Published:Updated:

Brazilian GP: வேட்டையாடிய ஹாமில்ட்டன், 2ம் இடத்தில் வெர்ஸ்ட்டப்பன் - பரபர ரேசில் நடந்த திருப்பங்கள்!

'ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ, மொதல்ல சண்ட செய்யணும்' என்பதுபோல் சண்டையிட்டு ஜெயித்திருக்கிறார் ஹாமில்ட்டன்.

பிரேசிலியன் கிராண்ட் ப்ரீ தொடங்குவதற்கு முன்பாக 21 புள்ளிகள் வெர்ஸ்ட்டப்பனை விட டைட்டில் ரேஸில் பின்தங்கியிருந்தார் ஹாமில்ட்டன். இந்த வருட சாம்பியன் வெர்ஸ்ட்டப்பன்தான் என ஃபார்முலா 1 ரசிகர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒத்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். கடந்த சில போட்டிகளில் வெர்ஸ்ட்டப்பன் வெற்றி பெற்றதனால் மட்டுமல்ல, அதிகம் சிரமமில்லாமல் அவர் வெற்றி பெற்றதுதான் ரசிகர்களை அப்படி நினைக்க வைத்தது.

பிரேசில் ரேஸ் சேர்த்து இந்த சீஸனில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டும் தான் மீதம் இருந்தது. அதோடு இந்த போட்டியில் ஹாமில்ட்டன் சந்தித்த பின்னடைவுகள் ஏராளம். பிரேசிலியன் கிராண்ட் ப்ரீயின் பயிற்சி சுற்றில் புதிய இன்ஜினை ஹாமில்ட்டனுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தது மெர்சிடீஸ். இதன் காரணமாக கிராண்ட் ப்ரீ போட்டியில் ஹாமில்ட்டனுக்கு 5 இடங்கள் கிரிட் பெனால்டி வழங்கப்பட்டது முதல் இடத்தில் தகுதிபெற்றாலும் 6-வது இடத்தில் இருந்து தான் ஹாமில்ட்டனால் தொடங்க முடியும். அதோடு இன்னொரு சோதனையும் வந்து சேர்ந்தது ஹாமில்ட்டனுக்கு.

ஹாமில்ட்டன்
ஹாமில்ட்டன்
Brazilian GP: ரெட்புல்லின் ஆதிக்கத்தை உடைத்து மீண்டு வருமா மெர்சிடீஸ்?

DRS சர்ச்சை:

ஸ்ப்ரின்ட் சுற்றின் தொடக்க வரிசையை முடிவு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் முதல் இடத்தில் முடிந்திருந்தார் ஹாமில்ட்டன். இரண்டாம் இடத்தில் வெர்ஸ்டப்பனும் மூன்றாம் இடத்தில் போட்டாஸும் தகுதிச்சுற்றை முடித்திருந்தனர். ஆனால், தகுதிச்சுற்றுக்குப் பிறகு ஹாமில்ட்டனின் கார் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவரது காரின் DRS பகுதியில் டெக்னிகலாக சில வேறுபாடுகள் இருக்கிறது எனக் கூறப்பட்டு அதற்கான சோதனையும் நடத்தப்பட்டது. ஒரு F1 காரின் பின் இறக்கையின் மேல் பகுதிக்கும் கீழ்ப் பகுதிக்கும் இடையே குறிப்பிட்ட அளவு தான் இடைவெளி தான் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது.

DRS சர்ச்சை
DRS சர்ச்சை

DRS பயன்படுத்தாமல் இருக்கும் போது பின் இறக்கையின் மேல்பகுதிக்கும் கீழ்ப் பகுதிக்கும் இடையே 10 மிமீ முதல் 15 மிமீ வரை இடைவெளி இருக்கலாம் அதற்கு மேல் அல்லது கீழ் இடைவெளி இருக்கக்கூடாது. இதற்கான சோதனையில் ஹாமில்ட்டனின் கார் தேரிவிட்டது. ஆனால், DRS பயன்படுத்தும் போது அந்த இடைவெளி 10 மிமீ முதல் 85 மிமீ வரை தான் இருக்க வேண்டும். இதற்கான சோதனையின் போது 85 மிமீ விட அதிகமாக இருக்கிறது எனக் கூறி ஹாமில்ட்டனின் தகுதிச்சுற்றை தகுதிநீக்கம் செய்தது F1 நிர்வாகம். இதனால் ஸ்ப்ரின்ட் சுற்றுப் போட்டியை ஹாமில்ட்டன் கடைசி இடத்தில் (20-வது இடம்) இருந்து தொடங்க வேண்டியிருந்தது.

DRS செயல்பாடு
DRS செயல்பாடு

தகுதிச்சுற்றுப் போட்டி முடந்த பிறகு, ஹாமில்ட்டனின் காரை வெர்ஸ்ட்டப்பன் தொட்டுப் பார்த்ததாக வெர்ஸ்ட்டப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஹாமில்ட்டன் காரில் மேற்கூறிய DRS வேறுபாடு 0.2 மிமீ அளவில் தான் இருந்தது. எனவே, வெர்ஸ்ட்டப்பன் காரை தொட்டதனால் கூட ஹாமில்ட்டன் காரின் DRS-ல் வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என மற்றொரு சர்ச்சையும் எழுந்தது. ஆனால், 'ஹாமில்ட்டனின் காரை சேதப்படுத்தும் விதமாக வெர்ஸ்ட்ப்பன் எதுவும் செய்யவில்லை' எனக் கூறி அவருக்கு கிரிட் பெனால்டி எதுவுமின்றி 50,000 யூரோ மட்டும் அபராதம் விதித்தது F1 நிர்வாகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ப்ரின்ட் சுற்று:

ஸ்ப்ரின்ட் சுற்றுப் போட்டி பொதுவாக சுமார் 100 கிமீ தூரம் கொண்டதாக இருக்கும். பிரேசிலியன் கிராண்ட் ப்ரீயில் ஸ்ப்ரின்ட் சுற்று 24 லேப்கள். ஹாமில்ட்டனின் தகுதிச்சுற்று தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் முதல் இடத்தில் வெர்ஸ்ட்டப்பனும், இரண்டாம் இடத்தில் போட்டாஸூம் ஸ்ப்ரின்ட் சுற்றைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு ஜாம்பவானும் தான் ஏன் சாம்பியன் என்பதை ஒரு இக்கட்டான போட்டியில் நமக்குக் காட்டுவார்கள். ஹாமில்ட்டனுக்கு அப்படியான போட்டி இது. 20-வது இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய ஹாமில்ட்டன் அந்தப் போட்டியில் போட்டியிடவில்லை. வேட்டையாடினார். ரேஸ் ட்ராக்கில் இருந்த எந்தவொரு போட்டியாளரும் ஹாமில்ட்டனைத் துளியும் டிஃபண்ட் செய்ய நினைக்கவில்லை. 'ஹாமில்ட்டன் வரார், வழிவிடுங்கோ' என்கிற ரீதியில் தான் ஒவ்வொருவரையும் ஓவர்டேக் செய்தார் ஹாமில்ட்டன்.

10-வது இடத்தில் இருந்த டேனியல் ரிக்கார்டோ மட்டும் அவரை கொஞ்சம் தடுக்க முயன்றார். அதுவும் ஓரிரண்டு லேப்கள் மட்டுமே அவரால் டிஃபண்ட் செய்ய முடிந்தது. ரிக்கார்டோவை ஓவர்டேக் செய்த பின்னர் வேறு யாருமே ஹாமில்ட்டைன தடுக்க முயற்சி கூட செய்யவில்லை. P6-ல் ஸ்ப்ரின்ட் சுற்றை முடிப்பார் என எதிர்பார்க்க, கடைசி லேப்பில் 5-ஆம் இடத்தில் இருந்த நாரிசையும் ஓவர்டேக் செய்து P5-ல் ஸ்பிரின்ட்டை முடித்தார் ஹாமில்ட்டன்.
ஸ்ப்ரின்ட் சுற்று முடிவுகள்
ஸ்ப்ரின்ட் சுற்று முடிவுகள்

ஸ்ப்ரின்ட் சுற்றில் போட்டியாளர்கள் அனைவருமே மீடியம் டயர்களிலேயே போட்டியைத் தொடங்கியிருந்தனர். போட்டாஸ், கார்லோஸ் சைன்ஸ் மட்டும் சாப்ட் டயர்களிலேயே போட்டியைத் தொடங்கினர். 2-வது இடத்தில் இருந்த போட்டாஸ் முதல் லேப்பிலேயே வெர்ஸ்ட்டப்பனை ஓவர்டேக் செய்து ஹாமில்ட்டன் செய்ய வேண்டியதை செவ்வனே செய்தார். ரெட்புல் ரேஸிங்கின் பெரஸ் மூன்றாவது இடத்தில் ஸ்ப்ரின்ட் சுற்றைத் தொடங்கினார். ஆனால், அவுட் ஆஃப் சிலபஸாக வந்த கார்லோஸ் சைன்ஸ் பெரஸை முதல் லேப்பிலேயே ஓவர்டேக் செய்து மூன்றாவது இடம் பிடிக்க அது போட்டஸுக்கு வசதியாகப் போய்விட்டது. இதனால் வெர்ஸ்ட்டப்பனை மட்டும் சமாளித்துப் போல் பொசிஷனைத் தன்வசமாக்கினார் போட்டாஸ்.

கிராண்ட் ப்ரீ:

ஸ்ப்ரின்ட் சுற்றில் 5-வது இடத்தில் முடிந்திருந்தாலும் 5 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக 10-வது இடத்தில் இருந்து கிராண்ட் ப்ரீ போட்டியைத் தொடங்கினார் ஹாமில்ட்டன். முதல் இடத்தில் போட்டாஸ், இரண்டாம் இடத்தில் வெர்ஸ்ட்டப்பன், மூன்றாம் இடத்தில் சைன்ஸ் மற்றும் நான்காம் இடத்தில் பெரஸ். இப்படியான வரிசையிலேயே தொடங்கியது பிரேசிலியன் கிராண்ட் ப்ரீ. போட்டி தொடங்கி முதல் வளைவிலேயே வெர்ஸ்ட்டப்பன் போட்டாஸை ஓவர்டேக் செய்து முன்னேற, நானும் வரேன் என சைன்ஸை ஓவர்டேக் செய்து முன்னேறினார் பெரஸ். சைன்ஸ் மட்டுமல்லாது அடுத்த சில திருப்பங்களில் போட்டாஸையும் ஓவர்டேக் செய்து முதல் இரண்டு இடங்களில் ரெட்புல் ட்ரைவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் முன்னேறியது மட்டுமல்லாமல் மூன்றாவதாக வந்த போட்டாஸுக்கு இரண்டாவது இடத்தில் இருந்த பெரஸூக்குமான இடைவெளி 3 நொடிகள் இருந்தது. தனிக்காட்டு ராஜா போல போட்டியிட யாரும் இல்லாமல் சில லேப்கள் பிரேசில் ட்ராக்கை சுற்றி வந்தன ரெட்புல் கார்கள்.

10-வது இடத்தில் இருந்து தொடங்கிய ஹாமில்ட்டனுக்கு வெர்ஸ்ட்டபனை தவிர வேறு யாரும் கண்களில் படவே இல்லை போலும். வெர்ஸ்ட்டப்பனே கூட கண்களில் படாமல் இருந்திருப்பார். ஹாமில்ட்டனுக்கு வேண்டியதெல்லாம் வெற்றி மட்டுமே. ஸ்ப்ரின்ட் சுற்றில் செய்ததை அப்படியே ஜெராக்ஸ் காப்பியாக கிராண்ட் ப்ரீயிலும் செய்தார் ஹாமில்ட்டன். 10-வது இடத்தில் இருந்து தொடங்கி நான்கே லேப்களில் 3-வது இடத்திற்கு முன்னேறினார். சுனோடா மற்றும் லேன்ஸ் ஸ்ட்ரோலின் கார்கள் மோதிக்கொண்டதால் ட்ராக்கில் சுத்தப்படுத்துவதற்காக சில லேப்கள் சேஃப்டி காரோடு தொடர்ந்தது.

பிரேசிலியன் கிராண்ட் ப்ரீ
பிரேசிலியன் கிராண்ட் ப்ரீ

சேஃப்டி கார் முடிந்து போட்டி தொடங்கிய போது பெரஸுக்குப் பின்னால் ஹாமில்ட்டன் இருப்பார். அவரைத் தடுப்பதற்காக முழு உத்வேகத்தோடு டிஃபண்ட் செய்வார் பெரஸ். ஆனால், பெரஸை ஜஸ்ட் லைக் தட் கடந்து முன்னேறினார் ஹாமில்ட்டன். பெரஸூம் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் மீண்டும் நான்காவது திருப்பத்தில் ஹாமில்ட்டனை ஓவர்டேக் செய்வார். 19-வது லேப்பின் முதல் திருப்பத்தில் மீண்டும் பெரஸை ஓவர்டேக் செய்வார் ஹாமில்ட்டன். ஆனால், இம்முறை பெரஸால் பிடிக்க முடியாத வேகத்தில். இப்போது வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டன் மட்டுமே. ஹாமில்ட்டனின் வேகத்தைப் பார்க்கும் போது யாராக இருந்தாலும் அடிபணிந்து விடுவார்கள். அப்படி ஒரு வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார் ஹாமில்ட்டன்.

48-வது லேப்பில் 4-வது திருப்பத்தில் அவுட்சைடில் இருந்து வெர்ஸ்ட்டப்பனை ஓவர்டேக் செய்ய முயல்வார் ஹாமில்ட்டன். ஆனால், காரை வைடாக ஓட்டிச் சென்று இருவருமே ட்ராக்கை விட்டு விலகிச் செல்வார்கள். அதன் பிறகும் வெர்ஸ்ட்டப்பனே முன்னிலையில் தொடந்தார். ஹாமில்ட்டனின் ஓவர்டேக்கை தடுக்கும் நோக்கத்தோடு வெர்ஸ்ட்டப்பன் வைடாக ஓட்டிச் சென்றிருந்தால் அவருக்கு 5 நொடிகள் வரை டைம் பெனால்டி கொடுக்க முடியும். ஆனால், வெர்ஸ்ட்டப்பன் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை எனவே விசாரணை தேவையில்லை என அந்த நிகழ்வு நடந்த சில நேரத்தில் போட்டியின் போதே அறிவித்தது F1 நிர்வாகம்.

59-வது லேப்பில் வெர்ஸ்ட்டப்பனை ஓவர்டேக் செய்து முதலிடத்துக்கு முன்னேறினார் ஹாமில்ட்டன். அவரை டிஃபண்ட் செய்வதற்கு போதுமான வேகம் வெர்ஸ்ட்டப்னிடம் இல்லை. முடிவில் 10 நொடிகள் வித்தாயசத்தில் வெர்ஸ்ட்டப்பனை வீழ்த்தி கிராண்ட் ப்ரீயை வென்றார் ஹாமில்ட்டன். இரண்டாவது இடத்தை வெர்ஸ்ட்டபனிடம் இருந்து பறிக்க போட்டாஸூக்கு அறிவுறுத்தப்படுகிறது. அந்த முயற்சியைக் கைவிட்டு மூன்றாம் இடம் பிடித்தார் போட்டாஸ். வெர்ஸ்ட்டப்பன் இரண்டாம் இடத்திலும், பெரஸ் நான்காம் இடத்திலும் போட்டியை முடித்தார்கள். வேகமான லேப்புக்கான ஒரு புள்ளி ஹாமில்ட்டனின் வசமே இருந்தது. கடைசி லேப்புக்கு முன்னதாக சாப்ட் டயருக்கு மாறி ஹாமில்ட்டனிடம் இருந்து அந்த ஒரு புள்ளியைப் பறித்து தன்வசமாக்கினார் பெரஸ்.

கடைசியாகப் போட்டியிட்ட இரண்டு கிராண்ட் ப்ரீக்களிலும் இரண்டாம் இடத்தையே பிடித்திருப்பார் ஹாமில்ட்டன். போட்டியின் போது டீம் ரேடியோவில் பேசும் போதும், போட்டியை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை பெரிய அளவில் ஹாமில்ட்டனின் பேச்சில் வெளிப்படவில்லை. ஆனால், நேற்றைய பிரேசிலியன் கிராண்ட் ப்ரீயில் சொல்லி அடித்திருக்கிறார் ஹாமில்ட்டன். இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து ஏழு முறை உலக சாம்பியன் ஹாமில்ட்டன் என பெயரளவில் சொல்ல வந்து கொண்டிருந்தோம். ஆனால், பிரேசிலில் தான் ஏன் சாம்பியன் என்பதை காட்டிவிட்டார். வெறும் வெற்றியால் மட்டும் அவர் அதைக் காட்டவில்லை. ஸ்பிரின்ட் சுற்று, கிராண்ட் ப்ரீ இரண்டு போட்டிகளிலும் 25 ஓவர்டேக்குகளைச் செய்திருக்கிறார் ஹாமில்ட்டன். 25 ஓவர்டேக்கில் ஒன்று தவறாகப் போய் முடிந்தாலும் அவருடைய 8-வது டைட்டிலுக்கு இந்த சீஸனில் எண்ட் கார்டு போடப்பட்டிருக்கும். ஆனால், ஒவ்வொரு ஓவர்டேக்கிலும் துல்லியமாக செய்த விதம் தான் அவர் ஏன் சாம்பியன் எனச் சொல்கிறது.

ஹாமில்ட்டன், போட்டாஸ்
ஹாமில்ட்டன், போட்டாஸ்

2004-ல் F3 போட்டியிலும் இதே போன்று ஒரு போட்டியில் செயல்பட்டிருப்பார் ஹாமில்ட்டன். பஹ்ரைனில் நடந்த அந்தப் போட்டியில் 22-வது இடத்தில் தொடங்கி 11-வது இடத்தில் தகுதிபெற்று, மீண்டும் 11-வது இடத்தில் இருந்து தொடங்கி முதலிடத்தில் அந்தப் போட்டியை வெற்றி பெற்றிருப்பார். அந்தப் போட்டியில் தான் யார் என்பதை நிரூபித்தால் மட்டுமே ஃபார்முலா ரேஸ் போட்டிகளில் நீடித்திருக்க முடியும் என்கிற கட்டாயம் இருக்கும். இன்றும் அதேபோல ஒரு சூழ்நிலை.

17 வருடங்கள் கழித்து இன்னும் அதிக உத்வேகத்துடன் தன்னுடைய 8-வது சாம்பியன் பட்டத்துக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். 'ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ, மொதல்ல சண்ட செய்யணும்', என்பதுபோல் சண்டையிட்டு ஜெயித்திருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு