Published:Updated:

அடானு தாஸ்: ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைத்துப் பாயும் அம்பு!

இந்திய வில்வித்தை அணி இம்முறை நிச்சயம் ஒரு ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்கள் பிரிவில் பதக்க நம்பிக்கை அளிக்கிறார் சீனியர் வீரர் அடானு தாஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இவர் வேறு யாரும் இல்லை, தற்போதைய நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரியின் காதல் கணவர்தான். இந்த தம்பதி உலககோப்பையில் கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்று அசத்தியது. தீபிகாவோடு இணைந்து ஒலிம்பிக்கில் கலப்பு அணி பிரிவில் பங்கேற்கும் இவர், தனிநபர் பிரிவிலும், ஆண்கள் அணிப் பிரிவிலும் பங்கேற்கிறார். வில்வித்தையில் இருக்கும் இரண்டு பிரிவுகளில், இவர் ரீகர்வ் (Recurve) பிரிவில் பங்கேற்கிறார்.

1992, ஏப்ரல் 5-ம் தேதி பிறந்தவரான அடானு தாஸ், 2008-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். 2013 வில்வித்தை உலகக் கோப்பையில் கலப்பு அணி பிரிவில் வெண்கலம் வென்றவர், 2014 உலகக் கோப்பையில் 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை எளிதாக முன்னேறினார். அந்தச் சுற்றில் தங்கம் வென்ற கொரிய வீரர் லீ சுங் யுன் இவரை வீழ்த்தினார். கடந்த முறை விட்ட பதக்கத்தை இந்த முறை வென்றுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அடானு.

மேற்கு வங்காளத்தில் உள்ள பாராநகரை பூர்வீகமாக கொண்டவர் அடானு. தனது 14-ம் வயதில் வில்வித்தை பயிற்சியினை தொடங்கிய அவர் மித்து டா என்பவரிடம் தொடக்க நிலை பயிற்சிகளை கற்றார். பின்னர் 2008-ம் ஆண்டில் டாடா வில்வித்தை பயிற்சி கூடத்தில் சேர்ந்து கொரிய பயிற்சியாளர் லிம் சே வாங்கினால் தனது கரியரின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். 29 வயதான அடானு தற்போது உலகின் முன்னணி வில்வித்தை ஆட்டக்காரர்களுள் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருக்கிறார் அடானி தாஸ். ஆனால், இந்த இடம் அவருக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சீரிய முயற்சி மற்றும் கடின உழைப்பு. இருந்தும் இடையே சில ஏமாற்றங்கள். தன் தொடக்க நாட்களில் டாடா பயிற்சிகூடத்தில் இடம் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டது முதல் 2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் மிக சிறிய தூரத்தில் தகுதி வாய்ப்பை இழந்தது என பல்வேறு மேடு பள்ளங்களைக் கொண்டது இவர் பயணம்.

Atanu Das
Atanu Das

2019-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று தனது கரியரில் புதிய உயரத்திற்குச் செல்ல பாதை திறந்தபோது அதற்கு எதிர்பாராத விதமாய் முட்டுக்கட்டை போட்டது கோவிட் பெருந்தொற்று. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டிய வேளையில் வேறு வழியே இல்லாமல் பயிற்சியை நிறுத்த வேண்டிய சூழல். ஆனாலும் இத்தனை சவால்களை புறந்தள்ளி இவ்வருடம் ஏப்ரல் மாதம் குவாடமாலாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஸ்பெயினின் டேனியல் காஸ்ட்ரோவை 6-4 என்ற கணக்கில் வென்று தனது முதல் உலகக்கோப்பை தங்கத்தை முத்தமிட்டார். அதற்கடுத்து பாரிஸில் நடந்த உலகக் கோப்பையில் தீபிகாவுடன் இணைந்து கலப்பு அணி பிரிவிலும் தங்கம் வென்றார்.

கோவிட் அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க அதனால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளும் சொற்ப எண்ணிக்கையாக குறைய கிடைத்த வாய்ப்புகள் மிக சிறப்பான முறையில் பயன்படுத்தி முழு நம்பிக்கையுடன் டோக்கியோ செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு