இந்த சீசனின் மிகச் சிறந்த ரேஸை அளித்திருக்கிறது சில்வர்ஸ்டோன் சர்க்கியூட். அனைவரையும் உறைய வைத்த விபத்து, உலக சாம்பியனுக்கு ஏற்பட்ட சிக்கல், முதல் 3 இடங்களுக்கு நடந்த மிரட்டலான போட்டி என முதல் லேப் முதல் கடைசி லேப் வரை ரசிகர்களைப் பரபரப்பாகவே வைத்திருந்தது இந்த ரேஸ். டிராமாக்கள் நிறைந்த இந்த பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ (British Grand Prix) பந்தயத்தை வென்று தன் முதல் ஃபார்முலா ஒன் வெற்றியைப் பதிவு செய்தார் கார்லோஸ் சைன்ஸ்.

சனிக்கிழமை நடந்த தகுதிச் சுற்றுகளின்போது மழை பெய்ததால், பல எதிர்பாராத முடிவுகள் கிடைத்தன. ஜோ குவான்யூ, நிகோலஸ் லடிஃபி போன்றவர்கள் Q3 சுற்றுக்கு முன்னேறினர். அதைவிடப் பெரிய ஆச்சர்யமாக தன் கடைசி லேப்பை மிகச் சிறப்பாக முடித்துப் போல் பொசிஷனை வென்றார் கார்லோஸ் சைன்ஸ். தன் 150-வது ரேஸில் பங்கேற்ற அவர் போல் பொசிஷனை வெல்வது இதுதான் முதல் முறை. மேக்ஸ் வெர்ஸ்டப்பன், சார்ல் லெக்லர்க், செர்ஜியோ பெரஸ், லூயிஸ் ஹாமில்டன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யவில்லை என்பதால் பெரிய அளவில் ஆச்சர்யங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் லேப்பிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் வளைவிலேயே ஜார்ஜ் ரஸல், ஜோ குவான்யூ ஆகியோரின் கார்கள் மோத, டிராக்கிலிருந்து தலைகீழாக வெளியேறித் தடுப்புகளில் மோதியது ஜோ குவான்யூவின் கார். அதனால், உடனடியாக ரேஸ் நிறுத்தப்பட்டது. ஜோ குவான்யூவை காரிலிருந்து வெளியேற்றுவதே மிகவும் கடினமான விஷயமான இருந்தது. நல்ல வேளையாக அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. அந்த முதல் லேப் மோதலினால் ஜோ, ரஸல், அலெக்ஸ் ஆல்பான் மூவரும் ரேஸிலிருந்து வெளியேறினர்.

ரேஸின் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மேக்ஸ் வெர்ஸ்டப்பன், சைன்ஸை முந்தி முதலிடம் பிடித்தார். சிறப்பாகத் தொடங்கிய லூயிஸ் ஹாமில்டனும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். ஆனால், முதல் செக்டாரை கார்கள் கடப்பதற்கு முன்பே ரேஸ் நிறுத்தப்பட்டதால், பழைய கிரிட் பொசிஷனிலிருந்தே ரேஸ் மீண்டும் தொடங்கப்பட்டது.
மீண்டும் ரேஸ் தொடங்கியபோது சைன்ஸ் அதைச் சரியாகப் பயன்படுத்தி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். சைன்ஸ், வெர்ஸ்டப்பன், லெக்லர்க், செர்ஜியோ பெரஸ் என நால்வருமே ஒருகட்டத்தில் கடுமையாகப் போட்டியிட்டனர். அப்போது லெக்லர்க், பெரஸ் இருவரின் கார்களும் லேசாக மோதிக்கொண்டதால், இருவரின் front wing-லும் சிறு சேதம் ஏற்பட்டது. பிட் எடுத்துத் திரும்பிய பெரஸ் 16-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

