`சகோதரனின் தியாகம்; இந்திய குத்துச்சண்டையில் புது வரலாறு!’ - யார் இந்த அமித் பங்கால்?
அமித் தீவிரமாகப் பயிற்சியில் களமிறங்கியதை அடுத்து தனது சகோதரனுக்கான அஜய் குத்துச்சண்டையைக் கைவிட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்துவிட்டார்.
ஹரியானா மாநிலம் மைனா கிராமம்தான் 23 வயதான அமித் பங்காலின் சொந்த ஊர். அண்ணன் அஜய் மூலம்தான் குத்துச்சண்டை அமித்துக்கு பரீட்சையமானது. ஏன் அண்ணனின் வற்புறுத்தல் என்றுகூடச் சொல்லலாம். ‘என் சகோதரனின் கனவை நான் காண்கிறேன்’ என அவரே சில சமயங்களில் கூறியிருக்கிறார். விவசாயக் குடும்பம். விவசாயியான அமித்தின் தந்தைக்கு தர்மேந்திராதான் ஃபேவரைட் ஹீரோ. அதனால் அவர் நடித்த படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் அமித்தின் அப்பா ஆஜராகிவிடுவாராம். வளரும் பருவத்தில் தர்மேந்திராவை இவருக்குப் பிடித்துவிட்டது. ஆக்ஷன் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பினால் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பாராம். அப்போது, தான் ஒரு குத்துச்சண்டை வீரனாக ஆக வேண்டும் எனக் கனவெல்லாம் காணவில்லை.

அஜய் ஒரு அமெச்சூர் பாக்ஸர். தன் சகோதரனான அமித் பங்காலை அவர்தான் சௌத்ரி சோட்டு ராம் பாக்ஸிங் க்ளப்பில் சேர்ந்துவிட்டுள்ளார். 2007-ல் பயிற்சியைத் தொடங்கும்போது அமித் பங்காலுக்கு 12 வயது. அனில் தங்கார்தான் முதல் அவரது முதல் கோச். அமித்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை முதலில் கணித்ததும் அவர்தான். அமித்துக்குக் குத்துச்சண்டையின் மீது காதல் ஏற்படவும் அதுவே அவரது வாழ்க்கையாக மாறுவதற்கும் காரணம் அந்த முதல் பயிற்சியாளர் தான். அஜய் சைக்கிளை மிதித்துச் செல்ல அமித் பின்னால் உட்கார்ந்துகொண்டு பயிற்சிக்குச் செல்வாராம். அமித் தீவிரமாகப் பயிற்சியில் களமிறங்கியதை அடுத்து தன் சகோதரனுக்காக அஜய் குத்துச்சண்டையைக் கைவிட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் இணைந்துவிட்டார். பஞ்சாபி உணவுகள் என்றால் அலாதி பிரியம். வீட்டில் அம்மா செய்யும் இனிப்புகளை ஒரு பிடி பிடித்துவிடுவாராம். ஆரம்பத்தில் டயட் கன்ட்ரோல் சற்று கடினமாகத்தான் இருந்துள்ளது.
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த ஜூனியர் பிரிவுகளுக்கான போட்டியில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துள்ளார். 25-வது தேசிய சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அனைவரது கவனமும் இவர் மீது திரும்பியது. 2017-ல் நேஷனல் பாக்ஸிங் சாம்பியனில் அறிமுகம். ஆரம்பமே அதிரடிதான் முதல் தொடரிலேயே தங்கப்பதக்கத்தை தட்டி வந்தார். அடுத்தது ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை போட்டி அதே வருடம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடந்தது. அதில் வெண்கலப் பதக்கம். அடுத்து 2018-ல் பல்கேரியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம் என அதகளப்படுத்தினார்.
தங்கப் பதக்கங்கள் மட்டுமல்ல 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெஸ்கிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மாடோவை வீழ்த்தி கவனம் பெற்றார். பல முன்னணி வீரர்களுடன் சிறப்பாக விளையாடியுள்ளார்.
ஒலிம்பிக்கிலிருந்து 49 கிலோ பிரிவை நீக்கியதையடுத்து தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். கடந்த ஒரு வருடங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ‘நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும். ஆனால் 49 கிலோ எடைப்பிரிவை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிய காரணத்தால் தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளேன்” என ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு முன்பு பேசியிருந்தார். ஏப்ரல் மாதத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமித் பங்கால் 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.
தற்போது ரஷ்யாவில் நடந்து வரும் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதில் அமித் வெற்றி பெற்றால் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது பதக்க வேட்டை தொடர நாம் வாழ்த்துவோம்.