Published:Updated:

‘இந்தியாவில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது’- உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா!

இந்தியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 14 வயதான செஸ் வீரர் பிரக்ஞானந்தா, வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா ( Twitter/@chesscom_in )

முதல்முறையாக இந்தியா, உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் இந்த போட்டியில் கலந்துக்கொண்டனர். U-14, U-16, U-18 ஆகிய மூன்று பிரிவுகளில், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்குத் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா
Twitter/@chesscom_in

இதில், U-18 பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பங்கேற்றார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், பிரக்ஞானந்தா 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று, 3 ஆட்டங்களை டிரா செய்திருந்தார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஜெர்மனியைச் சேர்ந்த புக்கள்ஸ் வாலெண்டினை (Buckles Valentine) எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா.

இதற்கு முன்னதாக நடந்த போட்டியில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிந்ததால், இறுதிப் போட்டியை டிரா செய்தால் போதும் என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கினார்.போட்டியின் முடிவில் 9 புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தை டிரா செய்தார். இதன்மூலம் U-18 பிரிவில் உலக சாதனை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா
Twitter/@chesscom_in

“நான் விளையாடிய அனைத்துப் போட்டிகளும் சவாலானதாகவே இருந்தன. அனைத்து வீரர்களும் சிறப்பாகத் தயாராகி வந்திருந்தனர். இந்த உலக சாம்பின்ஷிப் போட்டியை முதல்முறையாக இந்தியா நடத்தும்போது, அதில் நான் வெற்றிபெற்றதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகிறேன். சொந்த நாட்டு மக்கள் முனிலையில் விளையாடியதும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என பிரக்ஞானந்தா டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.