Published:Updated:

`நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்'- பிசிசியிடம் பணிந்த தினேஷ் கார்த்திக்!

மலையரசு

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டி-சர்ட்டை அணிந்ததற்காக பிரச்னைகளை சந்தித்து வரும் தினேஷ் கார்த்திக் தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Dinesh Karthik
Dinesh Karthik ( Twitter/@DineshKarthik )

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன், தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்த இவர், உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வாகவில்லை. இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதைப் பார்க்க தினேஷ் கார்த்திக் சமீபத்தில் சென்றிருந்தார். டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றதுடன், அங்கு அந்த அணியின் ஆடையை அணிந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூட அமர்ந்திருந்தார்.

Dinesh with Trinbago t shirt
Dinesh with Trinbago t shirt
twitter

போட்டி லைவ் நடந்துகொண்டிருக்கும்போது, தினேஷ் கார்த்திக் அங்கே இருப்பது சில விநாடிகள் டி.வி-யில் காட்டப்பட, அதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து ரசிகர்கள் நெட்டில் உலாவவிட்டனர். இந்திய வீரர்கள் வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்றால், பிசிசிஐ-யின் அனுமதி பெறவேண்டியது அவசியம். அப்படி அனுமதிபெற்று பங்கேற்றுதான் அஸ்வின் உள்ளிட்டோர் வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடிவருகின்றனர். அப்படி இருக்கையில், தினேஷ் கார்த்திக் அனுமதி பெறாமல் அதுவும் அந்த அணியின் டி-ஷர்ட்டை எப்படி அணியலாம் என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்ப, விவகாரம் பிசிசிஐ-யின் கவனத்துக்குச் சென்றுள்ளது.

சர்ச்சையான டி-ஷர்ட் போட்டோ!-தினேஷ் கார்த்திக்கிற்கு `show cause' நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பிசிசிஐ `show cause' நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக ஒரு வார காலம் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், ``கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்தான் டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். அவருடைய அழைப்பின் பேரிலேயே நான் அங்கு சென்றேன். அங்கே, நான் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் அங்கே சென்றது தவறுதான். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் பிசிசிஐ இதுதொடர்பாக பதிலளித்த பிறகுதான் இறுதி முடிவு தெரியவரும்.

Dinesh Karthik
Dinesh Karthik
Twitter/@DineshKarthik

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள்தான், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் உரிமையாளர்களும். இந்தப் பந்தத்தில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரைப் பார்க்கச் சென்றவர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றதுடன், அந்த அணியின் ஆடையை அணிந்து தற்போது பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்.