Published:Updated:

`பயிற்சி செய்ய மைதானம் இல்லை; ஆனால் வயல்வெளி இருந்தது!’ - `ஹிமா தாஸ்’ கடந்து வந்த பாதை

ஹிமா தாஸ்
ஹிமா தாஸ்

`இந்தச் சிறு மாற்றங்கள்தான் உன்னுடைய குறிக்கோளை அடைய உதவிபுரியும். ஒரு நாள், நீ இந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அது எல்லாவற்றிற்கும் தகுதியானதாக இருந்திருக்கும்’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாதனைகள் யாவும், ஏதோ ஒரு புறக்கணிப்பிலிருந்துதான் தொடங்குகின்றன. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பல்வேறு வலிகளும் வேதனைகளும் நிரம்பிக்கிடக்கின்றன. அப்படித்தான் பல தடைகளைத் தாண்டி முன்னேறியிருக்கிறார், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் `ஹிமா தாஸ்’. இந்தியாவின் தடகளத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். தடகளத் துறையில் தான் சாதிப்பதற்கு முன்னர், கடந்துவந்த பாதையை Humans of Bombay என்ற பிரபல ஃபேஸ்புக் பக்கத்தில் ஹிமா தாஸ் பகிர்ந்துள்ளார். அதில் அவர். ``என்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரும் விவசாயிகள். சூழ்நிலைகளால் அவருடைய கனவுகளைத் தொடர முடியவில்லை. எங்களுடையது கூட்டுக்குடும்பம். போதிய பணம் இல்லாத காரணத்தால், இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு எங்கள் அடிப்படைத் தேவைகளைச் சுருக்கிக்கொண்டோம். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பாக வாழ வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் என்னிடம் கூறுவர்.

ஹிமா தாஸ்
ஹிமா தாஸ்

நான் குழந்தையாக இருக்கும்போது, ஸ்போர்ட்ஸில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. குறிப்பாக, ஃபுட்பால் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக் காலத்தில் என் அப்பாவுக்கும் ஃபுட்பால் மீதான ஆர்வம் இருந்தது. போதுமான பணம் இல்லாததால், அவரால் அதைத் தொடர முடியவில்லை. ஆனால், என் ஆர்வத்தைக் கண்டு, அவரால் முடிந்த அளவு எனக்கு உதவி செய்தார். காலணி வாங்கக் கூட என்னிடம் காசில்லை. பயிற்சி செய்ய மைதானமும் இல்லை. வயல்களில் பயிற்சி எடுத்தேன். ஒருநாள், நான் விளையாடிக்கொண்டிருந்ததை என் உடற்கல்வி ஆசிரியர் பார்த்தார். என்னுடைய ஓட்டத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டவர், என்னிடம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினார்.

19 நாள்களில் 5-வது சர்வதேச தங்கம்! - தடகளத்தில் அசத்திய 19 வயது ஹிமா தாஸ்

நான் இருக்கும் நிலைமை காரணமாக, மற்றவர்களை ஒப்பிட்டு என்னைத் தாழ்த்திக்கொண்டிருந்தேன். ஆனால், நான் அந்தப் போட்டியில் வென்றபோது, என்னுடைய சந்தேகங்களுக்கெல்லாம் தீர்வு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, எனக்குப் பயிற்சியாளர்கள் கிடைத்தார்கள். அதற்குப் பிறகு, நான் அஸ்ஸாமில் பயிற்சி முகாமில் சேர்ந்தேன். அந்தப் பயிற்சியாளர்கள், என்னுடைய தங்கும் செலவுகளைப் பார்த்துக்கொண்டனர். அப்போது, எனக்கு 17 வயதிருக்கும். தனியாக இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஹிமா தாஸ்
ஹிமா தாஸ்

என் அப்பா என்னிடம் கூறினார்,`இந்தச் சிறு மாற்றங்கள்தான் உன்னுடைய குறிக்கோளை அடைய உதவிபுரியும். ஒருநாள் நீ இந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அது எல்லாவற்றிற்கும் தகுதியானதாக இருந்திருக்கும்’ என்றார். நான் கேம்ப்புக்குச் சென்றேன். என்னுடைய வழக்கமான செயல்பாடுகள் சற்று கடினமாக இருந்தன. அதிகாலையில் எழுந்து, சில மணி நேரம் பயிற்சி, மீண்டும் மாலையில் பயிற்சி என்றபடியே நாள்கள் கழிந்தன. என் வீட்டையும், கம்ஃபர்ட்டான சூழலையும் இழந்தேன். இந்தக் கடுமையான உழைப்பின் பலனாகத்தான், ஏசியன் யூத் சாம்பியக்‌ஷிப்பில் 7-வது இடத்தைப் பிடித்தேன். `வேர்ல்டு யூத் சாம்பியனில்’ 5-வது இடத்துக்கு முன்னேறினேன். இந்தப் போட்டிகளுக்காக நான் உலகம் முழுவதும் தனியாக, ஒரு விமானத்தில் பயணம்செய்து கொண்டிருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடைகளைத் தாண்டி, லட்சியத்தை அடைந்தேன். ஆசியப் போட்டிகள் மற்றும் `ஐஏஏஎஃப் வேர்ல்டு யூ20 சாம்பியன்ஷிப்’ போட்டிகளில் முதல் இந்தியராகத் தங்கப்பதக்கத்தை வென்றேன். வாழ்க்கை நிறைய மாற்றங்களைக் கொடுத்தது; குறுகிய காலத்திலேயே இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் நான் விளையாடப்போகிறேன் என்று அறிவிக்கப்பட்டபோது, அதை என் பெற்றோரிடம் கூறினேன். ஆனால், அவர்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லை.

ஹிமா தாஸ்
ஹிமா தாஸ்

இருப்பினும், அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். என்னை டி.வி -யில் பார்க்க உற்சாகமாக இருந்தார்கள். இன்று, குடியரசுத்தலைவர் கையால் அர்ஜுனா விருது வாங்கியிருக்கிறேன். இந்தியாவுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். சில நேரங்களில், நீங்கள் துடிப்புடன் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை ஒரு மலையின் உச்சியில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்களைச் சுற்றி யார், உங்களுக்காக உதவ யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள், உங்களை எவ்வளவு நம்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம். வேறொன்றும் தேவையில்லை. உங்கள் நம்பிக்கை மட்டும் போதும். அதுவே உங்களுக்கான இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லும்” என்று ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு