கட்டுரைகள்
Published:Updated:

கனவிலிருந்து களத்துக்கு...

டிரீம்11
பிரீமியம் ஸ்டோரி
News
டிரீம்11

10 ரூபாயை உங்களிட மிருந்து பெற்று 100 பேர் கொண்ட ஒரு குழுவில் சேர்த்துவிடுவார்கள். மொத்தம் டிரீம்11-க்குக் கிடைப்பது 1,000 ரூபாய்.

அடுத்த மாதம் தொடங்க விருக்கும் ஐபிஎல்லின் 13-வது எடிஷனுக்கான ஸ்பான்சர்ஷிப்புக்காக பைஜூஸ், டாட்டா, பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் பங்கேற்ற ஏலத்தில், 222 கோடி ரூபாய்க்கு இந்த வருடத்திற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் ஷிப்பை வென்றிருப்பது பேன்டஸி ஸ்போர்ட்ஸ் தளமான டிரீம்11.

நம்மில் பெரும்பாலானோர் டிரீம்11 பற்றி கடந்த ஐந்து வருடங்களில்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டிரீம்11, 2008-லேயே தொடங்கப்பட்டுவிட்டது. ஹர்ஷ் ஜெயின், பவித் சேத் தொடங்கிய டிஜிட்டல் ஸ்டார்ட்-அப் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் தளம் . களத்தில் விளையாட்டு நடந்து கொண்டிருக்க, அதிலிருக்கும் வீரர்கள் எப்படி ஆடுவார்கள் எனக் கணித்துப் பார்வை யாளர்கள் ஆடும் விளையாட்டைத்தான் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் என்கின்றனர்.

கனவிலிருந்து களத்துக்கு...

இப்போது பார்க்கும் டிரீம்11-ன் ஃபார்மேட் அப்போது கிடையாது. சாம்பியன்ஸ் லீக் போன்ற கால்பந்துத் தொடர்கள் பின்பற்றிய ஃபார்முலா. லட்சக்கணக்கான பேர் பங்கேற்கும் இதில் வெற்றிபெறும் சிலருக்கு மட்டும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். இந்த ஃபார்மூலா இந்தியாவில் கைகொடுக்கவில்லை. ஐபிஎல்லும் தனது சொந்த ‘பேன்டஸி லீக்’ தளத்தை ஆரம்பித்துவிட்டது. இனி இந்த ஃபார்முலா வேலைக்காகாது என்பது ஹர்ஷ் ஜெயினுக்கும் புரிந்தது. ‘10,15 பேர் மட்டும் ஜெயிக்கும் ஒரு விளையாட்டை இளை ஞர்கள் ஒரு தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆட வேண்டும் எனச் சொல்வது எப்படி வொர்க்-அவுட் ஆகும்’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு போட்டியாக விளையாட வாய்ப்பு தரவேண்டும். போட்டி யாளர்கள் பரிசு பெறும் வாய்ப்பும் அதிகரிக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார். இதற்கு விளம்பரங்களை நம்பினால் வேலைக்கு ஆகாது என வாடிக்கையாளர்களிடமிருந்தே பணம் பெற முடிவு செய்தார்.

10 ரூபாயை உங்களிட மிருந்து பெற்று 100 பேர் கொண்ட ஒரு குழுவில் சேர்த்துவிடுவார்கள். மொத்தம் டிரீம்11-க்குக் கிடைப்பது 1,000 ரூபாய். இதில் முதல் சில இடங்கள் வருபவர்களுக்கு இந்தத் தொகையைப் பிரித்துக் கொடுத்து விடுவார்கள். ஒரு பங்குத் தொகையை டிரீம்11 எடுத்துக் கொள்ளும். இதுதான் பிசினஸ் மாடல். இது செம ஹிட். ஆயிரங்களில் பயனாளர்களைக் கொண்ட டிரீம்11 இன்று கோடிகளில் பயனாளர் களைக் கொண்டுள்ளது. ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஸ்டார்ட்-அப்களை ‘யூனிகார்ன்’ என அழைப்பர். இந்தியாவின் முதல் கேமிங் யூனிகார்ன் டிரீம்11தான்.

கனவிலிருந்து களத்துக்கு...

ஆனால் இதெல்லாம் பார்த்தால் சூதாட்டம் போல இருக்கிறதே எனக் கேட்கிறீர்களா? இந்திய அரசு சூதாட்டத்தை எப்படி வரையறுக்கிறது தெரியுமா? ‘எந்தவிதத் திறனும் ஆராய்ச்சியும் இல்லாமல் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அதன் மூலம் பணம் வென்றால் அது சூதாட்டம்’ என்கிறது சட்டம். இந்தச் சட்டம்தான் டிரீம்11-ஐக் காப்பாற்றி வருகிறது. டிரீம்11-க்குத் தடைகேட்டு ஏற்கெனவே நீதிமன்றம் ஏறியிருக் கிறார்கள். ஆனால், டிரீம்11-ல் வெல்ல அதிர்ஷ்டம் மட்டும் போதாது. கிரிக்கெட் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் தேவை என வழக்குகளைத் தள்ளுபடி செய்து விட்டன நீதி மன்றங்கள். டிரீம்11-ம் தெளிவாக இதனால் தான் தோனியை வைத்து “கேலோ திமாக் சே” என விளம்பரம் செய்தது. ‘புத்தியை வைத்து ஆடு’ என இது பொருள்படும். இருந்தும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சூதாட்டத்தை ஊக்கப்படுத் துகிறது என்ற குற்றச்சாட்டு டிரீம்11 மீது இன்னும் இருக்கவே செய்கிறது. தங்களது விதிமுறைகளை மீறுகிறது எனக் கூகுள் பிளேஸ்டோர் டிரீம்11-ஐ இதுவரை அனுமதிக்க வில்லை. டிரீம்11 இணைய தளத்தில்தான் செயலியைப் பதிவிறக்க வேண்டும்.

இதில் முதல் பரிசைப் பெற்றவர்கள் உண்மையில் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வியும் அடிக்கடி எழும். ஒரு அணி வெல் வதற்கு எத்தனை சாத்தியங்கள் இருக்கின்ற னவோ அத்தனைக்கும் டிரீம்11-ஏ செயற்கை நுண்ணறிவு bots மூலம் அணிகளை உருவாக்கி மனிதர்களுடன் ஆட வைக்கிறது. இப்படிச் செய்வதால் அதிகபட்ச பரிசுத் தொகையை டிரீம்11-ஏ வைத்துக் கொள்கிறது என்பது அதன்மீது இருக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. டிரீம்11 தரப்பு இதைப் பலகாலமாக மறுத்து வருகிறது. ஆனால் உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது.

கனவிலிருந்து களத்துக்கு...

இப்படிக் குற்றச் சாட்டுகள் இருந்தாலும் பயனாளர்களைத் தொடர்ந்து பெருமளவில் ஈர்த்துவருகிறது டிரீம்11. இந்த ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் டீல் டிரீம்11-க்கு முக்கிய ஜாக் பாட். விவோ கொடுத்துவந்த தொகையில் பாதி விலைக்கு இந்த டீலை முடித்திருக்கிறது. இதனால் இதன் மதிப்பு 1.1 பில்லியன் டாலரிலிருந்து அடுத்த ஆண்டுக்குள் இரு மடங்கு உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஒரு கிரிக்கெட் போட்டி பார்த்தால் டிரீம்11 விளம்பரம் இல்லாமல் பார்க்கவே முடியாது. இனி டிரீம்11-ஐக் கண்ணில் பார்க்காமல் கிரிக்கெட்டே பார்க்க முடியாது போல!