கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஒவ்வொரு பெருமையும் மதுரை மக்களுக்குச் சொந்தம்!”

ஜெர்லின் அனிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெர்லின் அனிகா

ரொம்ப சேட்டை பண்ணுவாள். அப்பாவைக் கிண்டலடித்தபடி இருப்பாள். அவர்தான் ரொம்ப இஷ்டம். சின்ன வயசுல அவளுக்கு ஏற்பட்ட குறைபாட்டை சிலர் எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுவார்கள்.

``பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று எங்க எல்லோருக்கும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தாள். இப்ப அர்ஜுனா விருதுக்கு ஜெர்லினைத் தேர்வு செய்திருக்காங்க. இதுல எங்களுக்கு மட்டுமல்ல, மதுரை மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி’’ என்று நெகிழ்கிறார்கள் ஜெர்லின் அனிகாவின் குடும்பத்தினர்.

‘நானும் ஜெயிக்கப் பிறந்தவள்’ என்று உலகுக்குத் தன் ஒவ்வொரு வெற்றியின் மூலமும் உணர்த்திப் பல சாதனைகளைப் படைத்து வரும் பேட்மின்டன் சாம்பியன் ஜெர்லின் அனிகா, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர், செவி மற்றும் பேச்சுத்திறன் சவால் உள்ளவர். சிறுவயது முதல் பேட்மின்டனில் சாதனை படைத்துவருகிறார். அதன் உச்சமாக கடந்த 2021-ல் பிரேசிலில் நடந்த ‘டெஃப்லிம்பிக்கில்' இந்தியா சார்பில் பங்கேற்று மூன்று தங்கப்பதக்கங்களை வென்று நாட்டுக்கே பெருமை சேர்ந்தார். அந்தப் போட்டியில் பங்குபெற்று நாடு திரும்பியபோது டெல்லியில் விருந்தளித்த பிரதமர் மோடி, ஜெர்லின் அனிகாவிடம் தனி கவனம் எடுத்து நேரம் செலவிட்டது எல்லோராலும் பேசப்பட்டது. வில்லாபுரம், அவனியாபுரம் பகுதி மக்கள் அப்போது மிகப்பெரிய வரவேற்பு அளித்து அசத்தினர். அப்போது முதல் மதுரையின் மகளாகிவிட்டார் ஜெர்லின் அனிகா.

“ஒவ்வொரு பெருமையும் மதுரை மக்களுக்குச் சொந்தம்!”

தற்போது மதுரை லேடி டோக் கல்லூரியில் பொருளாதாரம் படித்துவரும் நிலையில்தான் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த ஜெர்லின் அனிகாவை வில்லாபுரத்திலுள்ள வீட்டில் சந்தித்தேன்.

குறைபாடு தெரியாத அளவுக்கு தன்னம்பிக்கையுடன் வளர்த்த பெற்றோர்தான் அவரின் எண்ணத்தை வெளிப்படுத்துபவர்களாகப் பயணித்துவருகிறார்கள். என்னிடம் பேசிய தந்தை ஜெயரட்சகன், ‘‘எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். இவர்களில் இரண்டாவது பிறந்தவர் ஜெர்லின். பிறந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் அவளுக்கு இப்படிக் குறைபாடு இருப்பது தெரிந்தது. நூறு சதவிகிதக் குறைபாடு என்பதால் குணப்படுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் கவலை ஏற்பட்டது உண்மைதான். ஆனாலும், அப்படியே இருந்துவிடக்கூடாது. அவளை நன்றாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஜெர்லின் ஆறாம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படித்தாள். அதன் பின்பு மாநகராட்சி அவ்வை பள்ளியில் சேர்ந்தாள். நான் கிரிக்கெட் விளையாடப் போவேன். ஜெர்லினுக்கு எட்டு வயதிலிருந்தே பேட்மின்டன் விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. நாங்கள் எதையும் அவளிடம் திணிக்கவில்லை. பள்ளியில் அவளாகவே விளையாடி போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற ஆரம்பித்தாள். ‘சிறப்பாக ஆடுகிறாள், முறையான பயிற்சி அளித்தால் பெரிய அளவில் சாதிப்பாள்’ என்று பலரும் சொன்னார்கள். அதனால் பயிற்சியாளர் சரவணனிடம் பயிற்சிக்கு அனுப்பினேன். அவர் சிறப்பாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று வந்தவள், 2017-ல் துருக்கியில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு 5-வது இடம் பிடித்தாள். 2018-ல் மலேசியாவில் நடந்த ஆசியன் பசிபிக் பேட்மின்டன் போட்டியில் இரண்டு வெள்ளியும், ஒரு வெண்கலமும், 2019-ல் சீன தைபேயில் நடந்த சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலமும் வென்றாள்.

குடும்பத்துடன் ஜெர்லின் அனிகா
குடும்பத்துடன் ஜெர்லின் அனிகா

அதைத் தொடர்ந்துதான் பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே நியூடோல்ட்டை வீழ்த்தியும், கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் சேர்ந்து மலேசிய ஜோடியை வீழ்த்தியும், குழுப் போட்டியில் வென்றும் மொத்தம் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றாள். சின்ன வயதில் அவளை நினைத்து வேதனைப்பட்டது தவறு என்பதை தன் சாதனை மூலம் உணர்த்தினாள். இதற்கு பயிற்சியாளர் சரவணனும் ஒரு காரணம்.

பிரேசிலில் பதக்கம் வென்று டெல்லி திரும்பியபோது பிரதமர் மோடி விருந்து வைத்து ஜெர்லினிடம் அக்கறையாகப் பேசியது ரொம்பவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்ததாக சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் மதுரை அணிக்கு முன்பாக ஜோதி ஏந்திச் செல்லும் பெருமை கிடைத்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க வந்த பிரதமர், அப்போதும் ஜெர்லினைக் குறிப்பிட்டுப் பேசியதை எங்களால் மறக்கமுடியாது. ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டிக்குக் கூட்டிச்செல்லும்போதும் பொருளாதாரப் பிரச்னைகள் இருந்துவந்தன. 2019-ல் ஹெச்.சி.எல் நிறுவனம் உதவி செய்யத் தொடங்கியதை மறக்க முடியாது. இந்நிலையில்தான் இப்போது அர்ஜுனா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. அவளால் எங்களுக்குப் பெருமையான அடையாளம் கிடைத்துள்ளது. இனி அவளுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பெருமையும் மதுரை மக்களுக்குச் சொந்தமானது’’ என்றார்.

“ஒவ்வொரு பெருமையும் மதுரை மக்களுக்குச் சொந்தம்!”

‘‘வீட்டில் ஜெர்லின் எப்படி?’’ என்று அவர் அம்மா லீமா ரோஸ்லினிடம் கேட்டேன். ‘‘ரொம்ப சேட்டை பண்ணுவாள். அப்பாவைக் கிண்டலடித்தபடி இருப்பாள். அவர்தான் ரொம்ப இஷ்டம். சின்ன வயசுல அவளுக்கு ஏற்பட்ட குறைபாட்டை சிலர் எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுவார்கள். அப்போது வருத்தமாக இருக்கும். ஆனால், அது ஒரு பிரச்னையே இல்லை என்பது போல் தன்னம்பிக்கையுடன் சாதித்து இன்னைக்கு எல்லோருக்கும் பெருமை தேடித் தந்துள்ளாள். கடந்த ஆண்டு அவள் விகடன் ஜெர்லினுக்கு விருது கொடுத்தது. தினமும் அதிகாலையிலும் மாலையிலும் பயிற்சிதான். படிப்புல ஆவரேஜ்தான். டான்ஸ்ல ரொம்ப ஆர்வம்’’ என்றார்.

வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பும்போது ‘அடுத்த ஒலிம்பிக்கில் இன்னும் அதிகமாக பதக்கங்களை வெல்வேன்' என்று ஜெர்லின் அனிகா கையை உயர்த்திக் காட்டினார் உற்சாகமாக.