Published:Updated:

Brazilian GP: ரெட்புல்லின் ஆதிக்கத்தை உடைத்து மீண்டு வருமா மெர்சிடீஸ்?

இன்ஜின் மாற்றத்தினால் ஐந்து இடங்கள் பெனால்டி பெற்றிருக்கிறார் ஹாமில்ட்டன். இந்த சீஸனில் ஹாமில்ட்டனுக்கு இது ஐந்தாவது இன்ஜின்!

இந்த வார கிராண்ட் ப்ரீ (Brazilian GP) போட்டியின் தொடக்க வரிசையை எப்போதும் நடப்பது போன்று தகுதிச்சுற்று மூலம் முடிவு செய்யாமல், ஸ்பிரின்ட் சுற்று மூலம் முடிவு செய்யவிருக்கிறார்கள். 2021-ல் ஸ்பிரின்ட் சுற்று மூலம் தொடக்க வரிசையை முடிவு செய்வது இது மூன்றாவது முறை.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1 மணிக்கு நடக்கவிருக்கிறது ஸ்பிரின்ட் சுற்று. இந்த சுற்றில் முடிவில் யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அதே வரிசையில் நாளை இரவு 10.30 மணிக்கு நடக்கவிருக்கும் கிராண்ட் ப்ரீயின் தொடக்க வரிசை இருக்கும். 100 கிமீ தூரம் கொண்ட ஸ்பிரின்ட் சுற்றின் தொடக்க வரிசையைத் தீர்மானிக்க எப்போதும் நடப்பது போல தகுதிச்சுற்று போட்டி இன்று அதிகாலை 12.30 (நள்ளிரவு) மணிக்கு நடைபெற்றது.

Brazilian GP
Brazilian GP

நேற்று நடைபெற்ற ஃப்ரீ ப்ராக்டீஸ் போட்டியில்தான் ஹாமில்ட்டன் புதிய இன்ஜினுடன் களமிறங்கவிருப்பதாகத் தெரிவித்தது மெர்சிடீஸ். இந்த இன்ஜின் மாற்றத்தினால் ஐந்து இடங்கள் பெனால்டி பெற்றிருக்கிறார் ஹாமில்ட்டன். இந்த சீஸனில் ஹாமில்ட்டனுக்கு இது ஐந்தாவது இன்ஜின். போட்டாஸூம் யுஎஸ் கிராண்ட் ப்ரீயின் போது மூன்றாவது முறையாக இன்ஜினை மாற்றியதற்காக கிரிட் பெனால்டி பெற்றார். மெர்சிடீஸின் இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குறைவதனாலேயே இன்ஜினை மாற்றியிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார் மெர்சிடீஸின் முதன்மை அதிகாரி டோடோ வோல்ஃப்.

இன்ஜின் மாற்றத்திற்கான பலனை தகுதிச்சுற்றிலேயே பார்க்க முடிந்தது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட ஹாமில்ட்டன், வெர்ஸ்ட்டப்பனை விட அரை நொடி வேகமாக லேப்பை முடித்து நாளை நடக்கவிருக்கும் ஸ்பிரின்ட் சுற்றை முதல் இடத்தில் இருந்து தொடங்குகிறார். அவரைத் தொடர்ந்து வெர்ஸ்ட்டப்பன், போட்டாஸ், பெரஸ் மற்றும் கேஸ்லி ஆகியோர் 2,3,4 மற்றும் 5-ம் இடங்களில் இருந்து ஸ்பிரின்ட் சுற்றுப் போட்டியைத் தொடங்குகிறார்கள்.

பிரேசிலின் ஆட்டோஃட்ரோமோ ஹோஸே கார்லோஸ் பேஸ் சர்க்யூட்டில் நடக்கிறது நாளைய கிராண்ட் ப்ரீ போட்டி. இந்த சர்க்யூட்டும் கொஞ்சம் ரெட்புல் கார்களுக்கே சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மெக்ஸிகோ அளவு ரெட்புல்லுக்கு சாதகமாக இருக்காது.

2005-க்குப் பிறகு இந்த ட்ராக்கில் ஃபெராரி, ரெட்புல் மற்றும் மெர்சிடீஸ் ஆகிய ஆணிகளே அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. 2014-ல் இருந்து மெர்சிடீஸின் ஆதிக்கமே இந்த ட்ராக்கில் அதிகமாக இருக்கிறது. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று புதிய வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது இந்த ட்ராக். 2017-ல் ஃபெராரி இன்ஜினுடன் செபாஸ்சடியன் வெட்டல், 2018-ல் மெர்சிடீஸ் இன்ஜினுடன் ஹாமில்ட்டன் மற்றும் கடைசியாக 2019-ல் நடந்த கிராண்ட் ப்ரீயில் ரெட்புல் ரேஸிங்ல் ஹோண்டா இன்ஜினுடன் வெர்ஸ்ட்டப்பன் இங்கு வென்றனர். எனவே, வெர்ஸ்ட்டப்பன் ஹாமில்ட்டன் இருவருக்குமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சம அளவிலேயே இருக்கிறது.

மெர்சிடீஸ்
மெர்சிடீஸ்

ஆனால், 5 இடங்கள் கிரிட் பெனால்டி பெற்றிருப்பதால் ஹாமில்ட்டன் குறைந்தபட்சம் 6-ம் இடம் அல்லது அதற்குப் பின்னால் இருந்து தான் தொடங்க முடியும் என்பதால், தொடக்கத்திலேயே வெர்ஸ்ட்டப்பனின் கை இங்கு ஓங்குகிறது. டைட்டில் ரேஸில் தொடர்ந்து உயிர்ப்புடன் நீடித்திருக்க வேண்டுமானால் ஹாமில்ட்டனுக்கு இந்த கிராண்ட் ப்ரீயில் வெற்றி அவசியம். ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் ஹாமில்ட்டனின் புதிய இன்ஜின் அவருக்குக் கைகொடுக்கும் என நம்பலாம். 2015 முதல் 2019 வரை மெர்சிடீஸ் ட்ரைவர்கள் 6 முறையும், ஃபெராரி ட்ரைவர்கள் 4 முறையும், ரெட்புல் ட்ரைவர்கள் 3 முறையும் இந்த ட்ராக்கில் போடியம் ஏறியிருக்கிறார்கள்.

ஹாமில்ட்டன் டாப் 3-யில் இல்லை என்பதால் முதல் மூன்று இடத்துக்குள் போட்டியைத் தொடங்கி இரண்டாவது இடத்துக்காவது முயற்சிப்பார் பெரஸ். கடந்த மூன்று போட்டியிலும் தொடர்ந்து மூன்றாவது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் பெரஸ். இந்த ட்ராக்கும் கொஞ்சம் ரெட்புல்க்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதால், முதல் மூன்று இடங்களுக்குள் போட்டாஸ், வெர்ஸ்ட்டப்பன் மற்றும் பெரஸ் ஆகியோர் தகுதிபெறும் பட்சத்தில் இரு ரெட்புல் ட்ரைவர்களையும் சமாளிக்கும் பொறுப்பை போசட்டாஸே பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் நாள் இரவு ஐசியூவில் சிகிச்சை; மறுநாள் கிரவுண்டில் அரைசதம்; ரிஸ்வானுக்கு குவியும் பாராட்டு!

இதே ட்ராக்கில் 2019-ல் நடந்த கிராண்ட் ப்ரீயில் போடியம் ஏறியிருக்கிறார் பியர் கேஸ்லி. கடந்த வாரம் நடந்த மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீயிலும் ஃபெராரி ட்ரைவர்களை சமாளித்து நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த முறையும் டாப் 6-ஐ தக்க வைக்க முயற்சி செய்வார். ஆனால், இந்த ட்ராக்கில் ஃபெராரியின் வரலாறு கொஞ்சம் பலமாகவே இருக்கிறது. கேஸ்லி, சைன்ஸ் மற்றும் லெக்லெர்க் ஆகியோருடன் 4,5 மற்றும் 6 இடங்களுக்கான போட்டியும் கொஞ்சம் விருவிருப்பாகவே இருக்கும். மெர்சீடீஸ் மற்றும் ரெட்புல் ட்ரைவர்கள் நான்கு பேரும் போட்டியில் முழுமையாக இருக்கும் பட்சத்தில், 4-வது இடத்துக்கான போட்டி இன்னும் கொஞ்சம் கடுமையாகவே இருக்கும்.

2010, 2013 மற்றும் 2017 என மூன்று முறை பிரேசிலியன் கிராண்ட் ப்ரீயில் வெற்றி பெற்றிருக்கிறார் செபாஸ்டியன் வெட்டல். இரண்டு முறை ரெட்புல் ரேஸிங்கில் ரெனோ இன்ஜினுடனும், கடைசியாக 2017-ல் ஃபெராரி இன்ஜினுடனும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இம்முறை ஆஸ்டன் மார்ட்டினில் மெர்சிடீஸ் இன்ஜினுடன் சிறப்பான செயல்பாடுகள் இல்லையெனினும், கடந்த இரு போட்டிகளில் டாப் 10 இடத்தைப் பிடித்து பாயின்ட்களை பெற்றிருக்கிறார். மெக்ஸிகோவில் 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இம்முறையும் டாப்-10க்குள் போட்டியை முடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்டன் மார்ட்டின் | செபாஸ்டியன் வெட்டல்
ஆஸ்டன் மார்ட்டின் | செபாஸ்டியன் வெட்டல்

நாளைய இரவு நடக்கும் கிராண்ட் ப்ரீயில் போட்டியாளர்களின் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கும் என்பதன் சுருக்கமாகவே நாளை அதிகாலை நடக்கவிருக்கும் ஸ்பிரின்ட் சுற்று இருக்கும். ஹாமில்ட்டன் முதல் இடத்தில் ஸ்பிரின்ட் ரேஸை முடிக்க முயற்சி செய்தாக வேண்டும். இல்லையெனில், இது கிரிட் பெனால்டியோடு சேர்த்து ஹாமில்ட்டனுக்கு மேலும் பின்னடைவைக் கொடுக்கும்.

கடந்த மூன்று போட்டிகளிலும் ரெட்புல் ரேஸிங் ட்ரைவர்கள் இருவருமே தொடர்ந்து போடியம் ஏறியிருக்கிறார்கள். டைட்டில் ரேஸிலும் வெர்ஸ்ட்டப்பனே ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ரெட்புல்லின் ஆதிக்கத்தை உடைத்து மீண்டு வருமா மெர்சிடீஸ்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு