அடுத்த மாதம் 4-ம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற உள்ள 2022 Winter Olympic போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் விளையாட்டு வீரர்கள் சீனாவிற்கு வருவதற்கு முன்னர் கண்டிப்பாக MY2022 ஆப் டௌன்லோடு செய்து வர வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமான அறிவுப்பு ஒன்றை வெளியிட்டது.
MY2022 ஆப் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் பற்றிய தகவல்களைச் சொல்வதற்காக உருவாக்கபட்ட நிலையில், இந்த ஆப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், முக்கிய டேட்டாக்கள் திருடப்படலாம் என்றும் இன்டர்நெட் கண்காணிப்புக் குழுவான சிட்டிசன் லேப் (Citizen Lab) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சீன இணைய சேவை வழங்குநர்கள் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களால், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் மற்றும் ஒலிம்பிக் மைதானங்களில் உள்ள வைஃபை ஹாட்ஸ்பாட்களை பயன்படுத்தி விளையாட்டு வீரர்களின் முக்கிய தரவைப் படிக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது .
ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப் கட்டாயமில்லை என்றும், இரண்டு இணைய பாதுகாப்பு சோதனை நிறுவனங்கள் மூலமாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் செயலியில் முக்கியமான பாதிப்பு ஏதும் கண்டறியபடவில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கள் தினசரி சுகாதாரம் குறித்த தகவல்களை பதிவு செய்யும் அமைப்பு இந்த ஆப்பில் உள்ளதால் விளையாட்டில், பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள் சுகாதார கண்காணிப்பில் இருக்கவே இதை டௌன்லோடு செய்ய வேண்டும் .

இந்நிலையில் பல நாடுகள் தங்கள் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட்போன்களை சீனாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுதியுள்ளன மாறாக தங்களின் எந்த ஒரு தனிப்பட்ட டேட்டாக்களும் கொண்டிராத தற்காலிக பர்னர் போன்களைக் கொண்டு செல்லும்படி வலியுறுத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து யு.எஸ். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கிய ஆலோசனையில், ``சீனாவில் உங்களின் ஒவ்வொரு சாதனமும், தகவல் தொடர்பும், பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் செயல்பாடும் கண்காணிக்கப்படும். எனவே சீனாவில் இருக்கும்போது உங்களுடைய டேட்டா மற்றும் தனி உரிமை குறித்து உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது" என விளையாட்டில் பங்கு பெறவிருக்கும் வீரர்களுக்குக் கூறியுள்ளது.