ஸ்ரேயாஸூக்குக் காயம்:
நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் ஓடிஐ போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ரஜத் பட்டிதர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அஷ்வின் சொன்ன ஐடியா:
இந்த ஆண்டின் இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பைக்காக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓர் ஆலோசனையை வழங்கியுள்ளார். அதாவது, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் டாஸை வெல்லும் அணிக்குக் கூடுதல் சாதகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. துபாயில் 2021-ல் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்த விஷயத்தை அனைவருமே உணர்ந்திருப்போம். இதை மனதில் வைத்தே அஷ்வின் ஒரு ஐடியாவை வழங்கியிருக்கிறார். அதாவது, ஒருநாள் போட்டியை மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக முன்னதாக 11:30 மணிக்கே தொடங்கினால் ஆட்டத்தில் பனியின் தாக்கம் பெரிதாக இருக்காது எனக் கூறியுள்ளார். அஷ்வினின் இந்த ஐடியாவை இந்திய கேப்டன் ரோஹித்தும் ஆமோதித்துப் பேசியிருக்கிறார். அதேநேரத்தில், இதை ஒளிபரப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாபர் அசாம் சர்ச்சை:
பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் பற்றி இணையதளத்தில் பெரும் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பாபர் அசாம் ஒரு பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சில புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. எந்தவித உறுதித்தன்மையும் அற்ற அந்த வீடியோக்களை வைத்துக் கொண்டு சிலர் பாபர் அசாமுக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்க, ஹர்சா போக்லே உட்பட கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலர் பாபர் அசாமுக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

ஹாக்கி களேபரம்:
ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையிலான ஆட்டம் பரபரப்பாக நடந்தது. இந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ஜப்பான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் அந்த பெனால்டியை எடுத்த சமயத்தில் ஜப்பான் சார்பில் 12 வீரர்கள் களத்தில் இருந்திருக்கின்றனர். கள நடுவர்கள் அதைக் கவனிக்காத நிலையில் இப்போது இந்தச் சம்பவம் பெரிய சர்ச்சையாகியுள்ளது.

அடுத்த சுற்றில் ஜோக்கோவிச்:
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ரொபார்ட்டோ கார்பயஸூக்கு எதிராகக் களமிறங்கிய ஜோக்கோவிச் 6-3, 6-4, 6-0 என முதல் மூன்று செட்களையுமே வென்று போட்டியையும் வென்றார். இதன்மூலம் ஜோக்கோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். கடந்த வருடம் இதே ஆஸ்திரேலிய ஓபனில் தடுப்பூசி சர்ச்சையில் ஜோக்கோவிச்சுக்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் கடும் மோதல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.