Published:Updated:

`பிள்ளைகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்!’ -மகனின் ஹேர்ஸ்டைலிஸ்டாக மாறிய சச்சின்

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

``தந்தையென்றாலே தன் பிள்ளைக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். அது அவர்களோடு விளையாடுவதாக இருந்தாலும் சரி.. உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி.. ஏன் முடிவெட்டுவதாகக் கூட இருக்கட்டுமே!”

லாக்டௌனில் சலூன் கடைகள் திறக்கத் தடை தொடர்ந்த நேரத்தில் செலிபிரட்டிகள், ஹேர்ஸ்டைலிஸ்ட் அவதாரம் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கணவர்களுக்கு முடிவெட்ட களமிறங்கிய மனைவிகள் முதற்கொண்டு பல அலப்பறைகள் எப்போதோ ஆரம்பித்துவிட்டன. சமூக வலைதளத்தில் இப்போது இதுவே ட்ரெண்டிங்!

முதல்கட்ட லாக்டௌனிலேயே விராட்டுக்கு அனுஷ்கா ஹேர் கட் செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது. பிரபல பேட்ஸ்மேன் புஜாராவும் மனைவியிடமிருந்து இதில் தப்பவில்லை. ``ஸ்கோர் 99* ஆக இருக்கும்போது சட்டென்று சிங்கிள் அடித்துவிடும் சக பேட்டிங் பார்ட்னரை நம்புவதா...? முடிவெட்டுவதற்கு மனைவியை நம்புவதா...? இதில் எதற்கு அதிக துணிச்சல் தேவை?” என நக்கலான கேப்ஷனுடன் புஜாரா, மனைவி, தனக்கு முடிவெட்டிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

லாக்டௌன் சமயத்தில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்துவரும் டெண்டுல்கர், தன் 20 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கருடன் எடுத்த வீடியோவைப் பதிவேற்றியிருப்பது தற்போது 32 லட்சத்துக்கு மேல் பார்வையாளர்களையும் 5000-க்கும் மேற்பட்ட கமென்டுகளையும் பெற்று வைரலாகியுள்ளது. ``தந்தையென்றாலே தன் பிள்ளைக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அது அவர்களோடு விளையாடுவதாக இருந்தாலும் சரி.. உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி.. ஏன் முடிவெட்டுவதாகக்கூட இருக்கட்டுமே! முடிவெட்டிய பின் தோற்றம் எப்படி இருந்தாலும் நீ ஆணழகனே! என் சலூன் அசிஸ்டன்ட்டுக்குச் சிறப்பு நன்றிகள்” என்னும் கேப்ஷனுடன் பிள்ளைகள் இருவரையும் டேக் செய்து மகனுக்கு முடிவெட்டிய காணொலியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதில் மகள் சாரா டெண்டுல்கருக்கு சலூன் அசிஸ்டன்ட் பதவி. தனக்குத் தானே ஸ்டைலாக முடிவெட்டி அசத்தியதால், நம்பிக்கையுடன் தலையை அப்பாவிடம் கொடுத்திருக்கிறார் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் என்பது டெண்டுல்கரின் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிகிறது. அப்பா - மகனின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு