Published:Updated:

`மோசமான தொடக்கம்.. ஆனா என்ன..?' - டெல்லியை வீழ்த்தி ப்ரோ கபடி சாம்பியனான பெங்கால் #DELvKOL

3 மாதங்கள் 137 போட்டிகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் அணிக்கு நாடுமுழுவதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.

ப்ரோ கபடி சாம்பியன்
ப்ரோ கபடி சாம்பியன்

இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்னர் மற்ற விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடைபெறத் தொடங்கின. இதன் மூலம் பல இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பும் வெளிச்சமும் கிடைத்தது. கிரிக்கெட், கால்பந்து போல் இந்தியாவில் கபடியும் மிக பிரபலம். இதன் காரணமாக தொடங்கப்பட்டதுதான் ப்ரோ கபடி லீக் தொடர்.

`மோசமான தொடக்கம்.. ஆனா என்ன..?' - டெல்லியை வீழ்த்தி ப்ரோ கபடி சாம்பியனான பெங்கால் #DELvKOL

ஜூலை மாதம் 20 -ம் தேதி தொடங்கிய `ப்ரோ கபடி லீக் சீசன் 7’ தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 12 அணிகளுடன் தொடங்கிய இந்தத் தொடரில், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி யோத்தா, யு மும்பா, ஹரியானா ஸ்டீலெர்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியையும், பெங்கால் அணி மும்பை அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்கால் அணியும் மோதியது.

`மோசமான தொடக்கம்.. ஆனா என்ன..?' - டெல்லியை வீழ்த்தி ப்ரோ கபடி சாம்பியனான பெங்கால் #DELvKOL

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் பெங்கால் அணிக்குச் சற்று அதிர்ச்சிகரமாகத்தான் அமைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட பெங்கால் அணியின் கேப்டன் மணீந்தர் சிங் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. மேலும், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டெல்லி அணி 8 புள்ளிகள் முன்னிலை பெற்று பெங்காலுக்கு அதிர்ச்சி அளித்தது.

ஆனாலும் மனம் தளராத பெங்கால் அணி வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட்டு முதல்பாதியிலே 17-17 என்ற சமநிலைக்குக் கொண்டு வந்தனர். பெங்கால் அணியில் மணீந்தர் சிங் இல்லாத குறையை முகமது நபிபாக்‌ஷ் சரி கட்டினார். தொடர்ச்சியாக புள்ளிகள் பெற்று பெங்கால் அணிக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தார். அதன் பின்னர் பெங்கால் அணி பெரிதாக பின்னடைவைச் சந்திக்கவில்லை. இரண்டாவது பாதியில் டெல்லி அணியை இரண்டு முறை ஆல் அவுட் செய்தது. இறுதியாக பெங்கால் அணி 39-34 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

3 மாதங்கள் 137 போட்டிகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் அணிக்கு நாடுமுழுவதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.