Published:Updated:

யார் சாம்பியன்?

Formula 1
பிரீமியம் ஸ்டோரி
Formula 1

கார் ரேஸ்: ஃபார்முலா 1

யார் சாம்பியன்?

கார் ரேஸ்: ஃபார்முலா 1

Published:Updated:
Formula 1
பிரீமியம் ஸ்டோரி
Formula 1
யார் சாம்பியன்?
யார் சாம்பியன்?

12-ம் வகுப்பு இயற்பியல் விதியைப் போல், இதற்கு ஒரே பதிலை, ஒரே மாதிரி எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விளையாட்டில் இதற்குப் பல வரையறைகள் இருக்கின்றன.

Type 1: வெற்றிமேல் வெற்றிகள் குவித்த மாவீரனை வீழ்த்தி அவன் அரியாசனத்தை ஆக்கிரமிப்பவன் சாம்பியன்.

Type 2: திடீரென்று சந்திக்கும் பெரு வீழ்ச்சியிலிருந்து எழுந்து, தன் அரியாசனத்தை மீட்டு, அதில் கால் மேல் கால் போட்டு அமர்பவன் சாம்பியன்.

Type 3: அரியாசனத்தை என்றோ இழந்திருந் தாலும், போராடுவதே தன் நோக்கமென்று கருதி, கடைசி வரை களத்தில் சண்டை செய்பவனும் சாம்பியனே!

நவம்பர் மாத ஃபார்முலா ஒன் ரேஸ்கள், ரசிகர்களுக்கு இந்த 3 வித சாம்பியன்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

Type 1: ரேஸ்: மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீ; சாம்பியன் - மேக்ஸ் வெர்ஸ்டப்பன்

அமெரிக்காவைப்போல் இல்லாமல், மெக்ஸிகோ சிட்டி தகுதிச் சுற்றின் மூன்று சுற்றுகளிலும் மெர்சிடீஸ் கார்களே அதிவேக லேப் டைமிங்கைப் பதிவு செய்திருந்தன. Q2-வில் சற்று சுமாராகவே செயல்பட்டிருந்தாலும், கடைசி சுற்றில் ஓர் அதி அற்புத லேப்பை ஓட்டி, போல் பொசிஷனைத் தனதாக்கியிருந்தார் வால்ட்டேரி போட்டாஸ். முதல் இரு இடங்களிலிருந்தும் மெர்சிடீஸ் கார்களே ரேஸைத் தொடங்கியதால், சாம்பியன்ஷிப் பில் பெரிய முன்னிலை பெற்றுவிடலாம் என்று டோடோ வோல்ஃப் நினைத்திருப்பார். ஆனால், அது முதல் லேப்பின் சில நொடிகளிலேயே பொய்த்துப்போனது.

இந்த சீஸனில் (கத்தார் கிராண்ட் ப்ரீ வரை), 8 ரேஸ்களை போல் பொசிஷனைத் தொடங்கியிருக்கிறது மெர்சிடீஸ். ஆனால், அதில் வெற்றியாக மாறியது மொத்தம் மூன்றுதான். அதேசமயம், 9 முறை முதல் இடத்திலிருந்து தொடங்கிய ரெட்புல் (அனைத்தும் வெர்ஸ்டப்பனே) 6 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. இரண்டு ரேஸ்களில் ஹாமில்ட்ட்டனோடு ஏற்பட்ட விபத்தில் வெளியேறி வெற்றியைத் தவறவிட்டிருப்பார். மற்றபடி போல் பொசிஷனில் தொடங்கி அவர் முடித்த ரேஸ்களில் வெற்றி பெறத் தவறியது சீஸனின் முதல் ரேஸான பஹ்ரைனில் மட்டுமே.

இதிலிருந்து ரேஸின் தொடக்கம் இரண்டு அணிகளும் எப்படி இருக்கின்றன, அதை எப்படி அவை பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை உணர்த்தும். வெர்ஸ்டப்பன் எப்போதும்போல் அக்ரஸ்ஸிவாக தொடங்குகிறார். முடிந்தவரை, கிரிட்டில் தனக்குக் கிடைக்கும் முன்னிலையைச் சாதகமாக்கிக் கொள்கிறார். அதேசமயம், மெர்சிடீஸுக்குச் சிறப்பான தொடக்கங்கள் கிடைப்பதில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். ரியாக்‌ஷன் டைம் சிறப்பாக இருந்தாலும், அவர்களால் வளைவுகளில் சரியாக டிஃபண்ட் செய்ய முடிவதில்லை. அதனால், பல ரேஸ்களில் தங்கள் முன்னிலைகளை ஆரம்பத்திலேயே இழக்கின்றனர். மெக்ஸிகோ சிட்டி அதற்கு மிகப்பெரிய உதாரணம்.

