Published:Updated:

Abu Dhabi Grand Prix: 2021-ன் F1 சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

அபுதாபி கிராண்ட் ப்ரீ
News
அபுதாபி கிராண்ட் ப்ரீ

பாசிட்டிவ்வான மனநிலையுடன் ஹாமில்ட்டனும், தெளிவான மனநிலையுடன் வெர்ஸ்ட்டப்பனும் ஒரு நல்ல போட்டி நிறைந்த ரேஸை கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு F1 ரசிகனின் விருப்பமுமாக இருக்கிறது.

2021-ன் சாம்பியன் யார் எனத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை அபு தாபியில் மின்விளக்கொளியில் நடைபெறவிருக்கிறது. ஹாமில்ட்டனா, வெர்ஸ்ட்டப்பனா என ரோலர் கோஸ்டராக இருந்த 2021 ஃபார்முலா 1 சாம்பியன் யார் என நாளை தெரிந்துவிடும். டைட்டில் போட்டியாளர்கள் இருவருமே 369.5 என சமபுள்ளிகளுடன் இருக்கிறார்கள். F1 வரலாற்றிலேயே டைட்டிலுக்கான போட்டியாளர்கள் சம அளவிலான புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே இரண்டாவது முறை.

இதற்கு முன்பு 1974-ல் தான் இதே போலச் சம அளவிலான புள்ளிகளுடன் அந்த ஆண்டி கடைசி ரேஸ். அந்தப் போட்டியில் லோட்டஸ் அணியைச் சேர்ந்த எமர்ஸன் ஃபிட்டிபால்டி மற்றும் ஃபெராரியின் க்ளே ரெகாஸோனி ஆகிய இருவரும் 52 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் இருப்பார்கள். மூன்றாவது இடத்தில் 42 புள்ளிகளுடன் டிரெல் அணியைச் சேர்ந்த ஜோடி ஷெக்டரும் இருப்பார். அன்றைய தேதியில் முதலிடத்திற்கு 9 புள்ளிகள் கொடுக்கப்படும். முதல் 6 இடங்களில் முடிப்பவர்களுக்கு மட்டுமே புள்ளிகள் இடம் கிடைக்கும். அன்றைய தேதியில் ஒரு F1 போட்டியை முழுமையாக முடிப்பதே சவாலான காரியம் தான். அப்படி இருக்கையில் அந்தப் போட்டியில் ரெகாஸோனி 11 இடத்தில் முடிக்க, 3-வது இடத்தில் போட்டியை முடித்து தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றிருப்பார் ஃபிட்டிபால்டி.

வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டன்
வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் கழித்து டாப் இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் சம அளவிலான புள்ளிகளுடன் இருக்க அபுதாபிக்குள் நுழைகிறது 2021-ன் சாம்பியன் டிசைடர். இந்த சீஸனில் நம்மை சீட் நுனியில் அமர வைக்கப்போகும் மற்றொரு போட்டி. தங்களிடம் இருக்கும் முழு பலத்தையும், தங்களுடைய துருப்புச்சீட்டுகளையும், போட்டியை ஜெயித்து தரக்கூடிய ஸ்ட்ராடஜிக்கையும் களமிறக்க ரெட்புல், மெர்சிடீஸ் அணிகளும், வெர்ஸ்ட்ப்பனும் ஹாமில்ட்டனும் தயாராக இருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் டாப் இரண்டு போட்டியாளர்களும் நேர்மையான முறையில் முடிக்க வேண்டும் என புதிய அறிவிப்பு ஒன்றையும் செய்திருக்கிறது F1 நிர்வாகம். இரண்டு போட்டியாளர்களும், தங்கள் சக போட்டியாளர் ரேஸை முடிக்கக்கூடாது என வேண்டும் என்றே கார்களை மோதி சேதாரம் ஏற்படுத்தினாலோ அல்லது வேறு ஏதாவது இடையூறு ஏற்படுத்தினாலோ, குறைந்தபட்சம் சில புள்ளிகள் பெனால்டியாவும், அதிகபட்சமாக சஸ்பென்டும் செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இந்தப் போட்டியில் யாரும் அறியாமல் விபத்து ஏற்பட்டு போட்டியின் முடிவில் இரண்டு போட்டியாளர்களுமே சமபுள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில், இந்த ஆண்டு அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் வெர்ஸ்ட்ப்பனே சாம்பியனாக அறிவிக்கப்படுவார். எனவே, விபத்து ஏற்படாமல் அதிக கவனத்துடன் செயலாற்ற வேண்டியது ஹாமில்ட்டன் தான்.

F1 வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர் மைக்கேல் ஷூமேக்கர். அந்த சாதனையைத் தானும் நிகழ்த்தி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் ஹாமில்ட்டன். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானுடன் முதல் முறை கடைசி ரேஸ் வரை முட்டி மோதி சமநிலையில் இருக்கிறார் வெர்ஸ்ட்டப்பன். இந்த இறுதிப் போட்டியின் சுவாரஸ்யத்தை இதனை விட வேறு எதுவும் அதிகப்படுத்திவிடாது.ஃபார்முலா 1-ல் பெரும்பாலான இறுதிப் போட்டிகள் வெற்றியாளர் யார் என்ற தீர்மானத்துடன் தான் தொடங்கும். ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இறுதி நிமிடம் வரை பரபரப்புடனே காணப்படும். அப்படியான பரபரப்புடன் என்னென்னவெல்லாம் நடக்குமோ என்ற ஒரு எதிர்பார்ப்புடனும் நம்மை வைத்திருக்கிறது இந்த சீஸன்.

வெர்ஸ்ட்டப்பன்
வெர்ஸ்ட்டப்பன்

வேகமான லேப்பும் முக்கியம்

இரண்டு போட்டியாளர்களும் சமநிலையில் இருப்பதால் ஒவ்வொரு புள்ளியும் அவசியம். அந்த வகையில் வேகமான லேப்புக்கான அந்த ஒரு புள்ளியும் சாம்பியனை தீர்மானிக்கும் புள்ளியாக அமையலாம். இருவரில் ஒருவர் முதல் எட்டு இடங்களுக்குள் போட்டியை முடித்தால் கூட சாம்பியன் அவர் தான். ஆனால், முதல் எட்டு இடங்களைக் கடந்து 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் (மிக மிக அரிதான சூழ்நிலையில்) இருவரும் போட்டியை முடிக்கும் பட்சத்தில் மேற்கூறிய வேகமான லேப்புக்கான அந்த ஒரு புள்ளியும் முக்கியமானதாகி விடும். போட்டியை வெல்வதில் தான் இருவரின் கவனமும் இருக்கமே ஒழிய, புள்ளிகளை வைத்து விளையாட விரும்ப மாட்டார்கள். எனினும், போட்டி எந்தத் திசையில் வேண்டுமானாலும் மாறலாம் அல்லவா.

வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டனைக் கடந்து இந்தப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த இருவர் என்றால் அது பெரஸ் மற்றும் போட்டாஸ் தான். தங்கள் அணியினர் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக எந்த எல்லைக்கும் சென்று போட்டியிடத் தயாராக இருக்கிறார்கள் இருவரும். வேகமான லேப்புக்கான புள்ளியை எத்திரணியிடம் இருந்து தட்டிப் பறிப்பதில் இவர்களின் பங்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்க்யூட் எப்படி?

அபுதாபியின் யாஸ் மரீனா சர்க்யூட்டிலேயே நாளைய கிராண்ட் ப்ரீ போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கு முன்னரும் இந்த சர்க்யூட்டில் கிராண்ட் ப்ரீ போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.ஆனால் இம்முறை ட்ராக்கை கொஞ்சம் மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள். முன்னதாக ஓவர்டேக்குகளுக்கு அதிகம் சாதகமில்லாமல் இருந்த சர்க்யூட்டைக் மாற்றி வடிவமைத்திருப்பதால் நிறைய ஓவர்டேக்குகளை இம்முறை நாம் எதிர்பார்க்கலாம்.

இரண்டு கார்களில் எந்த கார் அபுதாபி ட்ராக்கில் சிறப்பான செயல்பாடு இருக்கும் என்று கேட்டால், தனிப்பட்ட முறையில் ஒரு காரை நம்மால் தேர்வு செய்ய முடியவில்லை. இரண்டு கார்களும் அதனதன் தன்மையில் சிறப்பான செயல்பாட்டையே கொண்டிருக்கின்றன, மேலும் அபுதாபி ட்ராக்கும் இரண்டு கார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலேயே இருக்கிறது.

அபு தாபி கிராண்ட் ப்ரீ, யாஸ் மரீனா சர்க்யூட், F1
அபு தாபி கிராண்ட் ப்ரீ, யாஸ் மரீனா சர்க்யூட், F1
தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து போல் பொசிஷனில் ரேஸைத் தொடங்கப்போகிறார் வெர்ஸ்டப்பன். லூயிஸ் இரண்டாவது இடத்திலிருந்து தொடங்குவார். இருந்தாலும், வெர்ஸ்டப்பன் soft டயர்களில் ரேஸைத் தொடங்குவது அவருக்கு பாதகமாக அமையலாம். ஹாமில்ட்டன் மீடியம் டயர்களில் தொடங்குவார்.

என்ன இருந்தாலும் ட்டி நாளின் முடிவில், கார், ட்ராக் இவற்றைக் கடந்து இரண்டு டிரைவர்களில் யார் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்களோ, அவரே சாம்பியனாக இருக்கப் போகிறார். அந்த வகையில் F1 வரலாற்றிலேயே இது ஒரு சிறப்பான இறுதிப் போட்டியாக இருக்கும். ஆனால், கடந்த மூன்று கிராண்ட் ப்ரீக்களிலுமே வெற்றி பெற்று மிகவும் பாசிட்டிவ்வான மனநிலையில் இருக்கிறார் ஹாமில்ட்டன். கடந்த மூன்று போட்டிகளிலுமே இரண்டாம் இடம் பிடித்து கொஞ்சம் குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறார் வெர்ஸ்ட்டப்பன். முந்தைய போட்டிகளின் தோல்வியால் இன்றைய போட்டியை வெர்ஸ்ட்டப்பன் இழந்துவிடக்கூடாது. போட்டியை வெல்வதற்கான ரேஸ் கார் வெர்ஸ்ட்டப்பனுக்குக் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 21 போட்டிகளில் ஒரு ஜாம்பவானுடன் போட்டியிட்டு சண்டை செய்திருக்கிறார். அதனைக் கடைசி நேரக் குழப்பங்களால் வெர்ஸ்ட்டப்பன் கோட்ட விட்டு விடக்கூடாது.

பாசிட்டிவ்வான மனநிலையுடன் ஹாமில்ட்டனும், தெளிவான மனநிலையுடன் வெர்ஸ்ட்டப்பனும் ஒரு நல்ல போட்டி நிறைந்த ரேஸை கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு F1 ரசிகனின் விருப்பமுமாக இருக்கிறது. ஒரு தலையாகவே தொடங்கி ஒரு தலையாகவே இறுதிப்போட்டி முடிவதில் ரசிகர்களுக்குத் துளியும் விருப்பமில்லை.

இந்தப் போட்டி தான் ஆல்ஃபா ரோமியோவின் கிமி ராய்க்கோனனுக்கு இறுதிப் போட்டி. அவருடைய இடத்தைச் சீனாவைச் சேர்ந்த குவான்யூ சௌ நிரப்பவிருக்கிறார். 21 வெற்றிகள், 100 போடியம்கள் மற்றும் 18 போல் பொசிஷன்களைத் தன் பெயரில் எழுதியிருக்கும் கிமி தன்னுடைய 349-வது ரேஸோடு நாளை விடைபெறவிருக்கிறார்.

நாளை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது அபுதாபி கிராண்ட் ப்ரீ போட்டி. பொறுத்திருந்து பார்ப்போம் நாளை வரலாறு எப்படி எழுதப்படப்போகிறது என்பதனை..!