Published:Updated:

‘காஷ்மீர் இருக்கட்டும் கராச்சியை மறந்துட்டீங்களே!’- ட்வீட்டில் சிக்ஸர் அடித்த கம்பீர்

10 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது.

Gambhir
Gambhir

கௌதம் கம்பீர் பா.ஜ.க-வில் இணைந்து எம்.பி-யாகிவிட்டார். ட்விட்டரில் போர் தொடுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அவ்வப்போது நறுக்கென பதிலடியும் கொடுத்துவருகிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடிக்கும் இவருக்கும் காரசார விவாதம் நடத்தது. ‘அஃப்ரிடி எல்லாவற்றையும் அரசியலாக்க விரும்பினால், அவர் ஏன் அரசியலில் சேரவில்லை. அரசியலுக்கும் முதிர்ச்சி உள்ளவர்கள் தேவை. ஆனால், அவருக்கு அது இல்லை” என லெஃப்ட் ரைட் வாங்கினார். இந்நிலையில், இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பாக கம்பீரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

‘காஷ்மீர் இருக்கட்டும் கராச்சியை மறந்துட்டீங்களே!’- ட்வீட்டில் சிக்ஸர் அடித்த கம்பீர்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் பாகிஸ்தான் நடத்தும் போட்டிகள் நடக்கின்றன. 2009-ம் ஆண்டு, இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது, இலங்கை வீரர்கள் சென்ற பேருந்தின்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் வீரர்கள் லேசாக காயங்களுடன் உயிர்த்தப்பினர். பாதுகாப்புக் காரணம் கருதி அந்தத் தொடர் பாதியில் கைவிடப்பட்டது. வீரர்கள் அனைவரும் உடனடியாக ஹெலிகாப்டர்கள் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட எந்த நாடும் முன்வரவில்லை. சில அரசியல் காரணங்களளால், பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடி வருகிறது. இந்த விவகாரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஹோட்டல் அறையில் இருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் வீரர்களின் வாகனங்கள், பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுகின்றன. வீரர்கள் செல்லும் சாலையில், மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை. அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் பிரத்யேக பாதுகாப்புகள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வீரர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ள கௌதம் கம்பீர், “காஷ்மீரில் கவனம் செலுத்தும் பாகிஸ்தானுக்கு, கராச்சியின் நிலை மறந்துவிட்டதே” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலானது.