உலகின் நம்பர் 1 ஆடவர் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார். அண்மையில் பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், தான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்லன் எனவும், அதேசமயம் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும்பட்சத்தில் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்காக, தன்னை தடுப்பூசி எதிர்ப்பாளன் எனக் கருதாமல், தனிநபர் உரிமையை ஆதரிக்கும் ஒருவனாகக் கருதுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால், அண்மையில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில், அவர் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. விசாவும் ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டார்.
இந்நிலையில், ``நான் தடுப்பூசிக்கு ஒருபோதும் எதிரானவன் அல்லன். சிறுவயதில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், நம் உடலில் எதைச் செலுத்தப்போகிறார்களோ, அதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை எப்போதும் ஆதரிப்பவன் நான். மேலும் என் உடல் தொடர்பாக நான் எடுக்கும் உரிமைகள் எனக்கு பரிசுக்கோப்பைகளை விடவும் மிக முக்கியம். வரும் காலங்களில், `கட்டாய தடுப்பூசி' விதிகள் மாறும்போது, இன்னும் பல ஆண்டுகள் என்னால் தொடர்ந்து விளையாட முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.

``உலக அளவில், இந்த வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைவரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, எதிர்காலத்தில் எல்லாம் சரியாக இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராவேன்'' என்றும் அவர் பேசியுள்ளார்.