இரண்டு மெர்சிடீஸ் கார்களுக்குப் பின்னால் வெர்ஸ்டப்பன் தொடங்கியதால், மெக்ஸிகோவில் மேக்ஸ் வெற்றி பெறுவது அசாத்தியம் என்றே கருதப்பட்டது. ஆனால், அந்த இளம் நெதர்லாந்து டிரைவர் சோடை போகவில்லை. தன் தைரியமான முடிவால், முதல் லேப்பின் முதல் வளைவிலேயே தன் அக்ரஸ்ஸிவான டிரைவிங்கால் முன்னிலை பெற்றார். மிகவும் தாமதமாக பிரேக்கை அழுத்தி, அந்த வளைவிலேயே இரண்டு மெர்சிடீஸ்களையும் முந்தினார் அவர். போதாக்குறைக்கு டேனியல் ரிக்கார்டோவின் காரில் மோதி வால்ட்டேரி போட்டாஸின் கார் சுழல, அவர் மிகவும் பின்தங்க வேண்டியிருந்தது.

ஒவ்வொரு ரேஸையும் மிகவும் அக்ரஸிவ்வாகத்தான் தொடங்குகிறார் வெர்ஸ்டப்பன். ஹாமில்ட்ட்டனுக்குக் கொஞ்சம் கூட வாய்ப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்க்கமாக இருக்கிறார். அதுவே சில்வர்ஸ்டோனிலும், மான்ஸாவிலும் அவர் ரேஸை முடிக்காததற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், ஹாமில்ட்ட்டன் போன்ற ஒரு மகத்தான வீரரைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் அப்படியொரு அக்ரஸ்ஸிவான அணுகுமுறை தேவைதானே!

யார் சாம்பியன்?
யார் சாம்பியன்?


அந்த முதல் வளைவில் ஹாமில்ட்ட்டனை முந்தியவர், அதன்பிறகு எவ்விதப் போட்டியும் இல்லாமல் அந்த ரேஸை வென்றார். கிட்டத்தட்ட 16 நொடிகள் கழித்துத்தான் ஹாமில்ட்ட்டன் எல்லையைக் கடந்தார். அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார் மேக்ஸ். இந்த ரேஸ் முடிந்தபோது, அவருக்கும் ஹாமில்ட்ட்டனுக்குமான இடைவெளி 19 புள்ளிகளாக உயர்ந்தது. தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த வெர்ஸ்டப்பன், கடைசி 7 ரேஸ்களில் ஐந்தில் ஹாமில்ட்ட்டனுக்கு முன்பாக முடித்திருந்தார். ரஷ்யாவில் மட்டும்தான் வெர்ஸ்டப்பனைவிட அதிக புள்ளிகள் எடுத்திருந்தார் லூயிஸ். அதனால், ஹாமில்ட்டனின் எட்டாவது டைட்டில் கனவுக்கு வெர்ஸ்டப்பன் முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்ற கருத்து வலுக்கத் தொடங்கியது. இத்தனை காலம் அசைக்க முடியாதிருந்த ஹாமில்ட்டனின் அரியணையை ஆட்டிப் பார்த்து, தான் ஒரு சாம்பியன் என்பதை உணர்த்தினார் மேக்ஸ்.

ஃபெர்னாண்டோ அலோன்சோ
ஃபெர்னாண்டோ அலோன்சோ
லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்
மேக்ஸ் 
வெர்ஸ்டப்பபன்
மேக்ஸ் வெர்ஸ்டப்பபன்


Type 2: ரேஸ்: சாவ் பாலோ கிராண்ட் ப்ரீ; சாம்பியன்: லூயிஸ் ஹாமில்ட்டன்

மெக்ஸிகோவிலிருந்து கிளம்பியபோது, சாம்பியன்ஷிப் அப்படியே வெர்ஸ்டப்பன் பக்கம் திரும்பிவிட்டதாகத்தான் எல்லோரும் நினைத்தார்கள். பிரேசிலில் நடந்த சம்பவங்களும் அதையே உணர்த்தின.

