Published:Updated:

ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா... ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகுமா?

ஜப்பான்
ஜப்பான்

ஜப்பானியர்களிடமும் ஒலிம்பிப் போட்டிகளை நடத்துவதற்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது.

ஜப்பானில் கொரோனா பரவல் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்திருக்கிறது. நாட்டின் 47 மாகாணங்களில் 13 மாகாணங்களில் தினசரி தொற்று விகிதம் சமீபத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தலைநகர் டோக்கியோவையும் சேர்த்து ஒன்பது மாகாணங்களில் அவசரநிலையைப் பிறப்பித்து ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா உத்தரவிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு பல இடங்களில் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரமான ஒசாகாவில் நிலைமை கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் நான்காவது அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில் படுக்கைகள், வென்ட்டிலேட்டர்கள் இன்றி ஒசாகாவின் மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. ஒசாகாவின் 13,770 கோவிட் நோயாளிகளில் வெறும் 14 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; மற்றவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கொரோனா மரணங்களில் நான்கில் மூன்று சதவிகித மரணங்கள், நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 7 சதவிகிதம் மட்டுமே உள்ள ஒசாகா அமைந்திருக்கும் மேற்குப் பகுதியில் பதிவாகியிருக்கின்றன.

மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போடுதல் ஜப்பானில் மிக மெதுவாகவே நடந்துவருகிறது. பிப்ரவரியில் தொடங்கி, நாட்டின் மக்கள்தொகையில் இதுவரை 2.4 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜூலை இறுதிக்குள் தடுப்பூசி போடும் பணியை முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் ஜப்பான் அரசு, தற்போதைய நிலையில் டோக்கியோவில் 5 ஆயிரம், ஒசாகாவில் 2,500 என்ற எண்ணிக்கையில் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் மருத்துவப் பணியாளர்களில் பாதி எண்ணிக்கையிலேயே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி சித்திரிப்பு
தடுப்பூசி சித்திரிப்பு

இந்தப் பின்னணியில், ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 6 வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய நெருக்கடி ஜப்பான் அரசுக்கும், உலக நாடுகளுக்கும் ஒருங்கே எழுந்துள்ளது.

ஜப்பானில் கொரோனா பரவலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வதே பாதுகாப்பானது என்று மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் ஏற்கெனவே ஓராண்டு தள்ளிப் போய்விட்ட நிலையில், இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்திவிடுவது என்ற போக்கு காணப்படுவது உலகம் முழுவதிலும் இருந்து கடும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது.

ஒளி குன்றுகிறதா ஒலிம்பிக் சுடர்?
ஜப்பானியர்களிடமும் ஒலிம்பிப் போட்டிகளை நடத்துவதற்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது. கடந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகளின்படி, 83 சதவிகிதம் பேர் டோக்கியோவில் ஒலிம்பிக், பாரலிம்பிக் போட்டிகள் நடப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளிலிருந்து இந்த எண்ணிக்கை 14 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

உருமாறிய வைரஸின் ஊடுருவலைத் தடுக்கத் தவறிவிட்டோம்; இப்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கவிருக்கும் சூழலில், நிலைமை மேலும் மோசமடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 6,000 மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் கூட்டமைப்பு ஒன்று, ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யக் கோரி வலுவான கோரிக்கை ஒன்றைப் பிரதமருக்குக் கடிதம் மூலம் அனுப்பியிருக்கிறது.

ஒலிம்பிக், கொரோனா
ஒலிம்பிக், கொரோனா

இரண்டு உலகப் போர்கள் காரணமாக 1916, 1940, மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகியிருக்கின்றன. ஆனால், இப்போது வலுக்கும் எதிர்ப்புகளைத் தாண்டி, கோவிட் தடுப்பு நடைமுறைகளுடன் கண்டிப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் ஜோதி ஒளிருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு