Published:Updated:

சிறந்த நியூசிலாந்துக்காரர் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரை!

எம்.குமரேசன்

தாய்நாடு நியூசிலாந்தாக இருந்தாலும் தன்னை வளர்த்த நாட்டுக்காக உறுதியுடன் விளையாடினார் பென் ஸ்டோக்ஸ்

பென்  ஸ்டோக்ஸ்க்கு விருது
பென் ஸ்டோக்ஸ்க்கு விருது

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இருவர் பெயரும், இந்த ஆண்டின் `சிறந்த நியூசிலாந்துக்காரர்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கிறிஸ்ட்சர்ச் நகரில் பிறந்தவர். தந்தையின் பணி காரணமாக இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது பென் ஸ்டோக்ஸ் குடும்பம். தற்போதும் அவரின் பெற்றோர் கிறிஸ்ட்சர்ச் நகரில்தான் வசித்து வருகின்றனர்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து 241 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து பேட் செய் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறியது. பின்னர், பென் ஸ்டோக்ஸ் - பட்லர் ஜோடி இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை கட்டமைத்தது. ஒரு கட்டத்தில் பட்லரும் அவுட்டாக, பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாக போராடி, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

தாய்நாடு நியூசிலாந்தாக இருந்தாலும் தன்னை வளர்த்த நாட்டுக்காக உறுதியுடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸை கெளரவிக்கும் விதமாக, சிறந்த நியூசிலாந்துக்காரர் விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியை உலகக் கோப்பை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற கேப்டன் கேன் வில்லியம்ஸனும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் பெற்றோர்
பென் ஸ்டோக்ஸ் பெற்றோர்

விருதுக்கான தேர்வுக்குழுத் தலைவர் நீதிபதி பென்னட் கூறுகையில், ''பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு விளையாடவில்லையென்றாலும், கிறிஸ்ட் சர்ச் நகரில் பிறந்தவர். அவரின் பெற்றோர் கிறிஸ்ட்சர்ச் நகரில்தான் வசிக்கின்றனர். அந்த அடிப்படையில் இந்த விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்'' என்றார்.

பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்ட் நியூசிலாந்து ரக்பி அணிக்காக விளையாடியவர். இங்கிலாந்தில் ரக்பி பயிற்சியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால், அங்கு குடும்பத்துடன் குடியேறினார். அப்போது, பென் ஸ்டோக்ஸ்க்கு வயது 12 மட்டுமே.