இந்த சீஸனின் கடைசி ‘ஸ்பிரின்ட்’ பிரேசிலில் அரங்கேறியது. அதற்கான தகுதிச் சுற்றுகள் தொடங்குவதற்கு முன்பே, புதிய இன்ஜின் எடுத்ததால், பிரதான ரேஸுக்கு 5 இடங்கள் பெனால்ட்டி கொடுக்கப்பட்டது. ஸ்பிரின்ட்டுக்கான தகுதிச் சுற்றில் அட்டகாசமாகச் செயல்பட்டு முதலிடம் பிடித்தார் ஹாமில்ட்டன். ஆனால், அவர் கார் DRS தொழில்நட்பத்துக்கான விதிகளுக்குட்படாமல் இருந்ததால், தகுதிச் சுற்றிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மெயின் ரேஸுக்கான இடத்தை நிர்ணயிக்கும் ஸ்பிரின்ட்டை கடைசி இடத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்பிரின்ட்டுக்கான போல் பொசிஷனில் அமர்ந்திருப்பது மேக்ஸ். போதாதா! சீஸன் முடிந்துவிட்டதாகவே தோன்றியது. ஆனால், அது ஹாமில்ட்டன் ஆயிற்றே!

ஸ்பிரின்ட்டின் 24 லேப்களிலும் புயலாகப் பறந்தார். ஒவ்வொரு காரையும் ஜஸ்ட் லைக் தட் கடந்தார். ஃபெர்னாண்டோ அலோன்சோ, செபாஸ்டியன் வெட்டல், கிமி ராய்க்கோனன் போன்ற ஜாம்பவான்களால்கூட அவரைத் துளியும் கட்டுப்படுத்த முடியவில்லை. இளம் வீரர்களால் என்ன செய்துவிட முடியும்! எப்போதும் கடுமையாகப் போட்டியளிக்கும் லாண்டோ நாரிஸ்கூட, கொஞ்சமும் யோசிக்காமல் விலகி அவருக்கு வழி கொடுத்தார். பெருக்கெடுத்துப் பாய்ந்து வரும் அந்தக் காட்டாற்றை அடக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். நான்காம் இடத்துக்காக செர்ஜியோ பெரஸுடனேயே போட்டியிடும் அளவுக்கு முன்னேறினார் நடப்பு சாம்பியன்.

ஸ்பிரின்ட்டில் ஐந்தாவது இடம் பிடித்தவர், பிரதான ரேஸை பத்தாவது இடத்திலிருந்து தொடங்கினார். முந்தைய நாளின் பாய்ச்சல், அன்றும் தொடர்ந்தது. ஒவ்வொரு லேப்பிலும் தன் மொத்த உயிரையும் கொடுத்தார். முதல் லேப்பிலேயே ஏழாவது இடத்துக்கு முன்னேறியவர், மூன்றாவது லேப்பில் ஐந்தாவது இடத்துக்கு வந்துவிட்டார். 19-வது லேப்பில் செர்ஜியோ பெரஸையும் முந்தி இரண்டாவது இடத்துக்கே முன்னேறிவிட்டார். 48-வது லேப்பில் வெர்ஸ்டப்பனையும் முந்தியிருப்பார். ஆனால், நான்காவது திருப்பத்தில் வெர்ஸ்டப்பன் டிராக்கிலிருந்து வெளியே செல்ல, திரும்ப முடியாத காரணத்தால் ஹாமில்ட்டனும் வெளியே செல்லவேண்டியதானது. இருந்தாலும், 59-வது லேப்பில் மேக்ஸை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார். அதன்பிறகு அவரை யாராலும் தடுக்க முடியவில்லை. கத்தாரிலும் அது தொடர, அடுத்தடுத்து இரண்டு ரேஸ்களை வென்று, சாம்பியன் பட்டத்துக்கான இடைவெளியையும் குறைத்துவிட்டார்.

தொடர்ந்து அதிகரித்த இடைவெளிக்கு மத்தியில், புதிய இன்ஜினுக்கு பெனால்டி, குவாலிஃபயரில் தகுதி நீக்கம் என ஹாமில்ட்டனுக்கு இருந்த நெருக்கடி சாதாரணமானது அல்ல. ஆனால், ஒரு சாம்பியன் அந்தத் தடைகளையெல்லாம் உடைத்து மீண்டும் கெத்தாக தன் அரியணையில் அமர்வான் என்பதை நிரூபித்தார் அவர்.