சைன்ஸை முந்த போராடிக்கொண்டிருந்த வெர்ஸ்டப்பனுக்கு, பத்தாவது லேப்பில் அந்த இடத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் சைன்ஸ். அவர் டிராக்கிலிருந்து தடுமாறி வெளியேற, அதைப் பயன்படுத்தி முதலிடத்துக்கு முன்னேறினார் நடப்பு உலக சாம்பியன். ஆனால், இரண்டே லேப்களில் அவருக்குப் பெரிய சிக்கல் வந்தது. டிராக்கிலிருந்த ஒரு பொருள்பட்டு அவர் டயர் பஞ்சரானது. அதை உடனே உணர்ந்த வெர்ஸ்டப்பன் பிட்டுக்குள் நுழைந்தார். டயரை மாற்றியிருந்தாலும், காரிலேயே ஏதோ சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் மேக்ஸ். அவர் இன்ஜினியர் காரில் பெரிய சேதாரம் இல்லை என்று கூறினாலும், வெர்ஸ்டப்பனால் பெரிய முன்னேற்றம் காண முடியவில்லை.
சைன்ஸ், லெக்லர்க், ஹாமில்டன் என டாப் 3 சென்றுகொண்டிருக்க, முதலில் சைன்ஸை பிட்டுக்கு அழைத்து அவரை ஹார்ட் டயருக்கு மாற்றியது ஃபெராரி. சைன்ஸ் பிட் எடுத்ததால் முதலிடத்துக்கு முன்னேறிய லெக்லர்க், ஹாமில்டனுக்கும் அவருக்குமான இடைவெளியை அதிகரிக்க முடியாமல் தடுமாறினார். அவரை ஃபெராரி பிட்டுக்கு அழைத்த பின்பு, ரேஸில் முதலிடத்துக்கு முன்னேறினார் ஹாமில்டன். இந்த சீசனில் அவர் ஒரு ரேஸில் முதலிடத்திலிருந்தது இதுதான். அதுவும் தன் ஹோம் ரேஸில் ஹாமில்டன் முதலிடத்திலிருந்ததால், முன்னாள் உலக சாம்பியன் இந்த ரேஸை வெல்வதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாகக் கருதப்பட்டது.

ஹாமில்டன் பிட்டுக்குள் நுழைந்து வெளியேறியபோது, மூன்றாவது இடமே பிடித்தார். சைன்ஸ், லெக்லர்க், ஹாமில்டன் என்றே டாப் 3 இருந்தது. ஹார்ட் டயரில், சைன்ஸை விட லெக்லர்க் வேகமாக இருந்ததால், லெக்லர்க்குக்கு தன் இடத்தைக் கொடுக்குமாறு சைன்ஸை அறிவுறுத்தியது ஃபெராரி. அதனால், ரேஸில் முதலிடத்துக்கு முன்னேறினார் லெக்லர்க். ஆனால், அதுவே அவருக்குப் பாதகமாகவும் மாறியது. 40-வது லேப்பின்போது எஸ்டபன் ஓகான் காரில் பிரச்னை ஏற்பட்டு டிராக்கிலேயே காரை நிறுத்தினார். அதனால், சேஃப்டி கார் பயன்பாட்டுக்கு வந்தது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான டிரைவர்கள் பிட்டுக்குள் நுழைந்து 'சாஃப்ட்' டயருக்கு மாறினர்.
சேஃப்டி கார் வந்ததும் ஃபெராரியால் விரைந்து முடிவெடுக்க முடியவில்லை. அதனால், லெக்லர்க்கை விட்டுவிட்டு சைன்ஸை மட்டுமே பிட்டுக்குள் அழைத்தது ஃபெராரி. சைன்ஸ் தவிர்த்து மற்ற டிரைவர்கள் அனைவருமே பிட் எடுத்து சாஃப்ட் டயரோடு வெளியேறியதால், லெக்லர்க் முதலிடத்தைத் தக்கவைப்பது கடினம் என்று கருதப்பட்டது. நினைத்ததைப் போலவே ரேஸ் மீண்டும் தொடங்கியதும் முதலிடத்துக்குப் பெரும் போட்டி நிலவியது. மீடியம் டயரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்த செர்ஜியோ பெரஸும் நான்காம் இடம் வரை முன்னேறியிருந்தார். சாஃப்ட் டயரில் அவரும் டாப் 3 வீரர்களுக்குச் சவால் கொடுத்தார்.
46-வது லேப்பில் ஒரு மகத்தான ரேஸிங் யுத்தம் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் அரங்கேறியது. சைன்ஸ், லெக்லர்க் இருவரும் முதலில் போட்டிப் போட, அதன்பிறகு லெக்லர்க், பெரஸ், ஹாமில்டன் என மும்முனை யுத்தமும் நடந்தது. மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்துவது, டிராக்குக்கு வெளியே அனுப்புவது என ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தே படைக்கப்பட்டது. இறுதியில் சைன்ஸ், பெரஸ், ஹாமில்டன், லெக்லர்க் என்று ரேஸின் நிலை மாறியது. கடைசியில் தன் முதல் ஃபார்முலா 1 ரேஸ் வெற்றியை தன் 150-வது ரேஸில் பதிவு செய்தார் சைன்ஸ். தொடர்ந்து இரண்டாவது ரேஸாக ஃபெராரி, ரெட்புல், மெர்சீடிஸ் என மூன்று அணியின் வீரர்களுமே போடியமில் இடம்பிடித்தனர்.
போடியம் பொசிஷன்களுக்கு மட்டுமல்ல, கடைசிக் கட்டத்தில் ஏழாம் இடத்துக்கும் கூட பெரும் போட்டி நிலவியது. நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் உடன் கடைசி சில லேப்களில் அட்டகாசமான சண்டை செய்தார் மிக் ஷூமேக்கர். இந்த ரேஸில்தான் தன் முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சந்தோஷமாக எட்டாவது இடத்தோடு திருப்திப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆக்ரோஷமான வெர்ஸ்டப்பனோடு ஆக்ரோஷமான சண்டை செய்தார். கடைசி லேப்பின் கடைசி திருப்பம்வரை போட்டியிட்ட அவரால், நடப்பு சாம்பியனை முந்த முடியவில்லை. இருந்தாலும் தன் அட்டகாசமான டிரைவிங்கால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் மிக். தகுதிச் சுற்றில் பத்தாம் இடம் பிடித்த நிகோலஸ் லடிஃபி, இந்த சீசனில் தன் முதல் புள்ளிகளைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை இல்லையே! இருந்தாலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர் 12-வது இடம் பிடித்தார்.

புள்ளிப் பட்டியல் - டிரைவர்கள் சாம்பியன்ஷிப்
1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் - 181
2. செர்ஜியோ பெரஸ் - 147
3. சார்ல் லெக்லர்க் - 138
4. கார்லோஸ் சைன்ஸ் - 127
5. ஜார்ஜ் ரஸல் - 111
6. லூயிஸ் ஹாமில்டன் - 93
7. லாண்டோ நாரிஸ் - 58
8. வால்ட்டேரி போட்டாஸ் - 46
9. எஸ்டபன் ஓகான் - 39
10. ஃபெர்னாண்டோ அலோன்சோ - 28
11. பியர் கேஸ்லி - 16
12. கெவின் மேக்னசன் - 16
13. செபாஸ்டியன் வெட்டல் - 15
14. டேனியல் ரிக்கார்டோ - 15
15. யூகி சுனோடா - 11
16. ஜோ குவான்யூ - 5
17. மிக் ஷூமேக்கர் - 4
18. அலெக்ஸ் ஆல்பான் - 3
19. லான்ஸ் ஸ்டிரோல் - 3
20. நிகோலஸ் லடிஃபி - 0
21. நிகோ ஹல்கென்பெர்க் - 0
புள்ளிப் பட்டியல் - அணிகள் சாம்பியன்ஷிப்
1. ரெட் புல் - 328
2. ஃபெராரி - 265
3. மெர்சீடிஸ் - 204
4. மெக்லரன் - 73
5. ஆல்பைன் - 67
6. ஆல்ஃபா ரோமியோ - 51
7. ஆல்ஃபா டௌரி - 27
8. ஹாஸ் - 20
9. ஆஸ்டன் மார்டின் - 18
10. வில்லியம்ஸ் - 3