Published:Updated:

Lawn Bowls: சாதனை படைக்கப்போகும் இந்திய வீராங்கனைகள்! அதுசரி, இந்த லான் பவுல்ஸ் என்றால் என்ன?

Lawn Bowls team ( SAI )

லான் பவுல்ஸ் கேட்பதற்கு வித்தியாசமாகவும் கொஞ்சம் அந்நியமாகவும், கூடுதல் மூளையுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதை போன்ற தோற்றமளிக்கும். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. ரொம்பவே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

Lawn Bowls: சாதனை படைக்கப்போகும் இந்திய வீராங்கனைகள்! அதுசரி, இந்த லான் பவுல்ஸ் என்றால் என்ன?

லான் பவுல்ஸ் கேட்பதற்கு வித்தியாசமாகவும் கொஞ்சம் அந்நியமாகவும், கூடுதல் மூளையுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதை போன்ற தோற்றமளிக்கும். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. ரொம்பவே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

Published:Updated:
Lawn Bowls team ( SAI )

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமென்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இதுவரை பளுதூக்குதல் மற்றும் ஜூடோ போன்ற போட்டிகளில் இந்திய அணி பல பதக்கங்களை வென்றிருக்கிறது. பளுதூக்குதல், ஜூடோ போன்றவையெல்லாம் நாம் நன்கு அறிந்த விளையாட்டுகள். ஆனால், நாம் இதுவரை பெரிதாக அறிந்திடாத ஒரு விளையாட்டு போட்டியிலும் இந்திய அணி இந்த காமென்வெல்த் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.

அந்த விளையாட்டின் பெயர் லான் பவுல்ஸ் (Lawn Bowls). இந்த விளையாட்டில் இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சமாக வெள்ளிப்பதக்கம் உறுதியாகியிருக்கிறது. இதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்தான். ஆயினும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் தங்கத்தை வெல்வார்களா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அவர்களின் வெற்றிக்கு நம்முடைய ஊக்கமுமே தேவைப்படுகிறது. லான் பவுல்ஸை பற்றி அறியாமலேயே அவர்களை ஊக்கப்படுத்திவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. போட்டியை பார்க்கையில் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கும். அதற்காகத்தான் அந்த விளையாட்டைப் பற்றிய ஒரு அறிமுகம் இதோ!

Team India
Team India
Bharath Army

லான் பவுல்ஸ் இந்தப் போட்டி பிரிட்டீஷில் தோன்றி பிரிட்டீஷ் கால்பதித்த இடங்களிலெல்லாம் பரவிய விளையாட்டு. இந்த வகையில்தான் இந்த விளையாட்டு இந்தியாவிற்கும் அறிமுகமாகிறது. 1800களிலிருந்தே கொல்கத்தா போன்ற இந்தியாவின் சில பகுதிகளில் இந்த விளையாட்டு பிரபலமாக இருந்திருக்கிறது. 1930-ல் காமென்வெல்த் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே லான் பவுல்ஸூம் இந்தத் தொடரில் ஆடப்பட்டு வருகிறது. 2010-ல் இந்தியா காமென்வெல்த் போட்டிகளை நடத்தியிருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் அப்போதுதான் இந்திய அணி முதல் முதலாக இந்தப் போட்டியில் பங்கேற்றது. 2010, 2014, 2018 என மூன்று காமென்வெல்த் தொடர்களிலும் இந்திய அணி பங்கேற்றிருந்தாலும் பதக்கம் வெல்லவில்லை. இப்போதுதான் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

லான் பவுல்ஸ் கேட்பதற்கு வித்தியாசமாகவும் கொஞ்சம் அந்நியமாகவும், கூடுதல் மூளையுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதை போன்ற தோற்றமளிக்கும். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. ரொம்பவே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

சிறுவயதில் தெருக்களில் கோலிக்குண்டு ஆடியிருப்போம் அல்லவா? கோலிக்குண்டு ஆட்டதிற்கென்று யூனிவர்சல் விதிமுறைகளெல்லாம் கிடையாது. ஓவ்வொரு ஊருக்கும் தெருவுக்கும் ஏற்றார்போல விதிமுறைகள் மாறுபடும். ஒரு வட்டமிட்டு அதற்கு நடுவே ஒரு பெரிய கோலியை வைத்து கொஞ்ச தூரத்திலிருந்து இந்தப் பெரிய குண்டை நோக்கி கோலிக்குண்டை லாகவமாக உருட்டி வீசுவோம். யாருடைய கோலி அந்த வட்டத்திற்குள் இருக்கும் காய்க்கு அருகே இருக்கிறதோ அவர்கள் முதலில் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

Jack ஐ நெருங்கியிருக்கும் இந்தியாவின் நான்கு நீல நிற பந்துகள்
Jack ஐ நெருங்கியிருக்கும் இந்தியாவின் நான்கு நீல நிற பந்துகள்
Sony
எங்கள் ஏரியாவின் கோலிக்குண்டு ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஒருவித டாஸ் முறையாக இதை புரிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட இதேதான் லான் பவுல்ஸூம்.

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கால்பந்தை விட கொஞ்சம் சிறிதான ஒரு பந்தே லான் பவுல்ஸில் பயன்படுத்தப்படும். இந்தப் பந்துதான் வீரர்கள் கையில் வைத்து உருட்டப்போகும் பந்து. இதை Bowls என அழைப்பார்கள். அதைவிட ஒரு சிறிய பந்தை Jack என அழைப்பார்கள். இந்த Jack-ஐ நாங்கள் வட்டத்திற்குள் வைத்திருந்த பெரிய கோலிக்குண்டாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இங்கே லான் பவுல்ஸில் இந்த Jack-ஐ பொத்தாம் பொதுவாக வட்டமிட்டு அதனுள் வைக்கமாட்டார்கள். மோதும் இரண்டு அணிகளில் ஒரு அணியை சேர்ந்த வீரர் இந்த Jack-ஐ உருட்டிவிடுவார். அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் போய் செட்டில் ஆகி நிற்கும். குறைந்தபட்சமாக இந்த Jack 23மீ-ஐ கடந்திருக்க வேண்டும் என்பது விதி.

Jack செட்டில் ஆகிவிட்டதல்லவா? இனிமேல் அதே கோலிக்குண்டு ஆட்டம்தான். மோதும் இரண்டு அணிகளின் வீரர்களும் வரையறுக்கப்பட்ட தூரத்திலிருந்து கையிலிருக்கும் அந்த Bowls-ஐ Jack-ஐ நோக்கி உருட்டி வீச வேண்டும்.

Lawn Bowls
Lawn Bowls
olympics.com
யாருடைய Bowls, Jack-ற்கு நெருக்கமாக இருக்கிறதோ அவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும். அவ்வளவுதான் லான் பவுல்ஸ்!

இந்த ஆட்டம் ஒருவர், இருவர், மூவர், நால்வர் என விதவிதமாக நடைபெறும். இப்போது இந்த காமென்வெல்த் தொடரில் பெண்கள் பிரிவின் நால்வர் ஆட்டத்தில்தான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

இந்த நால்வர் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளுக்கும் ஒரு ரவுண்ட்டிற்கு தலா இரண்டு Bowls-கள் வழங்கப்படும். அப்படியெனில், ஒரு அணிக்கு ஒரு ரவுண்ட்டில் 8 Bowls-கள் வழங்கப்பட்டிருக்கும். இந்த 8 Bowls-களையும் இரண்டு அணிகளும் உருட்டிவிட வேண்டும். ஒரு ரவுண்ட் முடிகிற சமயத்தில் ஜாக்கை சுற்றி எந்த அணியுடைய பந்துகள் அதிக நெருக்கமாக இருக்கிறதோ அவர்களுக்கு அதற்குத் தகுந்தவாறு புள்ளிகள் வழங்கப்படும்.

அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மோதியிருந்தது. அதில் ஒரு ரவுண்டின் முடிவில் நியுசிலாந்து வீராங்கனைகள் உருட்டியிருந்த பந்துகளை விட இந்திய வீராங்கனைகள் வீசியிருந்த 4 பந்துகள் Jack-ற்கு மிக நெருக்கமாக இருந்தன. ஆக, இந்திய அணிக்கு அந்த ரவுண்டின் முடிவில் 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.

Lawn Bowls
Lawn Bowls

ஒருவேளை எதிரணியை விட 2 பந்துகள் மட்டுமே நெருக்கமாக இருந்திருக்கும்பட்சத்தில் 2 புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். இப்படியாக 15 ரவுண்டுகள் ஆட்டம் நடக்கும். (ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தொடருக்கும் ரவுண்டுகளின் எண்ணிக்கை மாறுபடலாம்) ரவுண்டுகளின் முடிவில் அதிக புள்ளிகளை வென்றிருக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இந்திய அணி அரையிறுதில் 15 ரவுண்டுகள் முடிவில் நியூசிலாந்தை 16-13 என வீழ்த்தியிருந்தது.

கேட்பதற்கு எளிய விளையாட்டாக இருந்தாலும், இந்த விளையாட்டுக்கென்றே மணிக்கட்டு லாகவத்துடன் கூடிய நிதானமும் சூசகமும் தேவைப்படும். Jack-ஐ நெருங்குவது மட்டுமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே Jack-ஐ நெருங்கியிருக்கும் எதிரணியின் Bowls-களை குறி வைத்து கலைத்தும் விடலாம். ஏன் Jack-ஐயே கூட குறிவைத்து தள்ளி ஆட்டத்தின் போக்கையே மாற்றலாம். இப்படியான யுக்திகள் இந்தப் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றன.

நயன்மோனி, பிங்கி, லவ்லி, ரூபா ராணி என்ற இந்திய நால்வரணிதான் இன்று இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க நால்வரணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
Indian Team
Indian Team
Sony

இந்தியா சார்பில் பங்கேற்கும் 4 வீராங்கனைகளும் 30 வயதைக் கடந்தவர்கள். அவர்களின் வெற்றி இந்திய சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். வரலாறு படைக்கப்போகும் வீராங்கனைகளுக்காக உங்களின் ஆதரவையும் வெளிப்படுத்துங்கள்.

இவர்களின் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4:15 மணிக்கு நடக்கவிருக்கிறது. இதே லான் பவுல்ஸ் ஆட்டத்தில் வேறு சில பிரிவுகளிலும் இந்திய அணி இன்று பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.