செயலிழந்து போயிடுச்சு. என்னோட நிலைமையை நினைச்சு ரெண்டு வருஷம் வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தேன்.

நம்பிக்கையின் மாஸ்டர்!

அந்தச் சமயத்தில் வீரப்பன் மாஸ்டர் இறந்துட்டதால, பயிற்சி கொடுக்க ஆள் இல்லாமல் எங்க ஊர் மாணவர்கள் கஷ்டப்பட்டார்கள். அதனால், அவர்களை எங்க வீட்டுக்கு முன்பாக வரவழைச்சுப் பயிற்சி கொடுத்தேன். அதில் கிடைச்ச உத்வேகத்தால் கிரவுண்டுக்குச் சென்று பயிற்சி கொடுத்தேன். என்னோட முயற்சிகளுக்கு மனைவி செல்வராணி, மகன்கள் தளபதி அர்ஜுன், முத்துபாரதி ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க.

எங்க ஊர் டீம் கல்லூரி, யுனிவர்சிட்டின்னு பல மேட்ச்ல தொடர்ந்து ஜெயிச்சாங்க. இதுவரை 400 வாலிபால் பிளேயர்களை உருவாக்கியிருக்கேன். போலீஸ், உடற்கல்வி ஆசிரியர்னு பலருக்கு அரசு வேலை கிடைச்சிருக்கு.

உடல்தான் முடங்கிருச்சி. மனசு இன்னும் முடங்கல. இங்க உருவானவங்க நாடு முழுக்கப் பறந்துகிட்டிருக்காங்க. அதையெல்லாம் நினைக்கும்போது என் துயரம் மறைஞ்சுபோயிடும்” என்று சிரிப்பவர், விசிலை பலமாக ஊதுகிறார்.

காற்று சுமந்துசெல்கிறது அந்த நம்பிக்கையின் குரலை!