Published:Updated:

கிறிஸ்டியன் கோல்மேன்... இவர்தானா உலகின் புதிய மின்னல் மனிதன்?! #Coleman

Christian Coleman
Christian Coleman ( AP )

எதிர்பார்த்ததைப் போலவே, 9.76 நொடிகளில் எல்லையைக் கடந்து தங்கம் வென்று, 'கோல்டுமேன்' ஆனார் கோல்மேன். 9.89 நொடியில் ஓடிக்கடந்து ஜஸ்டின் காட்லின் இரண்டாம் இடமும், 9.90 நொடியில் கடந்து டி கிராஸ் மூன்றாம் இடமும் பெற்றனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் முதல் முறையாக நடந்தது இந்தத் தொடர். அங்கு நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக, மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டன. ஆனால், இதையெல்லாம்விட பெரிய மாற்றம், இந்தத் தொடர் உசேன் போல்ட் இல்லாமல் நடந்தது.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முடிசூடா மன்னனான உசைன் போல்ட், 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், 15 ஆண்டுகள் கழித்து அவர் இல்லாத ஒரு உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்றது. போல்ட் இல்லாத உலக சாம்பியன்ஷிப் எப்படி இருக்கும் என்ற கேள்வி ஒருபக்கம், போல்ட்டின் இடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி மறுபக்கம் எனப் பெரும் எதிர்பார்ப்போடுதான் தொடங்கியது இந்தத் தொடர்.

Coleman, Gatlin
Coleman, Gatlin
AP

100 மீட்டர் பந்தயம், இருமுனைப் போட்டியாக இருக்கும் என்றுதான் வல்லுநர்கள் கணித்தார்கள். போல்ட்டின் கடைசி ரேஸில், அவரை முந்திய அந்த இரு அமெரிக்கர்களான ஜஸ்ட்டின் கேட்லின், கிறிஸ்டியன் கோல்மேன் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. உலக சாம்பியனும், 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான 37 வயதான ஜஸ்டின் கேட்லின்தான் வெல்வார் எனப் பலர் கணித்தாலும், கோல்மேன் சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடும் என்கிற ஆரூடங்களும் தடகள மைதானத்தில் பறந்தன.

ரியோ ஒலிம்பிக்கில் போல்ட், கேட்லினுக்கு அடுத்து வந்து வெண்கலம் வென்ற ஆண்ட்ரே டி கிராஸ் மீது சிலர் நம்பிக்கை வைத்திருந்தாலும், இது கேட்லின் - கோல்மேன் எனும் இரு அமெரிக்கர்களுக்கு இடையிலான போட்டியாகவே பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே, 9.76 நொடிகளில் எல்லையைக் கடந்து தங்கம் வென்று, 'கோல்டுமேன்' ஆனார் கோல்மேன். 9.89 நொடியில் இலக்கை அடைந்த ஜஸ்டின் காட்லின் இரண்டாம் இடத்தையும், 9.90 நொடியில் வந்த டி கிராஸ் மூன்றாம் இடமும் பிடித்தனர். போல்ட்டின் ஓய்வுக்குப் பிறகு, ஜமைக்காவின் ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்பட்ட யோஹன் பிளேக், ஐந்தாம் இடமே பிடித்தார்.

Coleman
Coleman
AP

வெற்றிக்கோட்டைத் தொடும்போது மிகப்பெரிய ஆரவாரத்துடன் முடித்த கோல்மன், 'வானமே எனது எல்லை... நான் இன்னும் என்னை மெருகேற்ற வேண்டும்" என அடக்கத்துடன் சொன்னார். இவர், 2017 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 4 ×100 தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர். வரலாற்றில் 'ஆறாவது வேகமான மனிதன்' என்று தடம் பதித்திருக்கும் கோல்மேன்தான் அடுத்த உசேன் போல்ட் என்று விளையாட்டு ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும்.

இந்த வெற்றி, சர்ச்சைகளை ஏற்படுத்தாமலும் இல்லை. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, கோல்மேன் பங்கேற்பு குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. காரணம், அவர் ஒருவருடத்தில் மூன்று முறை ஊக்கமருந்து உட்கொண்டதை அறியும் பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்தாமல் தவிர்த்துள்ளார்.

இதைப் பற்றி விசாரணை நடந்தபோது, 'அவர் முதல் முறை மறுத்தது இந்த ஓராண்டு இடைவெளியில் இல்லை. அதற்கு முன்பே அந்த முதல் மறுப்பு வந்துவிட்டது. ஓராண்டில் மூன்றுமுறை மறுத்தால்தான் பிரச்னை'' என்று சொல்லி கோல்மேனுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனாலும், விமர்சகர்கள் அவரை விடுவதாக இல்லை.

இதுகுறித்து விளக்கம் அளித்த கோல்மேன், "என்னை யாரென்று தெரியாதவர்கள்கூட என்னை விமர்சிப்பது மனதை உலுக்குகிறது. உண்மையை விளக்குவதற்கு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்றார். சில முன்னணி வீரர்களும் அவரை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Noah Lyles
Noah Lyles
AP

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கம் வென்றார். ஆண்ட்ரே டி கிராஸ் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். யோஹன் பிளேக் உள்பட, ஜமைக்கா சார்பாகப் பங்கேற்ற 3 வீரர்களில், ஒருவர்கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. பல வருடங்களாக ஜமைக்காவிடம் இருந்த 100 மீட்டர், 200 மீட்டர் செங்கோல், தற்போது அமெரிக்காவின் கைக்கு சென்றுள்ளது.

ஆண்கள் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் பிரிவில் ஜமைக்காவின் ஆளுமை முடிந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றினாலும், பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பிரிவில், ஜமைக்காவைச் சேர்ந்த செல்லி அன் பிரேஸர் ப்ரிக் நான்காவது முறையாக சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.

இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் இரண்டு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில், அமெரிக்காவின் தலிலா முகமது 52.16 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, உலக சாதனையோடு தங்கம் வென்றார். இதற்கு முந்தைய சாதனையை (52.20 விநாடிகள்), கடந்த ஜூலை மாதம் இவரேதான் நிகழ்த்தியிருந்தார். அதேபோல், இப்போது தடகளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 4X400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டத்தில், அமெரிக்க அணி உலக சாதனையோடு (3:09.34 நிமிடங்கள்) தங்கம் வென்றது.

Dalilah Muhammad
Dalilah Muhammad
AP

இந்தியாவுக்கு இந்தத் தொடரில் நடந்த ஒரே மகிழ்ச்சியான விஷயம், 4X400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்ட அணியின் செயல்பாடு. முன்னணி வீரர்களான ஹீமா தாஸ், ஆரோக்கிய ராஜீவ், தருண் அய்யாசாமி போன்றவர்கள் இல்லாத நிலையிலும் சிறப்பாகச் செயல்பட்டு, தங்களின் சிறப்பான டைமிங்கைப் பதிவுசெய்தது (3:15.77) இந்திய அணி. இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது. மற்றபடி, வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படியாகச் செயல்படவில்லை.

இந்திய தடகளத்தின் ஒரே பதக்க நம்பிக்கையான நீரஜ் சோப்ரா, சில மாதங்களாக காயத்தில் அவதிப்பட்டுவருவதால், இந்தத் தொடரில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

14 தங்கம் உட்பட, 29 பதக்கங்கள் பெற்று அமெரிக்கா முதலிடம் பிடித்தது. கென்யா (5 தங்கம்), ஜமைக்கா (3 தங்கம்) நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு