Published:Updated:

2022 பார்முலாவில் எல்லாமே புதுசு ரவுசு!

Formula 1 race track
பிரீமியம் ஸ்டோரி
Formula 1 race track

புதிய ட்ராக்குகள், அதிக ரேஸ்கள் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது 2022 பார்முலா சீஸன்.

2022 பார்முலாவில் எல்லாமே புதுசு ரவுசு!

புதிய ட்ராக்குகள், அதிக ரேஸ்கள் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது 2022 பார்முலா சீஸன்.

Published:Updated:
Formula 1 race track
பிரீமியம் ஸ்டோரி
Formula 1 race track

ஃபார்முலா ஒன் ஹைபிரிட் எரா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. புதிய விதிகள், விதிகளுக்கு ஏற்ற புதிய கார்கள், புதிய கார் டிசைன்கள் என பல மாற்றங்களோடு அடுத்த சீஸன் தொடங்கப் போகிறது. கார்களில் மட்டுமல்லாமல், டிரைவர்களிலும், அணிகளிலும்கூட பல மாற்றங்களைப் பார்க்கப் போகிறோம். புதிய ட்ராக்குகள், அதிக ரேஸ்கள் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது 2022 சீஸன்.

கடந்த ஆண்டைப் போலவே பஹ்ரைனில் மார்ச் 20-ம் தேதி புதிய சீஸன் தொடங்குகிறது. 2021-ல் 22 ரேஸ்கள் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை 23 ரேஸ்கள் நடத்தப்படவுள்ளன. நவம்பர் 20-ம் தேதி அபுதாபியில் கடைசி ரேஸ் நடக்கும்.

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நடக்காமல் இருந்த ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ அனைத்தும் மீண்டும் திரும்பியிருக்கின்றன. மியாமி கிராண்ட் ப்ரீ இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது. கடந்த ஆண்டிற்காக மட்டும் சேர்க்கப்பட்டிருந்த போர்ச்சுகீஸ், ஸ்டிரியன் மற்றும் டர்கிஷ் கிராண்ட் ப்ரீக்கள் இந்த ஆண்டு காலண்டரில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெறுவதால், கத்தார் சர்க்யூட்டை மாற்றியமைத்து 2023-ல் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், இந்த ஆண்டு கத்தாரில் ஃபார்முலா ஒன் இல்லை.

அணிகளைப் பொறுத்தவரை, மெர்சீடிஸ் வால்ட்டேரி போட்டாஸுக்குப் பதில் ஜார்ஜ் ரஸலை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ரஸல் இடத்தை அலெக்ஸ் ஆல்பான் நிரப்பப்போகிறார். ஆல்ஃபா ரோமியோ மட்டும் மொத்தமாக புதிய டிரைவர்களோடு களமிறங்குகிறது. அனுபவமிக்க போட்டாஸ், புதிய நட்சத்திரமான குவான்யூ ஜோ ஆகியோர் அந்த அணிக்காக இந்த ஆண்டு ரேஸ் செய்யப்போகிறார்கள்.

சீனாவின் முதல் ரேஸர்

22 வயதான குவான்யூ ஜோ, சீனாவின் ஷாங்காயில் பிறந்தவர். 8 வயதில் கார்ட்டிங் செய்யத் தொடங்கிய இவர், 14 ஆண்டுகள் கழித்து தன் கனவை நிறைவேற்றியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ரெனோ மற்றும் ஆல்பைன் அணிகளுக்கு டெஸ்ட் டிரைவராக இருந்தவர் ஜோ. அந்த அணியின் அகாடமியிலிருந்து வந்தவர். 2014 முதல் 2018 வரை ஃபெராரியின் அகாடமியிலும் பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஃபார்முலா 2 பந்தயத்தில் ரேஸ் செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தன் செயல்பாட்டில் முன்னேற்றம் காட்டிக் கொண்டே இருந்தார். 2019-ல் 140 புள்ளிகளுடன் ஏழாவது இடம் பிடித்தவர், அடுத்த ஆண்டு 151.5 புள்ளிகள் பெற்றார். ஆறாவது இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு 183 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடமே பிடித்தது. முதல் இரண்டு சீஸன்களில் ஒரேயொரு ரேஸ் மட்டுமே வென்றவர், 2021-ல் மட்டும் 4 ரேஸ்களில் வெற்றி பெற்றார். 9 முறை போடியம் ஏறினார்.

2021 சீஸனில் மொத்தம் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்ற ஆன்டோனியோ ஜியோவனாசிக்குப் பதிலாக ஜோ இந்த இடத்தைப் பெற்றிருக்கிறார். இதன்மூலம், ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்கப்போகும் முதல் சீன ரேஸர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜோ. இது சீனாவில் ஃபார்முலா ஒன் பிரபலமடைவதற்கு மிகப்பெரிய காரணமாய் அமையும். அது மட்டுமல்லாமல், 14 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த சீன கிராண்ட் ப்ரீ கொரோனா காரணமாக நடக்காமல் இருக்கும் நிலையில், ஜோவின் வருகை சீன ரசிகர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும்.

ஆல்பானின் இரண்டாவது இன்னிங்ஸ்

ஃபார்முலா ஒன் ட்ராக்குகளில் தன்னுடைய முதல் இன்னிங்ஸை ஜோ தொடங்க, இரண்டாவது இன்னிங்ஸில் தன் திறமையை நிரூபிக்கக் காத்திருக்கிறார் அலெக்ஸ் ஆல்பான். 2019-ல் தொடங்கிய அவரது ஃபார்முலா ஒன் பயணம், இரண்டு ஆண்டுகளில் இரு துருவங்களையும் சந்தித்தது. டோரோ ரோஸோவுக்காக அறிமுகம் ஆனவர், பாதியிலேயே ரெட்புல் அணிக்கு புரமோட் செய்யப்பட்டார். ஆனால், 2020 சீஸனில் அவரது செயல்பாடு ரெட்புல்லுக்குப் போதுமானதாக இல்லை. அனுபவமிக்க செர்ஜியோ பெரஸை ரெட்புல் ஒப்பந்தம் செய்ய, மற்ற அணிகளும் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய, ஆல்பானுக்கு எந்த அணியிலும் சீட் கிடைக்கவில்லை.

குவான்யூ ஜோ
குவான்யூ ஜோ
2022 பார்முலாவில் 
எல்லாமே புதுசு ரவுசு!
வால்ட்டேரி போட்டாஸ்
வால்ட்டேரி போட்டாஸ்

2018-ம் ஆண்டு எஸ்டபான் ஓகானுக்கு இதே மாதிரியான ஒரு சூழ்நிலை அமைந்தது. ரேஸிங் பாயின்ட் உரிமையாளர்கள் மாறியதால், அவர் இடம் கேள்விக்குறியானது. புரிய உரிமையாளர் லாரன்ஸ் ஸ்டிரோலின் மகன் லான்ஸ் அணியில் இணைவதால், பெரஸ் அல்லது ஓகான் இருவரில் ஒருவர் மட்டுமே தொடர முடியும் என்ற நிலை. பெரஸுக்குப் பொருளாதார பக்கபலம் இருந்ததால், ஓகான்தான் வெளியேற்றப்படுவார் என்று கருதப்பட்டது. அப்போது நடந்த ஒரு பிரஸ்மீட்டில், லூயிஸ் ஹாமில்ட்டன் ஒரு வார்த்தை சொல்லியிருப்பார்: “திறமையைவிட பணமே முன்னுரிமை பெறும் நிலை இந்த விளையாட்டில் நீடிப்பது வருத்தமளிக்கிறது.”

ஆல்பான் விஷயத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து அதேதான் நடந்தது. ஒவ்வொரு அணியும் வேறு வேறு டிரைவர்களைத் தேர்வு செய்ய வேறு வேறு காரணங்கள் இருந்தாலும், அந்தக் காரணங்கள் அனைத்தும் கைகாட்டுவது - பணம் என்பதைத்தான்.

ரெட்புல் அணியின் வருங்காலம் என்று கருதப்பட்டவர், கடந்த சீஸனை ரிசர்வ் டிரைவராகக் கழித்தார். அவ்வளவுதானோ என்று நினைத்த நிலையில், அவர் திறமைக்கான வாய்ப்பை வழங்கத் தயாராகியிருக்கிறது வில்லியம்ஸ். மெர்சீடிஸுடன் தொடர்பு கொண்ட அணியென்றாலும், இதற்கு ரெட்புல்லும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஓகான் போல் மீண்டும் தன் திறமையை நிரூபிக்கத் தயாராகிவிட்டார் ஆல்பான். ஓகான் ஹங்கேரியில் நிகழ்த்தியதைப் போன்ற ஒரு அற்புதத்தை ஆல்பானும் நிகழ்த்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும்!

