இந்திய தேசம் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை எட்டியிருக்கிறது. வரும் சுதந்திர தினத்தை ஒட்டுமொத்த தேசமுமே வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒரு தேசமாக இந்த 75 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் பெரும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைந்திருக்கிறது. விளையாட்டுத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த 75 ஆண்டுகளில் தேசமே பெருமைகொள்ளும் வகையில் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் செய்த சாதனைகள் (கிரிக்கெட் அல்லாத) பற்றிய ஒரு தொகுப்பு இங்கே...
1948 லண்டன் ஒலிம்பிக்ஸ்:

1948-ல் லண்டனின் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடர் சுதந்திர இந்திய வரலாற்றில் மிக முக்கிய சாதனைச் சுடர். பிரிட்டிஷ் இந்தியா எனும் காலனி ஆதிக்க அடையாளத்தைத் துறந்து சுதந்திர நாடாக முதல்முறையாக நம்முடைய மூவர்ண கொடியோடு இந்தியா இந்த ஒலிம்பிக்ஸில் களமிறங்கியிருந்தது. இதுவே ஒரு போற்றுதலுக்குரிய தருணம்தான் ஆயினும், இந்திய ஹாக்கி அணி தங்களின் வல்லமையால் இந்த ஒலிம்பிக்ஸை என்றைக்கும் மறக்க முடியாததாக மாற்றிவிட்டது. கிஷன் லால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டியில் தி க்ரேட் பிரிட்டனை 4-0 என அவர்களின் சொந்த மண்ணில் வைத்தே வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஆங்கிலேயேர்களின் மண்ணில் தேசிய கீதம் ஒலிக்க பிரிட்டனின் கொடிக்கு மேல் மூவர்ண கொடி பறந்தது. இந்திய தேசத்திற்கு கிடைத்த முதல் கௌரவம் இது.
பறக்கும் சிங்:

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ராதான். இதன்மூலம், 2021 வரை உலக அரங்கில் தடகளத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், விதிவிலக்காக 1950 களிலேயே ஒரு இந்திய வீரர் தடகளத்தில் சாதனை மேல் சாதனை செய்திருக்கிறார். அவர் 'Flying Sikh' என அழைக்கப்பட்ட மில்கா சிங்! ஓட்டப்பந்தயத்தில் ஆசிய போட்டிகளில் மட்டும் 4 தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறார். காமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கென தங்கம் வென்று கொடுத்த முதல் வீரரும் அவரே. 1960 ரோம் ஒலிம்பிக்ஸில் 400 மீ ஓட்டத்தில் வெறும் 0.1 விநாடியில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டிருந்தார். ஒலிம்பிக்ஸ் பதக்கம் இல்லையென்றாலும் மில்கா சிங் எனும் பெயரைத் தவிர்த்துவிட்டு இந்திய விளையாட்டு வரலாற்றை எழுதவே முடியாது.
பெண் புயல் பி.டி.உஷா:

பி.டி.உஷாவுக்கு இப்போது 58 வயது. தடகளத்தில் அவரது கால்கள் தடதடத்து சில தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆயினும், இன்றைக்கும் காட்டிலும் மேட்டிலும் தடகள கனவோடு ஓடிக்கொண்டிருக்கும் இளம்பிள்ளைகள் அத்தனைக்கும் பி.டி.உஷாதான் இன்ஸ்பிரேஷன். அவர் செய்த சாதனைகள் அப்படி! 1986 ஆசிய போட்டிகளில் மட்டும் 4 தங்கத்தையும் ஒரு வெள்ளியையும் வென்றிருந்தார். ஓட்டத்திற்காக அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சாதனை தடங்களாக மாறிப்போயின. 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் பி.டி.உஷா உறுதியாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 0.01 விநாடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பி.டி.உஷா பறிகொடுத்தார். உஷாவின் கனவு கலைந்தது. ஆனால், விளையாட்டில் கால்பதிக்கும் அத்தனை இந்திய பெண்களுக்குமான ஆதர்சமாக பி.டி.உஷா மாறினார்.
பயஸ் ஏற்படுத்திய மீட்சி!

ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்தான் என்றைக்கும் ஒரு தேசம் விளையாட்டுத்துறையில் எட்டியிருக்கும் உயரத்திற்கான அளவீடாக பார்க்கப்படுகிறது. அத்தகைய ஒலிம்பிக்ஸில் ஒருகட்டம் வரைக்கும் இந்தியா சார்பில் ஹாக்கி அணி மட்டுமே பதக்கங்களை வென்று கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், 1980க்கு பிறகு ஹாக்கியிலும் இந்திய அணியால் தேர்ந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. அதிலுமே இந்தியாவிற்குப் பதக்கமே இல்லாமல் போனது. ஒலிம்பிக்ஸில் ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் இந்தியா என்கிற பெயருக்கு அருகே பூஜ்ஜியம் என்றே சிலகாலத்திற்குப் பதிவாகிக் கொண்டிருந்தது. இதை மாற்றி காட்டியவர் லியாண்டர் பயஸ்தான். 1996-ல் அட்லான்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் மீட்சி என்றே இதை குறிப்பிடலாம். இதன்பிறகான ஒலிம்பிக்ஸ் தொடர்களின் இந்திய வீரர் வீராங்கனைகள் மிகச்சிறப்பாக பதக்கங்களை வெல்லத் தொடங்கினர்.
தேசத்தின் கனவைச் சுமந்த கர்ணம்!

மேரிகோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மீராபாய், லவ்லினா, சாக்சி மாலிக் என கடந்த 10 ஆண்டுகளில் எக்கச்சக்க இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றிருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக ஒரு உந்துசக்தியாக அமைந்தது என்னவோ கர்ணம் மல்லேஸ்வரிதான். 2000-ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் பளு தூக்கும் போட்டியில் மொத்தமாக 240 கிலோ அளவுக்கு எடையை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். 1984-ல் பி.டி.உஷா தவறவிட்டதை கர்ணம் மல்லேஸ்வரி சாதித்துக் காட்டினார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் பெண் அவரே!
அபினவின் தங்கம் ஏற்படுத்திய தாக்கம்:

2008-ல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். தனிப்பட்ட விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் வீரர் அபினவ் பிந்த்ராதான். ஒலிம்பிக்ஸ் தங்கம் என்பதை விட, இந்தத் தங்கம் இந்திய பெற்றோர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம், அதுதான் ரொம்பவே பெரிது. பெற்றோர்களுக்கு விளையாட்டின் மீது ஒரு தனி மதிப்பை இந்தத் தங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தனிப்பட்ட விளையாட்டுகளில் அதிகப்படியான சிறுவர்களும் சிறுமிகளும் பங்கேற்கத் தொடங்கினர். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் இன்ஸ்பிரேஷனாக இருந்தது அபினவ் பிந்த்ராவே. அந்த வகையில் ஒரு தலைமுறையையே விளையாட்டை நோக்கி கவனம் குவிக்க வைத்த பெருமை அபினவ் பிந்த்ராவையே சேரும்.
துவழாத பி.வி.சிந்து:
ஒலிம்பிக்ஸிற்குத் தயாராவது என்பது ஒரு தவத்தைப் போன்றது. மாபெரும் பொறுமையும் கவனக்குவிப்பும் அதற்கு இன்றியமையாதது. பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தீரா வேட்கை உடையவர்களால் மட்டுமே சாதிக்க முடியும். பி.வி.சிந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ்களில் பதக்கம் வென்றதும் அதனால்தான்! பேட்மிண்டனில் 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கத்தை வென்றவர், 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். விடுபட்டுபோயிருக்கும் அந்தத் தங்கப்பதக்கத்தை 2024 பாரிஸ் ஓலிம்பிக்ஸில் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையோடு இப்போது காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறார். பாரிஸிலும் சிந்துவின் மன உறுதிக்கு பரிசு கிடைக்கும்பட்சத்தில் இந்திய ஹாக்கி அணிக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற இந்தியர் எனும் பெருமையை பெறுவார்.
புது சரித்திரம் படைத்த நீரஜின் ஈட்டி:

மில்கா சிங் 0.1 விநாடியிலும் பி.டி உஷா 0.01 விநாடியிலும் தவறவிட்டதை, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் எந்த பிசிறும் இல்லாமல் ரொம்பவே சௌகரியமாக நீரஜ் வீசிய ஈட்டி சாதித்துக் காட்டியது. ஒலிம்பிக்ஸில் தடகளத்தில் இந்திய வீரர் ஒருவர் வென்ற முதல் பதக்கமே தங்கமாக ஜொலித்தது. நீரஜின் ஈட்டி பாய்ந்த அந்த 87.58 மீ இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றைக்கும் மறக்க முடியாத எண்ணாக மாறியிருக்கிறது. அபினவ் பிந்த்ராவின் தங்கம் ஏற்படுத்திய தாக்கத்தை போன்றே நீரஜ் சோப்ராவின் தங்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. தடகளத்தை நோக்கி இந்திய இளைஞர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
உயிர்த்தெழுந்த ஹாக்கி:

1920க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒலிம்பிக்ஸ் தொடர்களில் மட்டும் இந்திய ஹாக்கி அணி 11 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 8 தங்கப்பதக்கங்களும் அடக்கம். ஹாக்கி முழுக்க முழுக்க இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆனால், இந்த ஆதிக்கமெல்லாம் 1980 வரை மட்டும்தான். ஹாக்கி போட்டியில் அறிமுகமான சில மாற்றங்கள் இந்தியாவிற்கு தடுமாற்றத்தை கொடுத்தது. 1980க்குப் பிறகு இந்தியாவிற்கு பதக்கமே இல்லை. அந்த பதக்க ஏக்கத்தை கடந்த ஆண்டில் இந்திய ஹாக்கி அணி தீர்த்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் 41 ஆண்டுகள் கழித்து மீண்டும் பதக்கத்தை வென்றது. அந்த வெண்கலம் இந்தியாவில் ஹாக்கியை உயிர்த்தெழச் செய்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.
செஸ்ஸைத் திருவிழாவாக்கிய விஸ்வநாதன் ஆனந்த்:

இந்தியாவின் செஸ் தலைநகரம் எனும் பெருமையுடன் கம்பீரமாக செஸ் ஒலிம்பியாட் தொடரை சென்னை நடத்தி முடித்திருக்கிறது. சென்னையில் செஸ்ஸை ஒரு திருவிழாவாக கொண்டாடுவதற்கான விதையை போட்டது விஸ்வநாதன் ஆனந்தே. 1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து செஸ்ஸில் இந்தியாவின் அடையாளமாக மாறினார். இன்றைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் வியப்புறும் வகையில் செஸ் ஒலிம்பியாடை நடத்தியதோடு மட்டுமல்லாமல் இந்த முறை இந்தியா சார்பில் இரண்டு அணிகள் பதக்கங்களையும் வென்றிருக்கின்றனர். இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது விஸ்வநாதன் ஆனந்தும் அவர் வென்ற கிராண்ட்மாஸ்டர் பட்டமுமே!
இவை தவிர இன்னும் பல சாதனைகளையும் விளையாட்டுத்துறையில் இந்தியா செய்திருக்கிறது. இங்கே குறிப்பிடப்படாமல் விட்டு நீங்கள் முக்கியமென நினைக்கும் இந்தியாவின் சாதனைகளை கமென்ட் செய்யுங்கள் மக்களே!