Published:Updated:

ஹாமில்ட்டனின் சவாலைத் தடுத்த வெர்ஸ்டப்பன்!

ரேஸ்: ஃபார்முலா 1

பிரீமியம் ஸ்டோரி
மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
 ரேஸ்: ஃபார்முலா 1
ரேஸ்: ஃபார்முலா 1

அக்டோபர் மாதம் ரெட்புல் அணிக்குச் சிறப்பாக அமைந்திருக்கிறது. துருக்கி, அமெரிக்கா என இரண்டு ரேஸ்களிலுமே இரண்டு ரெட்புல் டிரைவர்களும் போடியம் ஏறினார்கள். இந்த சீஸனில் முதல் முறையாகத் தொடர்ந்து இரண்டு ரேஸ்களில் இரு ரெட்புல் வீரர்களும் போடியம் ஏறியிருக்கிறார்கள். ஹாமில்ட்ட்டனுக்குப் பின்னால் இந்த மாதத்தைத் தொடங்கிய வெர்ஸ்டப்பன், அக்டோபர் முடிவில் நல்ல முன்னிலை பெற்றிருக்கிறார். மெர்சிடீஸ் - ரெட்புல் அணிகளுக்கு இடையிலான இடைவெளியும் குறைந்திருக்கிறது.

துருக்கி கிராண்ட் ப்ரீ

இந்த சீஸனின் ஒவ்வொரு ரேஸிலும் டிராக்குகளில் பல பரபர தருணங்களைப் பார்த்துக் கொண்டேதான் இருந்திருக்கிறோம். அதிரடி ஓவர்டேக்குகள், அட்டகாச டிஃபண்டிங், அச்சுறுத்தும் விபத்துகள் என நிறையப் பார்த்திருக்கிறோம். ஆனால், அப்படியான டிராமாக்கள் அதிகம் இல்லாமல் நடந்து முடிந்தது துருக்கி கிராண்ட் ப்ரீ. போல் பொசிஷனில் ரேஸைத் தொடங்கிய வால்டேரி போட்டாஸ், எந்தச் சலசலப்பும் இல்லாமல் இந்த சீஸனில் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். போடியத்தின் மற்ற இரண்டு இடங்களையும் ரெட்புல் வீரர்கள் கைப்பற்ற, டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் ஹாமில்ட்ட்டனை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்.

துருக்கி கிராண்ட் ப்ரீ தொடங்குவதற்கு முன் வெர்ஸ்டப்பனைவிட 2 புள்ளிகள் முன்னிலையில் இருந்தார் ஹாமில்ட்டன். ஆனால், கூடுதலான internal combustion engines பயன்படுத்தியதற்காக 10 இடங்கள் பெனால்ட்டியாகப் பெற்றார் நடப்பு சாம்பியன். இருந்தாலும் தகுதிச் சுற்றுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். 3 சுற்றுகளிலும் முதலாவதாக வந்தார் ஹாமில்ட்டன். அதனால், 11-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கினார். தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம் பெற்ற போட்டாஸ் போல் பொசிஷனில் தொடங்கினார். சமீபமாக மிகவும் சுமாரான தொடக்கமே கண்டுகொண்டிருக்கும் அவர், இந்த ரேஸைச் சிறப்பாக ஆரம்பித்தார்.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை போட்டாஸின் இடத்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. முதல் லேப்பிலேயே வெர்ஸ்டப்பனிடமிருந்து ஒரு நல்ல இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார். இந்த சீஸனின் எந்த ரேஸிலும் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாத போட்டாஸுக்கு இந்த ரேஸ் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. போர்ச்சுகலில் போல் பொசிஷனை இழந்து மூன்றாவது இடமே பெற்றிருந்தவர், இந்த முறை எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு பெர்ஃபெக்ட்டான ரேஸை அரங்கேற்றினார்.

ரேஸின் தொடக்கத்திலிருந்தே டிராக் ஈரமாக இருந்ததால், 20 வீரர்களும் முழுவதும் intermediate டயர்களையே பயன்படுத்தினார்கள். டிராக் ஈரம் கொஞ்சம் காய்ந்து கொண்டிருந்தாலும் தூரல் தொடர்ந்து கொண்டிருந்ததால், ஸ்லிக் டயர்களுக்கு மாறும் திட்டத்தை அனைவரும் கைவிட்டனர். வெட்டல் மட்டும் 36-வது லேப்பில் மீடியம் டயர்களுக்கு மாறி டிராக்குக்குள் நுழைந்தார். ஆனால், அவரால் ஈரமான டிராக்கில் காரைச் சரியாக ஓட்ட முடியவில்லை. அதனால், அடுத்த லேப்பிலேயே மீண்டும் பிட்டுக்குள் புகுந்து intermediate டயர்களுக்கு மாறினார்.

பெரிய டிராமாக்கள் இல்லாத ரேஸில் கடைசியில் மட்டும் சில குழப்பங்கள் அரங்கேறின. ஆனால், அதன் நடுவே இருந்தது சாம்பியன் ஹாமில்ட்டன். 11-வது இடத்திலிருந்து தொடங்கியவர் தன் வழக்கமான கிளாசிக் டிரைவிங்கால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஆனால், இளம் வீரர் யூகி சுனோடா மட்டும் சிறப்பாக டிஃபண்ட் செய்து சில லேப்கள் ஹாமில்ட்டன் ஓவர்டேக் செய்யாமல் பார்த்துக் கொண்டார். சிறப்பாகச் செயல்பட்டவர், பிட் எடுக்காமலயே சென்று கொண்டிருந்ததால் போடியம் ஏறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிட் எடுக்காமல் முழு ரேஸையும் முடிக்க நினைத்தார். ஆனால், மெர்சிடீஸ் நிர்வாகம் 44-வது லேப்பில் அவரைப் பிட்டுக்குள் அழைத்தது. விருப்பமில்லாமல் பிட்டுக்குள் நுழைந்தவர், வெளியேறியபோது லெக்லருக்குப் பின்னால் ஐந்தாம் இடத்தில்தான் வந்தார். மெர்சிடீஸின் இந்த முடிவு பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

போட்டாஸ் முதலிடத்திலும், வெர்ஸ்டப்பன், செர்ஜியோ பெரஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் முடித்தனர். லெக்லர் நான்காம் இடம் பிடித்தார். மொத்த ரேஸையும் ஆல்பைன் வீரர் எஸ்டபன் ஓகான் மட்டும் பிட் எடுக்காமலயே முடித்தார். அதன காரணமாக அவர் பத்தாம் இடமே பிடிக்க முடிந்தது. எந்த அசம்பாவிதங்களும் நடக்காத இந்த ரேஸை 20 டிரைவர்களுமே முடித்தனர். இந்த ரேஸில் ஹாமில்ட்டனை விட 8 புள்ளிகள் அதிகம் பெற்ற வெர்ஸ்டப்பன், சாம்பியன்ஷிப் ரேஸில் 2 புள்ளி முன்னிலையோடு முதலிடத்துக்கு முன்னேறினார்.

அமெரிக்கன் கிராண்ட் ப்ரீயின் வெற்றியாளர்கள்...
அமெரிக்கன் கிராண்ட் ப்ரீயின் வெற்றியாளர்கள்...
ஹாமில்ட்டனின் சவாலைத் தடுத்த வெர்ஸ்டப்பன்!
வால்ட்டேரி போட்டாஸ்
வால்ட்டேரி போட்டாஸ்

அமெரிக்கன் கிராண்ட் ப்ரீ

கடந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக அமெரிக்காவில் ரேஸ் நடக்காத நிலையில், மீண்டும் ஆஸ்டினின் COTA சர்க்யூட்டுக்குத் திரும்பியது ஃபார்முலா ஒன். அற்புதமான கடைசி லேப்பின் காரணமாக போல் பொசிஷனை வென்றார் வெர்ஸ்டப்பன். ஹாமில்ட்டன், பெரஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்கள் பிடித்தனர். மீண்டும் புதிய internal combustion engine பயன்படுத்தியதால் 4 இடங்கள் பெனால்ட்டி பெற்றார் போட்டஸ். அதனால், அவர் ஒன்பதாவது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கினார்.

இந்த சீஸனின் பெரும்பாலான ரேஸ்களில் இரண்டாவதாக ரேஸைத் தொடங்குபவர்கள் தான் முதல் லேப்பில் முன்னிலை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது இந்த ரேஸிலும் தொடர்ந்தது. சுமார் 4 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் தொடங்கிய ரேஸில், ஹாமில்ட்டனுக்கு அட்டகாசமான தொடக்கம் கிடைத்தது. முதல் வளைவே இடதுபுறம் என்பதால், ஹாமில்ட்டனை நெருக்க முயற்சித்தார் வெர்ஸ்டப்பன். இருந்தாலும், சிறப்பாகச் செயல்பட்டு முதல் வளைவிலிருந்து வெளியேறியபோதே முன்னிலை பெற்றார் நடப்பு சாம்பியன். ஹாமில்ட்டன் முன்னிலை பெற்றிருந்தாலும், அவரிடமிருந்து பெரிய இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வெர்ஸ்டப்பன்.

மீடியம் டயர்களில் ஆரம்பித்த டிரைவர்கள், டெக்ஸாஸின் தட்பவெட்ப நிலை காரணமாக விரைவிலேயே ஹார்டு டயர்களுக்கு மாறினர். ஆங்காங்கே சில மோதல்கள் இருந்ததால் நிகிதா மாஸபின், ஓகான் போன்றவர்கள் அதிவிரைவிலேயே பிட் எடுத்தனர். ஹாமில்ட்டனை ‘undercut’ செய்யும் திட்டத்தோடு 11-வது லேப்பில் பிட் எடுத்தார் வெர்ஸ்டப்பன். இரண்டு லேப்கள் கழித்து பிட் எடுத்து வெளியேறியபோது, ஹாமில்ட்டன் வெர்ஸ்டப்பனுக்குப் பின்னால் வந்தார்.

