
வித்தியாச விளையாட்டுகள் 4 - Sepak Takraw
ஓர் அறையில் 10 பேரை அடைத்து வைத்து `சுவர்களில் சாக்பீஸால் கோடு கீச்சுவதுதான் உங்களின் வேலை’ எனக் கூறிவிடுவோம். இரண்டு பேர் செங்குத்தான கோடுகளைக் கீச்சுகிறார்களெனில், அவர்களைப் பார்த்து மாற்றவர்களும் அதே விஷயத்தை நகலெடுக்க முற்படுவார்கள். அவர்களும் செங்குத்தாகவே கீச்சுவார்கள். ஆனால், அதே அறையில் குண்டக்க மண்டக்க ‘பார்த்திபன்’ போன்ற ஒரு நபர் இருந்தால் என்ன செய்திருப்பார்? எல்லாருக்கும் எதிர்திசையில் அப்படியே தலைகீழாக கிடைமட்டமான கோடுகளைக் கீச்சியிருப்பார். அதோடு நில்லாமல் 45°, 65° என வித்தியாச வித்தியாசக் கோணங்களில் கோடுகளைக் கீச்சி அசத்தியிருப்பார். தலைகீழாக யோசித்தல் எப்போதுமே சுவாரஸ்யமானதுதான். நாம் இப்போது பார்க்கப்போகும் ‘செபக் டக்ரா’ விளையாட்டுமே அப்படியொரு தலைகீழான சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் இருக்குமோ என மனதில் குறுகுறுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

‘வாலிபால்’ அனைவருக்கும் பரிச்சயமான விளையாட்டுதான். அதேமாதிரிதான், கால்பந்தும். இந்த விளையாட்டுகளைப் பற்றிப் பெரிதாக விவரிக்க வேண்டியதில்லை. ‘வாலிபால்’ கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படுவது. ‘கால்பந்து’ அப்படியே எதிர்மாறாகக் கால்களை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படுவது. இந்த இரண்டையும் கலந்து அதன்பொருட்டு ஒரு விளையாட்டை உருவாக்கினால் அதுதான் ‘செபக் டக்ரா.’ வாலிபாலைப் போன்று நடுப்பகுதியில் வலை கட்டப்பட்ட களத்திலேயே இந்த ஆட்டம் ஆடப்படும். இருதரப்பும் பந்தாடிக்கொள்வதுதான் இதன் மையமும்கூட. ஆனால், வாலிபாலைப் போன்று கையால் பந்தைத் தட்டிவிடாமல், கால்பந்தைப் போன்று காலால் மட்டுமே தட்டிவிட வேண்டும். செபக் டக்ரா எனும் இந்த விளையாட்டிற்கு ‘கிக் வாலிபால்’ அல்லது ‘ஃபுட் வாலிபால்’ எனும் வேறு பெயர்கள் இருப்பதற்கான காரணத்தை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும்.
இரண்டிலிருந்து நான்கைந்து பேர் வரைக்கும் இந்த ஆட்டத்தை ஆட முடியும். வீரர்கள் ஆடும் அந்தக் களம், ‘வாலிபால்’ களங்களைவிட அளவில் கொஞ்சம் சிறியதாக இருக்கும். வலைக்கு இருபக்கங்களிலுமே வீரர்களின் நிலைகளைக் குறிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டிருக்கும். அதனுள்ளேயே வீரர்கள் நிற்க வேண்டும். சர்வ் செய்யும் வீரர் மட்டும் நடுநாயகமாக இருப்பார். சர்வ் மட்டுமல்ல, பந்தை வாங்கி சக வீரர்களுக்கு பாஸ் செய்வது, வலையைத் தாண்டி எதிராளிக்குப் பந்தைத் தட்டிவிடுவது என அத்தனை செயல்பாடுகளுமே காலால்தான். நெஞ்சையும் தலையையும்கூட அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, கைகளை ஒருபோதும் பயன்படுத்திவிடக்கூடாது. ஒரு கேமுக்கு 3 செட்கள். 21 புள்ளிகளை முதலில் எடுக்கும் அணி ஒரு செட்டை வெல்வார்கள். இரண்டு செட்டை வெல்லும் அணி ஆட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படும். புள்ளிகள் வழங்கும் முறை மட்டுமே இந்த ஆட்டத்தில் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. மற்றபடி எல்லாமே தலைகீழ்தான்.

முழுமையாகக் கால்களை மட்டுமே வைத்து ‘வாலிபால்’ மாதிரியான ஆட்டத்தை ஆடுவது அவ்வளவு லேசான காரியம் இல்லை. வழக்கமான ஆட்டங்களைவிட இரட்டிப்பு உடல் வலுவும் திடமும் இதற்குத் தேவைப்படும். ஆக்ஷன் படங்களில் பார்ப்பதைப் போன்ற சாகசமிக்க கிக்குகளையெல்லாம் இந்த செபக் டக்ரா களத்தில் காண முடியும். கால்பந்தில் ‘பைசைக்கிள் கிக்’ என்பது பிரபலமான சிக்னேச்சர் ஷாட். அதற்கு ஒப்ப இங்கே வீரர்கள் நின்ற இடத்திலிருந்தே அப்படியே தலைகீழாகச் சுழன்று ஒரு ஸ்பைக்கை செய்வார்கள். அதில் இருக்கும் துல்லியமும் லாகவமும் பார்ப்போரை கட்டாயம் வியப்பில் ஆழ்த்தும்.
இந்த விளையாட்டுக்கென்று ஒரு சில வரலாற்றுக்கூறுகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சீன தேசத்தில் ஹான் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் ‘க்யூஜா’ எனும் ஆட்டம் ஆடப்பட்டதாகச் சொல்கிறார்கள். தோலினால் செய்யப்பட்ட பந்தைக் காலால் எட்டி உதைப்பதே இந்த விளையாட்டின் அடிப்படை. போருக்குச் செல்லும் வீரர்களின் உடல் வலுவை அதிகரிப்பதற்காக, அவர்களுக்குத் தரும் பயிற்சிகளில் ஒன்றாக க்யூஜாவும் இருந்திருக்கிறது. இந்த க்யூஜா விளையாட்டுதான் அப்படியே மருவி கால்பந்தாக மாறியதாக நம்பப்படுகிறது. எப்படி க்யூஜாவை அடிப்படையாகக் கொண்டு கால்பந்து உருவானதோ அப்படித்தான் ‘செபக் டக்ரா’வும் உருவானதாகக் கூறப்படுகிறது. சீனாவிலிருந்துதான் தென்கிழக்காசிய நாடுகளுக்கெல்லாம் இந்த விளையாட்டு பரவியதாகவும் கூறப்படுகிறது. மலேசியாவில் அவர்களின் தேசிய விளையாட்டு எனக் கூறும் அளவுக்கு இந்த ஆட்டம் பிரபலமாக இருக்கிறது. ‘செபக்’ என்றால் மலாய் மொழியில் உதைத்தல் என்று அர்த்தமாம்.

மரபு முறைப்படி பண்பாட்டோடு ஒன்றியதாக இந்த ஆட்டம் ஆடப்பட்டு வந்தாலும், கடந்த நூறாண்டுகளுக்குள்தான் இதற்கென தனியாக விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டு நவீன ‘செபக் டக்ரா’ ஆடப்பட்டு வருகிறது. 1982-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னோட்டமாக ஆடிக் காட்டப்பட்ட இந்த விளையாட்டு, 1990-ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக இடம்பிடித்தது.
இந்தியாவில் இந்த விளையாட்டு அத்தனை பிரபலமானது கிடையாது என்றாலும் இங்கும் பரவலாக ஆடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 2018-ல் ஆசியப்போட்டியில் இந்திய அணி முதன்முதலாக வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தது. தமிழகத்திலுமே குறிப்பிடத்தக்கவகையில் சில பள்ளிகளில் இந்த விளையாட்டு ஆடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.