கிமி to வால்ட்டேரி

2021 சீஸனோடு ஓய்வு பெற்றிருக்கும் ஐஸ் மேன் கிமி ராய்க்கோனனின் இடத்தை, இன்னொரு ஃபின்லாந்து வீரரான வால்ட்டேரி போட்டாஸால் நிரப்பப்பட்டிருக்கிறது ஆல்ஃபா ரோமியோ. மெர்சிடீஸ் அணியில் ஒரு டீம் ப்ளேயராக இருந்த போட்டாஸ், இப்போது சீனியர். இனி உலக சாம்பியன் பட்டத்தைக் குறிவைக்க முடியாது. ஆனால், நிச்சயம் அவர் அனுபவத்தைப் பயன்படுத்தி ஆல்ஃபா ரோமியோவுக்கு முதல் போடியத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். டீம் மேட்டுக்கு வழிவிடச் சொல்லி இனி டீம் ரேடியோவில் மெசேஜ்கள் வரப்போவ தில்லை. இத்தனை காலம் தன் 100 சதவிகிதத்தை மெர்சிடீஸுக் காகக் கொடுத்துக் கொண்டி ருந்த போட்டாஸ், இனி ஆல்ஃபா ரோமியாவுக்காக 200 சதவிகிதத்தை கொடுக்கப் போகிறார். நிச்சயம் மிகப்பெரிய அப்செட்கள் ஏற்படுத்தப் போகிறார்.

அலெக்ஸ் ஆல்பான்
அலெக்ஸ் ஆல்பான்
ஜார்ஜ் ரஸல்
ஜார்ஜ் ரஸல்

பாய்வாரா ஜார்ஜ் ரஸல்?

புதிய அணியில் இணைந்திருக்கும் நான்கு டிரைவர்களில் அதிக எதிர்பார்ப்பு இருப்பது ஜார்ஜ் ரஸலுக்குத்தான். வில்லியம்ஸ் அணியிலிருந்து நடப்பு சாம்பியன் மெர்சிடீஸ் அணிக்கு புரமோட் ஆகியிருக்கிறார் ஜார்ஜ். ஏற்கெனவே அந்த அணிக்காக ஒரு ரேஸில் பங்கேற்று வெற்றியையே தொட்டிருந்தார் அவர். 2020 ஷகிர் கிராண்ட் ப்ரீயில் ஹாமில்ட்டனுக்குப் பதிலாக மெர்சிடீஸ் காரை ஓட்டிய அவர், பிட் ஸ்டாப்பில் நடந்த சிக்கலால் தன் வெற்றியை இழந்தார். இருந்தாலும் தன் முதல் புள்ளியை அந்த ரேஸில் பெற்று, மெர்சிடீஸ் அணியின் நம்பிக்கையையும் சம்பாதித்தார். கடந்த ஆண்டு நடந்த பெல்ஜியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் கூட, தகுதிச் சுற்றில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு போடியமும் ஏறினார். வில்லியம்ஸ் காரில் ஒருவரால் போடியம் ஏற முடிகிறதெனில், நிச்சயம் மெர்சிடீஸ் மெஷினை வைத்துக்கொண்டு அவரால் வித்தை காட்ட முடியும். ஜார்ஜின் இள ரத்தத்தை மெர்சிடீஸ் எப்படி கையாளப் போகிறது என்பதுதான் முக்கியம். போட்டாஸ், ஒரு டீம் பிளேயராக இருந்துவிட்டார். ரஸலையும் அப்படி இருக்கச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர்தான் அவர்களின் எதிர்காலம். அதனால், இது மெர்சிடீஸுக்குமேகூட பெரிய சவால்தான்.

புதிய அணி மாறியவர்கள் மட்டும் நெருக்கடியை உணரப்போவதில்லை. எல்லா டிரைவர்களுக்குமே இந்த சீஸன் சவாலானதாகத்தான் இருக்கபோகிறது. புதிய விதிகள், லாண்டோ நாரிஸை ஹாமில்ட்டன், வெர்ஸ்டப்பன் ஆகியோரோடு சண்டை செய்யவைக்கும். லெக்லர்க்கோடு ஓகானை மோதவைக்கும். இனி போட்டி தீவிரமடையப் போகிறது. அபுதாபி டிராமா இனி 23 ரேஸ்களிலும் அரங்கேறப் போகிறது!

2022 பார்முலாவில் 
எல்லாமே புதுசு ரவுசு!