Published:Updated:

CWG 2022: துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஏன் இல்லை? இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டையா?

CWG 2022 - அச்சிண்டா ஷியூலி ( Isaac Parkin )

இந்த முடிவு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு நீக்கப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்...

CWG 2022: துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஏன் இல்லை? இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டையா?

இந்த முடிவு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு நீக்கப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்...

Published:Updated:
CWG 2022 - அச்சிண்டா ஷியூலி ( Isaac Parkin )
2022 காமன்வெல்த் போட்டித் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. இதன் முதல் சில நாள்களில் பளுதூக்குதல் உள்ளிட்டப் பல விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்லத் தொடங்கிவிட்டனர். வழக்கமாக இதே சமயத்தில் துப்பாக்கி சுடுதல் வீரர்களும் பதக்கங்களில் நனையத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. காரணம், இந்த காமன்வெல்த் தொடரில் துப்பாக்கி சுடுதல் பந்தயமே இல்லை! இந்த முடிவு குறைந்தபட்சம் இந்தியாவின் 20 பதக்கங்களை அபகரித்திருக்கிறது.

துப்பாக்கி சுடுதல் - இந்தியா ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் அதிமுக்கியமானது. பல்வேறு பிரிவுகள் இருப்பதால் இதில் பல பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த 2018 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற 66 பதக்கங்களில், 16 துப்பாக்கி சுடுதலில் வென்றவை. 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் எனப் பதக்கங்களைக் குவித்தது இந்தியா. இந்தியா அதிக பதக்கங்கள் வென்றது இதில்தான். அந்த காமன்வெல்த் தொடரில் வேறு எந்த அணியும் துப்பாக்கி சுடுதலில் 10 பதக்கங்கள் கூட வெல்லவில்லை. ஒட்டுமொத்த காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றிலும் ஒட்டுமொத்தமாக இந்தியா அதிக பதக்கங்கள் வென்றிருப்பது, அதிக தங்கங்கள் வென்றது துப்பாக்கி சுடுதல் பிரிவில்தான். இந்தியாவின் 503 காமன்வெல்த் பதக்கங்களில் 135ம், 181 தங்கங்களில் 63ம் இதில் வெல்லப்பட்டவையே!

அச்சிண்டா ஷியூலி - பளுதூக்குதலில் தங்கம்
அச்சிண்டா ஷியூலி - பளுதூக்குதலில் தங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி இந்தியா ஆதிக்கம் செலுத்திய ஒரு விளையாட்டு இந்த முறை இல்லை என்பது நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த முடிவு கடந்த 2019ம் ஆண்டே எடுக்கப்பட்டது.

காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற தொடர்களில் அனைத்து விளையாட்டுகளுமே நிரந்தரமானது இல்லை. ஒரு சில விளையாட்டுகள் ஒரு தொடரில் இருக்கும், அடுத்த தொடரில் இருக்காது. அந்தத் தொடர் நடக்கும் இடத்தைப் பொறுத்து சில விளையாட்டுகள் முடிவு செய்யப்படும். இந்த பிரிமிங்ஹம் தொடருக்கு முன்பாக 2019ம் ஆண்டு ஜூன் மாதம் காமன்வெல்த் போட்டிக் குழுவின் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் இந்தத் தொடருக்கான கடைசி 3 விளையாட்டுகளைத் தேர்வு செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அந்தப் போட்டியில் துப்பாக்கி சுடுதல், பீச் வாலிபால், மகளிர் கிரிக்கெட், பாரா டேபிள் டென்னிஸ், வில்வித்தை ஆகிய 5 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதில் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை தவிர மற்ற 3 விளையாட்டுகளும் தேர்வு செய்யப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விளையாட்டுகளை முடிவு செய்த குழு, ஒரு பாரா விளையாட்டு இருப்பது மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பை அதிகப்படுத்தும் என்பதால் பாரா டேபிள் டென்னிஸை தேர்வு செய்திருக்கிறது. மேலும் வணிக நன்மைகள், தொலைக்காட்சி ரசிகர்களுக்கான அனுபவம், பர்மிங்ஹாமின் பெருமை மிகுந்த இடங்களைக் காட்டக்கூடிய வாய்ப்பு, திருவிழா உணர்வு போன்றவற்றைத் தரும் என்பதால் மகளிர் கிரிக்கெட், பீச் வாலிபால் ஆகிய இரண்டு விளையாட்டுகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. பெண்களின் பங்கேற்பு அதிகம் இருக்கும் என்பது மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான கூடுதல் சாதகமாக அமைந்திருக்கிறது. கிரிக்கெட், பீச் வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம், வரவேற்பு போன்றவை துப்பாக்கி சுடுதலுக்கோ, வில்வித்தைக்கோ இல்லாதது அந்த இரண்டு விளையாட்டுகளுக்கும் பாதகமாக அமைந்துவிட்டது.