ஓரளவு நல்ல முன்னிலை பெற்ற வெர்ஸ்டப்பன், ஒரு கட்டத்தில் வேகத்தை இழந்தார். ஹாமில்ட்டன் அந்த இடைவெளியைக் குறைத்துக் கொண்டிருந்ததால் விரைவிலேயே மேக்ஸை பிட்டுக்குள் அழைத்தது ரெட்புல் அணி. 29-வது லேப் முடிவில் பிட்டுக்குள் நுழைந்தார் வெர்ஸ்டப்பன். ஆனால், மெர்சிடீஸ் ஹாமில்ட்டனை அழைக்கவில்லை. அவர்களின் இலக்கிலிருந்து 6 அல்லது 7 லேப்கள் அதிகமாகச் செல்ல வேண்டும் என்ற திட்டத்தை ஹாமில்ட்டனுக்குத் தெரியப்படுத்தினர். எட்டு லேப்கள் கழித்து 37-வது லேப்பில் ஹாமில்ட்டன் பிட் எடுத்து வெளியேறியபோது, கிட்டத்தட்ட 7 நொடிகள் வெர்ஸ்டப்பனிடமிருந்து பின்தங்கியிருந்தார். ஆனால், புதிய டயர்களோடு இருந்ததால், ஹாமில்ட்டன் விரைவில் முன்னிலை பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே ஒவ்வொரு லேப்பிலும் வெர்ஸ்டப்பனைவிட வேகமாகச் செயல்பட்டு இடைவெளியைக் குறைத்துக் கொண்டே இருந்தார் 7 முறை சாம்பியன். அது மட்டுமல்லாமல், லேப் செய்யும்போது மிக் ஷுமேக்கர் சற்று இடைஞ்சல் கொடுக்க, அங்கும் சில நொடி முன்னிலையை இழந்தார் வெர்ஸ்டப்பன். 52-வது லேப்பில் ஹாமில்ட்டன் DRS ரேஞ்சுக்குள் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 51-வது லேப்பில் இருந்து தன் வேகத்தை அதிகப்படுத்தினார் வெர்ஸ்டப்பன். அதனால் குறைந்தபட்சம் ஒன்றரை நொடி இடைவெளியாவது தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

ஹாமில்ட்டனின் சவாலைத் தடுத்த வெர்ஸ்டப்பன்!

கடைசி லேப்பில் மிகவும் அருகில் வந்திருந்தாலும், ஹாமில்ட்டனால் வெர்ஸ்டப்பனை முந்த முடியவில்லை. இறுதியில் தன் முதல் அமெரிக்கன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தை வென்றார் வெர்ஸ்டப்பன். ஹாமில்ட்டன் ஃபாஸ்டஸ்ட் லேப்புக்கான ஒரு புள்ளியைப் பெற்றார். இந்த வெற்றியால், வெர்ஸ்டப்பனுக்கும் அவருக்குமான இடையிலான இடைவெளி 12 புள்ளிகளாக அதிகரித்தது. கடைசிக் கட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஹாமில்ட்டனின் சவாலைத் தடுத்த வெர்ஸ்டப்பன், driver of the day விருது பெற்றார்.

பின்னால் இருப்பவர்களிடமிருந்து எந்தப் போட்டியில் இல்லாமல், முன்னால் இருப்பவர்களுக்குப் போட்டியும் தராமல் தனியாக ஒரு ரேஸை ஓட்டி மூன்றாவதாக வந்தார் செர்ஜியோ பெரஸ். ஒருகட்டத்தில் தொடர்ந்து 8 ரேஸ்களாக போடியமே ஏறாத பெரஸ், தொடர்ந்து இரண்டாவது முறையாக மூன்றாவது இடம் பெற்றிருக்கிறார். இதன்மூலம் டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் லாண்டோ நாரிஸை முந்தி நான்காம் இடத்துக்கு முன்னேறியிருக் கிறார்.

அணிகள் பிரிவில் மெர்சீடிஸ் அணி 460.5 புள்ளிகளோடு முதலிடம் பெற்றிருக்கிறது. இரண்டாம் இடத்துக்கான இடைவெளியைக் குறைத்திருக்கும் ரெட்புல் 437.5 புள்ளிகள் பெற்றிருக்கிறது. மெக்லரன் மூன்றாம் இடத்திலும், ஃபெராரி நான்காம் இடத்திலும் தொடர்கின்றன.

ஹாமில்ட்டனின் சவாலைத் தடுத்த வெர்ஸ்டப்பன்!

இந்த சீஸனோடு ரெட்புல் - ஹோண்டா பார்னர்ஷிப் உடையவிருப்பதால், ஹோண்டாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளை livery-யோடு களமிறங்கியது ரெட்புல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு