Published:Updated:

`டாக்டர் சீட் கிடைத்தது, வேண்டாம்னு துப்பாக்கிப் பயிற்சி செய்தாள்'-பூரிக்கும் இளவேனில் தாத்தா பாட்டி

ஜி.சதாசிவம்
எஸ்.தேவராஜன்

உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற கடலூர் காராணிகுப்பத்தைச் சேர்ந்த இளவேனிலின் தாத்தா பாட்டி, `அவர் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்பார்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சகோதரர் இறைவனுடன் இளவேனில்.
சகோதரர் இறைவனுடன் இளவேனில்.

கடலூர் மாவட்டம், காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் உருத்திராபதி (84). ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர். இவரின் மனைவி கிருஷ்ணவேணி ( 74). இவர்களுக்கு வாலறிவன் என்கிற மகன் உள்ளார். இவரின் மனைவி சரோஜா. இவர்களுக்கு இறைவன் என்கிற மகனும் இளவேனில் என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இளவேனில் தற்போது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கோச்சுடன் இளவேனில்
கோச்சுடன் இளவேனில்

இளவேனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3 வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் வசித்து வரும் இளவேனிலின் தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``எங்கள் மகன் வாலறிவன். அவரின் மனைவி சரோஜா கன்னியாகுமரி மாவட்டம் இடையன்விளையைச் சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இறைவன் ( 24) என்கிற மகனும் இளவேனில் (19) என்கிற மகளும் உள்ளனர்.

இளவேனில் தாத்தா உத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி
இளவேனில் தாத்தா உத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி
Vikatan

எங்களள் பேத்தி இளவேனில் கடலூரில் பிறந்தார். அதன் பிறகு, என் மகன் வாலறிவன் குஜராத் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளனர். மேலும், எங்கள் மருமகள் சரோஜா குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார். பேரன் இறைவன் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இறைவன் துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி பெற்று சிறப்பாகத் துப்பாக்கிச் சுடுவார்.

இதைப் பார்த்த எங்கள் பேத்தி இளவேனில் 7-ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் நானும் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடப் போகிறேன் என ஆர்வமாகக் கூறினார். அதன்படி என் மகன் வாலறிவன் தன் மகளுக்கு ஆசையான துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். பின்பு, இளவேனில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டார். அவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் டாக்டர் மற்றும் இன்ஜினீயரிங் படிப்புக்கான சீட் கிடைத்தது. ஆனால், அந்தத் துறை படிப்பில் கவனம் செலுத்தினால் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாது என இளவேனில் எண்ணிக்கொண்டு அந்தப் படிப்பை தவிர்த்துவிட்டார். தற்போது இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் துப்பாக்கிச் சுடும் போட்டிகள் ஜப்பான், மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பரிசுகள் பெற்றுள்ளார்.

சகோதரர் இறைவனுடன் இளவேனில்
சகோதரர் இறைவனுடன் இளவேனில்

ஒவ்வொரு முறையும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும்போது நாங்கள் சாதனை புரிய வேண்டும் என ஊக்கம் அளித்து வந்தோம். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றார். தற்போது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் எங்கள் பேத்தி இளவேனில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் வருங்காலங்களில் இளவேனில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இளவேனிலுக்கு நாங்கள் தங்கப் பரிசு கொடுக்க உள்ளோம்'' என்றனர்.