Published:Updated:

அவனி லெகாரா: `விபத்தில் முடங்கியது கால்கள்தான், மனம் அல்ல!' - யார் இந்த 19 வயது தங்க மங்கை?

அவனி லெகரா
News
அவனி லெகரா ( Twitter )

பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தமாக 249.6 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றதோடு, உலக சாதனையையும் சமன் செய்திருக்கிறார் 19 வயதே ஆன அவனி லெகாரா.

அவனி லெகாரா... இந்தப் பெயரைத்தான் இப்போது நம் தேசம் அதிகமாக உச்சரித்துக்கொண்டிருக்கிறது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்திருக்கும் தங்க மங்கை இவர். பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தமாக 249.6 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையோடு, உலக சாதனையையும் சமன் செய்திருக்கிறார் 19 வயதேயான அவனி லெகாரா.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்தான் அவனியின் சொந்த ஊர். அவருக்கு 9 வயது ஆகும்வரை மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவராகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்து அவரது வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.

அவனி லெகரா
அவனி லெகரா
Twitter

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த விபத்து காரணமாக அவருடைய முதுகுத் தண்டுவடத்தில் பலத்த அடிபட, அதன் பின்னர் நடக்க இயலாமல் முடங்கினார் அவனி. அதற்குப் பிறகு சக்கர நாற்காலியே அவரது உலகமாகியிருக்கிறது.

தன் மகள் இப்படியே முடங்கிப்போய்க் கிடப்பதை அவனியின் தந்தை விரும்பவில்லை. ``உனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணப்படு'' என்று தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். குறிப்பாக, ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அவர் சொல்ல, வில்வித்தை உட்பட பல விளையாட்டுகளில் கவனம் செலுத்திப் பார்த்திருக்கிறார் அவனி. ஆனால் அது எதுவும் இவரது மனதைத் தொடவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் சுயசரிதையைப் படிக்கும் வாய்ப்பு அவனிக்குக் கிடைத்திருக்கிறது.

`` `எ ஷாட் அட் ஹிஸ்ட்ரி' (A SHOT AT HISTORY) என்கிற அந்தப் புத்தகம் வெறும் புத்தகமாக மட்டும் எனக்குத் தெரியவில்லை. வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் உற்சாக டானிக் போல நான் உணர்ந்தேன்'' என்கிற அவனி லெகாரா, அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததுமே இனி துப்பாக்கி சுடும் விளையாட்டே தனது வாழ்க்கை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதன் பின்னர் அபினவ் பிந்த்ராவை தனது முன்னுதாரணமாக மனதில் நிறுத்திக்கொண்ட அவனி, 2015-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள `ஜகல்புரா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில்’ துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் சேர்ந்திருக்கிறார்.

அவனி லெகரா
அவனி லெகரா
Joe Toth for OIS

தொடர் பயிற்சிகள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். இவரது முதல் சர்வதேசப் போட்டியும் இதுதான். கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்ற இவர் 2019-ம் ஆண்டு குரோயேஷியாவில் நடைபெற்ற அதற்கடுத்த பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியிலும் வெள்ளி வென்று அசத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தேசிய பாரா ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கத்தைத் தட்டியிருக்கிறது இந்தப் பெண் புலி.

தங்க மகளுக்கு வாழ்த்துகள்!