இந்த முடிவு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு நீக்கப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், காமன்வெல்த் தொடரிலிருந்து இந்தியா வெளியேறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அப்போது மிரட்டலே விடுத்தது. அப்போது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த நரேந்திர பத்ரா இந்த முடிவைக் கடுமையாகச் சாடினார். இது இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் காட்டுவதாக விமர்சித்தார் அவர்.

நரேந்திர பத்ரா
நரேந்திர பத்ரா
"கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தியா எந்த விளையாட்டுகளிலெல்லாம் சிறப்பாகச் செயல்படுகிறதோ, அந்த விளையாட்டுகளிலெல்லாம் ஏதாவது செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஒன்று கோல் போஸ்ட்டை மாற்றுகிறார்கள், இல்லை விதிமுறைகளை மாற்றுகிறார்கள். இது இந்திய ஒலிம்பிக் சங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய நேரம்!"
என்று நரேந்திர பத்ரா கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்தியா காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகுவது பற்றிய முடிவை எடுக்கவேண்டும் என்று அப்போது இந்திய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த கிரென் ரிஜ்ஜுவுக்குக் கடிதம் எழுதினார். துப்பாக்கி சுடுதல் இல்லாதபட்சத்தில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும், பதக்கப் பட்டியலில் இந்தியாவின் இடமும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் தொடரிலிருந்து விலகுவதாகக் கூறியிருந்தாலும் அதன்பிறகு அந்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது இந்திய ஒலிம்பிக் சங்கம். அதற்குப் பதிலாகத் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை இரண்டு விளையாட்டும் அடங்கிய காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை சண்டிகரில் நடத்துவது பற்றிய திட்டத்தை முன்மொழிந்தது. அதை ஏற்றுக்கொண்ட காமன்வெல்த் விளையாட்டுக் குழு, காமன்வெல்த் தொடர் முடிந்து ஒரு வாரம் கழித்து இந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பின் பதக்க எண்ணிக்கையையும் சேர்த்து புதிய பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்தது. இந்தத் தொடர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனாவின் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் இந்த காமன்வெல்த் தொடரில் அந்த இரண்டு விளையாட்டுகளும் எந்த வகையிலும் இருக்கப்போவதில்லை.

இளவேனில் வாலறிவனோடு திவ்யான்ஷ் சிங்
இளவேனில் வாலறிவனோடு திவ்யான்ஷ் சிங்

சௌரப் சௌத்ரி, மனு பாக்கர், இளவேனில் வாலறிவன், அபிஷேக் வெர்மா, அஞ்சும் மோட்கில் என சூப்பர் ஸ்டார்கள் பலரும் இருக்கும் நிலையில் இந்த வருடம் முன்பைவிட துப்பாக்கி சுடுதலில் இந்தியா அதிக பதக்கங்கள் வென்றிருக்கும். அதேசமயம் வில்வித்தை கடந்த 2 காமன்வெல்த் தொடர்களிலும் இடம்பெறவில்லை. 2010 டெல்லி காமன்வெல்த் தொடரில் அந்த விளையாட்டு இடம்பெற்றிருந்தபோது, 2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றிருந்தது இந்தியா.

இந்த விளையாட்டுகளுக்குப் பதில் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற 3 விளையாட்டுகளில் மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணி பங்கேற்கிறது. அதிலும் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பலமான அணிகள் இருப்பதால் அது மிகவும் கடினமானதாகவே இருக்கும். தங்கள் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானுடன் நேற்று நடந்த போட்டியில் வென்றிருக்கிறது. இன்னொரு போட்டியில் மோசமாகத் தோற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையே இந்திய அணி இழந்துவிடும். அதனால், இந்த காமன்வெல்த் தொடருக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் முற்றிலும் இந்தியாவுக்குப் பாதகமாகவே அமைந்திருக்கின்றன.

Elavenil Valarivan | இளவேனில் வாலறிவன்
Elavenil Valarivan | இளவேனில் வாலறிவன்
இந்த காமன்வெல்த் தொடரில் இ-ஸ்போர்ட்ஸும் இடம்பெற்றிருக்கிறது. Dota 2, ராக்கெட் லீக், இ-ஃபுட்பால் என மூன்று விளையாட்டுகள் பர்மிங்ஹாம் தொடரில் நடக்கவிருக்கின்றன. பின்வரும் தொடர்களில் இ-ஸ்போர்ட்ஸை சேர்ப்பதற்கான சோதனை முயற்சியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டிகளுக்குத் தனியாகப் பதக்கங்கள் கொடுக்கப்படும். ஆனால் அவை பதக்கப் பட்டியலில் சேர்க்கப்படாது. இந்தியா சார்பில் இந்தப் பிரிவில் இரண்டு அணிகள் கலந்துகொள்கின்றன. ராக்கெட் லீக் போட்டியில் 3 பேர் கொண்ட அணியும், Dota 2 போட்டியில் 5 பேர் கொண்ட அணியும் கலந்துகொள்கின்றன.