Type 3: ரேஸ்: கத்தார் கிராண்ட் ப்ரீ; சாம்பியன்: ஃபெர்னாண்டோ அலோன்சோ

2014-ன் கடைசி 8 ரேஸ்களில் போடியம் ஏறவில்லை. அடுத்த 4 ஆண்டுகள் வேறு அணியில். 77 ரேஸ்களில் பங்கேற்றும் ஒரு முறைகூட டாப்-3 இடங்களுக்குள் முடிக்க முடியவில்லை. ஓய்வு அறிவித்து, இரண்டு ஆண்டுகள் ஒதுங்கியும் இருந்துவிட்டு, மீண்டும் களத்துக்குள் நுழைகிறார். புள்ளிகள் எடுத்தாலும், 19 ரேஸ்களாக போடியம் வசப்படவில்லை. ஆக, கடந்த 7 ஆண்டுகளாக, 104 ரேஸ்களாக போடியம் ஏற அவரால் முடியவில்லை. சாதாரண வீரராக இருந்திருந்தால் பரவாயில்லை. இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒருவருக்கு இது எப்படி இருக்கும்? இத்தனை பின்னடைவுகள் இருந்தபோதும், ஃபெர்னாண்டோ அலோன்சோ சோர்ந்து விடவில்லை. 40 வயதிலும் தன் காரைச் செலுத்திக் கொண்டே இருந்தார். இதோ, கத்தாரின் முதல் ரேஸில் 89-வது முறையாக போடியம் ஏறிவிட்டார்.

இந்தக் காலத்து ரசிகர்களையும் கட்டிப்போடும் வகையில் இன்னும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார் அலான்சோ. ஹங்கேரியில் ஹாமில்ட்டனுக்குத் தண்ணி காட்டியது ஒரு மகத்தான சம்பவம் என்றால், கத்தார் டிராக் பல டயர்களைப் பஞ்சராக்கிக்கொண்டிருந்தபோது, ஒரேயொரு பிட் ஸ்டாப் மட்டும் எடுத்து, தன் டயர்களையும் சிறப்பாகக் கையாண்டது மாஸ்டர் ஸ்ட்ரோக். தகுதிச் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு ஐந்தாம் இடம் பிடித்தவர், மூன்றாவதாக வந்து அசத்தினார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும், ஒரு சாம்பியனின் கிளாஸ் மறைவதில்லை என்பதை நிரூபித்தார் அலோன்சோ.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீ டாப் 5

1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் ரெட்புல் ரேஸிங்

2. லூயிஸ் ஹாமில்ட்டன் மெர்சீடிஸ்

3. செர்ஜியோ பெரஸ் ரெட்புல் ரேஸிங்

4. பியர் கேஸ்லி ஆல்ஃபா டூரி

5. சார்ல் லெக்லர்க் ஃபெராரி

சாவ் பாலோ கிராண்ட் ப்ரீ டாப் 5

1. லூயிஸ் ஹாமில்டன் மெர்சீடிஸ்

2. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் ரெட்புல் ரேஸிங்

3. வால்ட்டேரி போட்டாஸ் மெர்சீடிஸ்

4. செர்ஜியோ பெரஸ் ரெட்புல் ரேஸிங்

5. சார்ல் லெக்லர்க் ஃபெராரி

கத்தார் கிராண்ட் ப்ரீ டாப் 5

1. லூயிஸ் ஹாமில்ட்டன் மெர்சிடீஸ்

2. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் ரெட்புல் ரேஸிங்

3. ஃபெர்னாண்டோ அலோன்சோ ஆல்பைன்

4. செர்ஜியோ பெரஸ் ரெட்புல் ரேஸிங்

5. எஸ்டபன் ஓகான் ஆல்பைன்

தன் சொந்த மண்ணில் போடியம் ஏறி அசத்தினார் ரெட்புல் ரேஸிங் வீரர் செர்ஜியோ பெரஸ். மெக்ஸிகோ டிராக்கில், ஒரு ரேஸில் முன்னிலை வகித்த முதல் மெக்ஸிகோ வீரர், போடியம் ஏறிய முதல் மெக்ஸிகோ வீரர் போன்ற சாதனைகளையும் படைத்தார். சுமார் 3.7 லட்சம் ரசிகர்கள் அவர் பெயரை ஒவ்வொரு நிமிடமும் முழங்கிக்கொண்டே இருக்க, கடைசி லேப் வரை ஹாமில்ட்டனுக்குக் கடுமையான போட்டியாக விளங்கினார் அவர். 1 நொடி இடைவெளியில்தான் இரண்டாம் இடம் தவறியது.

டிரைவர் சாம்பியன்ஷிப் (டாப் 5)

1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் 351.5

2. லூயிஸ் ஹாமில்ட்டன் 343.5

3. வால்ட்டேரி போட்டாஸ் 203

4. செர்ஜியோ பெரஸ் 190

5. லாண்டோ நாரிஸ் 153

அணிகள் சாம்பியன்ஷிப் (டாப் 5)

1. மெர்சிடீஸ் 546.5

2. ரெட்புல் 541.5

3. ஃபெராரி 297.5

4. மெக்லரன் 258

5. ஆல்பைன் 137