சினிமா
தொடர்கள்
Published:Updated:

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

கால்பந்துத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
கால்பந்துத் திருவிழா

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் உட்பட மொத்தம் 32 அணிகள் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு அணிகள்.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

தங்கமாக மின்னும் அந்த வெற்றிக்கோப்பையின் மேற்பகுதியில் தங்கத்தினாலேயே ஆன பூமிப்பந்தைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அது ஒரு குறியீடு. உலகமே கொண்டாடப்போகும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவிற்கான அங்கீகாரம் அது. ஆம், அளவில் சிறிய நாடான கத்தார், இந்தப் பூமிப்பந்தின் உச்சபட்ச கொண்டாட்டமான கால்பந்து உலகக்கோப்பையை நடத்தவிருக்கிறது. மிகவும் பிரமாண்டமாக நவம்பர் 20-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் டிசம்பர் 18 வரை நடைபெற இருக்கிறது.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!


2018-ல் ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி வென்றிருந்தது. யாரும் எதிர் பாராதவிதமாக குரோஷியா இறுதிப்போட்டி வரை முன்னேறி ரன்னர் அப் ஆகி ஆச்சர்யம் அளித்திருந்தது. உலகக்கோப்பையைப் பொறுத்தவரை பிரேசிலே அதிக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பிரேசில் இதுவரை 5 முறை உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால், 2002-க்குப் பிறகு பிரேசில் கோப்பையை வெல்லவே இல்லை. 20 ஆண்டுக்கால ஏக்கத்தை பிரேசில் இந்த முறை தீர்க்குமா? ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பெரிய அணிகள் என்ன மாதிரியான சவாலை அளிக்கப் போகின்றன? ஓய்வை அறிவித்துவிட்டு கடைசி உலகக் கோப்பையில் ஆடும் மெஸ்ஸிக்காக அர்ஜென்டினா சாதிக்குமா? இப்படியாக ஏகப்பட்ட கேள்விகளையும் சுவாரஸ்யங்களையும் இந்த உலகக்கோப்பை ஒளித்து வைத்திருக்கிறது.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் உட்பட மொத்தம் 32 அணிகள் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு அணிகள். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘ரவுண்ட் ஆஃப் 16' என்கிற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அங்கிருந்து அடுத்து எட்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். லீக் சுற்றுகளுக்குப் பிறகு எல்லாமே நாக் அவுட்தான் என்பதால் போட்டிகள் ரொம்பவே பரபரப்பாக இருக்கக்கூடும்.

குரூப் A-வில் கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. நெதர்லாந்து அணி ஒரு முறைகூட கோப்பையை வெல்லாவிட்டாலும் மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அணி. ரஷ்யாவில் நடந்த கடந்த உலகக்கோப்பைக்கு அந்த அணியால் தகுதிபெற முடியாமலும் போயிருந்தது. குரூப் சுற்றுகளில் நெதர்லாந்து எப்போதுமே சிறப்பாக ஆடும் அணி. மேலும், கடைசியாக ஆடியிருக்கும் 15 போட்டிகளில் தோல்வியையே தழுவவில்லை என்கிற மிரட்டலான ரெக்கார்டுடன் இந்த முறை களமிறங்குவதால் இந்த குரூப்பிலிருந்து நெதர்லாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. நெதர்லாந்தைக் கடந்து செனகல் அல்லது ஈக்வடார் ரவுண்ட் ஆஃப் 16-க்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. போட்டியை நடத்தும் கத்தார் நாடு முதல் சுற்றோடு ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

குரூப் B-யில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. It's Coming home என யூரோவில் கடந்த ஆண்டு இத்தாலியிடம் உதைபட்டிருந்தாலும் இங்கிலாந்து வலுவான அணியே. இங்கிலாந்து அணியின் கேப்டன் கேரி கேன்தான் கடந்த உலகக் கோப்பையில் ‘Golden Boot' விருதை வென்றிருந்தார். இந்த முறையும் அவர் முக்கியத் துருப்புச்சீட்டாக இருப்பார். இங்கிலாந்து போக ஆசியாவிலிருந்து தகுதிபெற்றிருக்கும் ஈரான், ரவுண்ட் ஆஃப் 16-க்குச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

குரூப் C-யில் அர்ஜென்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. சந்தேகமே இல்லாமல் அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்குத் தகுதிப்பெறும். மெஸ்ஸிக்காக அர்ஜென்டினா அணி வெல்ல வேண்டும் என்கிற துடிப்பைக் காட்டக்கூடும். சர்வதேசக் கால்பந்தில் பெரிய வெற்றிகளைக் குவிக்கவில்லை எனும் மெஸ்ஸி மீதான விமர்சனங்களுமே கடந்த ஆண்டில் கோபா அமெரிக்கத் தொடரை அர்ஜென்டினா வென்ற பிறகு முடிவுக்கு வந்துள்ளன. 1986-ல் மெக்சிகோவில் மரடோனா சாதித்து அர்ஜென்டினா கோப்பையை வென்றிருந்தது. அதன்பிறகு 2014-ல் இறுதிப்போட்டியில் தோற்றிருந்தார்கள். இந்த முறை மெஸ்ஸிக்காக, மறைந்த மரடோனாவுக்காக என்று பலருக்காகவும் அர்ஜென்டினா வெல்ல வேண்டியிருக்கிறது. அர்ஜென்டினாவுடன் மெக்சிகோ அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற வாய்ப்பிருக்கிறது.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

குரூப் D-யில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, துனிஷியா, டென்மார்க் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் இந்த குரூப்பிலிருந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்குச் செல்லக்கூடும். சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பாலோன் தி’ஓர்' விருதை வென்றிருக்கும் கரீம் பென்சமா மற்றும் PSG அணிக்காகக் கலக்கிவரும் எம்பாப்பே ஆகியோர் அந்த அணிக்குப் பெரும்பலமாக இருக்கக்கூடும். பிரான்ஸுடன் இணைந்து டென்மார்க்கும் ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறக் கூடும்.

குரூப் E-யில் ஸ்பெயின், ஜெர்மனி, கோஸ்டாரிகா, ஜப்பான் போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகள் முன்னாள் சாம்பியன்கள். ஆக, அவர்களே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்த வாய்ப் பிருக்கிறது. ஜெர்மனியின் ஸ்ட்ரைக் கர்கள் அந்த அணிக்குப் பெரும்பலமாக இருக்கக்கூடும். இந்த இரு அணிகளைக் கடந்து ஜப்பான் அணி நல்ல ஃபார்மில் இருப்பதால், அவர்களுமேகூட ஏதாவது ட்விஸ்ட் கொடுத்தாலும் ஆச்சர்யப்படு வதற்கில்லை.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

குரூப் F-ல் பெல்ஜியம், கனடா, குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. பெல்ஜியம் கடந்த முறை மூன்றாவது இடம் பிடித்திருந்தது. குரோஷியா ரன்னர் அப் ஆகியிருந்தது. இந்த இரண்டு அணிகளுக்குத்தான் அடுத்த சுற்று வாய்ப்பும் அதிகமிருக்கிறது. டீ ப்ரூனே, லூகாகூ போன்ற வீரர்கள் பெல்ஜியத்திற்கு பலமாக இருக்கக்கூடும். கடந்த முறை ‘Golden Ball' விருதை வென்ற லூகா மாட்ரிக் இந்த முறையும் முக்கிய வீரராக குரோஷியாவிற்கு இருக்கக்கூடும்.

குரூப் G-யில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் போன்ற அணிகள் இருக்கின்றன. பிரேசிலின் 20 ஆண்டுக்கால ஏக்கத்தைத் தீர்த்து மீண்டும் அந்த அரியணையில் ஏற்றும் பொறுப்பு நெய்மார், தியாகோ சில்வா போன்றோர் வசமே இருக்கிறது. பிரேசிலைத் தாண்டி சுவிட்சர்லாந்து அல்லது செர்பியா அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறக்கூடும்.

32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!
32 அணிகள் கொண்டாடும் கால்பந்துத் திருவிழா!

குரூப் H-ல் கானா, உருகுவே, தென் கொரியா, போர்ச்சுகல் போன்ற அணிகள் இருக்கின்றன. 2002-லிருந்து போர்ச்சுகல் அணி தொடர்ந்து உலகக்கோப்பைக்குத் தகுதிபெற்று வருகிறது. ஆயினும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிட்டவே இல்லை. ரொனால்டோவுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரின் கடைசி உலகக்கோப்பையாகக் கூட இருக்கலாம். ரொனால்டோவின் அதி சிறப்பான ஆட்டத்தை இந்த முறை காண வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கத்தாரில் மட்டுமல்ல, உலகமெங்குமே வரவிருக்கும் ஒரு மாதத்திற்குக் கால்பந்தின் கொடிதான் உயரப் பறக்கப் போகிறது. இந்தக் கொண்டாட் டத்தின் உச்சமாக மினுமினுக்கும் உலகக்கோப்பையை வெல்லப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.