Election bannerElection banner
Published:Updated:

`ஒலிம்பிக் சந்தோஷத்துல ரெண்டு பேரும் அழுதுட்டோம்!' - நெகிழும் பவானி தேவியின் அம்மா

பவானி தேவி
பவானி தேவி

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சுப் பிரிவில் பங்கேற்கவிருக்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது சிறப்பு.

``ஆறாவது படிச்சுட்டு இருந்தப்போ க்ளாஸை கட் அடிக்கிறதுக்காக விளையாட்டுப் போட்டிக்கு பெயர்கொடுக்க நினைச்சேன். `மற்ற விளையாட்டுகளுக்கு ஆட்களை சேர்த்தாச்சு. வாள்சண்டை போட்டியில் கலந்துக்கிறியா?'னு கேட்டாங்க. வேற வழியில்லாமல் பெயர் கொடுத்தேன். இப்போ, அதுவே எனக்கான அடையாளமா மாறியிருக்குது" - 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தபோது, விகடனுக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறியிருந்தார் பவானி தேவி.

பவானி தேவி
பவானி தேவி
பவானியின் வாள்... ஒலிம்பிக் சவால்!

விளையாட்டாக ஆரம்பித்த இந்த விளையாட்டுப் பயணத்தில் பவானி தேவி கொட்டிய உழைப்பும் செலுத்திய கவனமும் இன்று அவரை ஒலிம்பிக் வரை கொண்டு சேர்த்திருக்கிறது. ஆம்! ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று வியக்க வைத்திருக்கிறார் பவானி தேவி. அவர் தற்போது இத்தாலியில் பயிற்சியில் இருக்கிறார். அவரின் அம்மா ரமணியிடம் வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

``ரெண்டு பையன், மூணு பொண்ணுனு எங்களுக்கு அஞ்சு பிள்ளைங்க. பவானிதான் கடைக்குட்டி. ஆறாவது படிக்கும்போதுதான் பவானிக்கு வாள்வீச்சு விளையாட்டே அறிமுகமாச்சு. அடுத்த வருஷமே கோல்டு மெடலோட வந்தா. பிறகு, கலந்துகிட்ட போட்டிகள்ல மெடல் அடிக்காம விட்டதே இல்ல. தோல்வி அவகிட்ட எப்பவாச்சும்தான் வரும். வெற்றியை எப்பவும் தன்னைவிட்டுப் போக விடமாட்டா.

2009-ல் துருக்கியில நடந்த காமன்வெல்த் போட்டியில வெண்கலப் பதக்கமும், 2014-ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில வெள்ளிப் பதக்கமும் வென்றாள். ஒருபக்கம் அவ மெடல் வாங்கி முன்னேறி போய்கிட்டே இருக்கிறது சந்தோஷமா இருந்தாலும், அதற்கு ஆகுற செலவை எங்களால சமாளிக்க முடியலை.

அம்மாவுடன் பவானி தேவி
அம்மாவுடன் பவானி தேவி

`இவ்வளவு செலவு பண்றியே... இதனால என்ன யூஸ்?'னு என் வீட்டுக்காரர் கேட்பார். `பல லட்ச ரூபா செலவழிச்சு டாக்டருக்குப் படிக்க வைக்கிறதுதான் யூஸா? பிடிச்ச விளையாட்டுக்குச் செலவு பண்ணக்கூடாதா? அவ நிச்சயம் ஒருநாள் சாதிப்பா'ன்னு அவர்கிட்ட சொல்லுவேன். அது இன்னைக்கு நடந்திருக்கு. ஆனா அதைப் பார்க்க என் வீட்டுக்காரர் இப்போ உயிரோட இல்லை. போன வருஷம் உடல்நிலை சரியில்லாம இறந்துட்டார்" - சொல்லும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது ரமணிக்கு.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார் ரமணி. ``2015-ம் ஆண்டு வரை எங்களோட சொந்த செலவுதான். அதற்கு முன்பு 2007-ல் ஒரு போட்டியில கலந்துக்குறதுக்கு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக அரசின் சார்பாக உதவி செஞ்சார். 2008-ம் ஆண்டு ஆட்சியில் இல்லைன்னாலும் ஜெயலலிதா அம்மா கூப்பிட்டு ஒரு போட்டிக்காக உதவி செஞ்சாங்க. 2014-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில வெள்ளிப் பதக்கம் வென்றிருந்ததால 2016-ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா அம்மா ஆட்சிக்கு வந்ததும் நேர்ல அழைச்சு பாராட்டினாங்க. பாராட்டினதோடு மட்டுமல்லாம `ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டு ஆஃப் இந்தியா'வுல சேர்ந்து பயிற்சி எடுக்குறதுக்கும் உதவி செஞ்சாங்க. அதற்குப் பிறகுதான், என் மகளோட விளையாட்டுக்கு ஆகுற செலவைப் பத்தின பயம் எங்களைவிட்டு விலகுச்சு. இந்த நேரத்துல அவங்களை நன்றியோட நினைச்சுப் பார்த்துக்குறேன்.

`நம்ம பணமா இருந்தாலும் பரவாயில்ல, அரசாங்கம் மக்கள் பணத்தை நமக்காகச் செலவு பண்ணும்போது நம்மளோட பொறுப்பு இன்னும் அதிகம்மா...'னு சொல்லி பவானியை மோட்டிவேட் பண்ணிட்டே இருப்பேன். 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று, அரசு அவ மேல வெச்ச நம்பிக்கையைக் காப்பாற்றினா. இப்போ ஹங்கேரியில் நடந்து வரும் வாள்வீச்சு உலகக் கோப்பையில் கால் இறுதிப் போட்டியில் தோல்வி அடைஞ்சதும் போன் பண்ணி கதறி அழுதா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

பவானி தேவி
பவானி தேவி

இருந்தாலும் ஆண்டவன் கைவிட மாட்டான்னு நம்பினோம். இப்போ ரேங்கிங் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருக்கா. இதை சொல்றதுக்கு நேத்து சாயங்காலம் போன் பண்ணின பவானி, முதல்ல ஓ...ன்னு அழுதா. நான் பதறி, `என்னாச்சு, ஏன்டி அழுவுற?'ன்னு கேட்டேன். `நான் ஒலிம்பிக்குக்கு செலக்ட் ஆகிட்டேம்மா'ன்னு சொன்னாள். எனக்கும் அழுகை வந்துருச்சு. 15 வருஷ கனவு நனவாகியிருக்குற தருணம் இது. பவானி தேவி நிச்சயம் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கித் தருவான்னு நம்பிக்கை இருக்கு" என்றார் பெருமையுடன்.

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சுப் பிரிவில் பங்கேற்கவிருக்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது சிறப்பு. உலக அரங்கில் வெற்றிபெற்று வரட்டும் நம் தமிழ்மகள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு