சமீபத்தில் அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடைபெற்ற 5000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியை 13:25.65 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளார் அவினாஷ் சேபிள். இதன்மூலம் 5000 மீ ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தை குறைந்த நேரத்தில் நிறைவு செய்த 30 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்துள்ளார் அவர். 1992-ஆம் ஆண்டு பகதூர் பிரசாத் என்ற வீரர் முழு தொலைவை 13:29.70 நிமிடங்களில் ஓடியதே முந்தைய சாதனையாக இருந்தது.

ராணுவ வீரரான அவினாஷ் சேபில் இதுவரை ஏழு தேசிய சாதனைகளை புரிந்துள்ளார். தன் சொந்த சாதனைகளையே தொடர்ந்து முறியடிப்பதுதான் அவரின் வழக்கம். 2018-ம் ஆண்டு ஏற்பட்ட காயத்தால் அந்தாண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் அவரால் பங்கேற்க இயலவில்லை. ஆனால் அதே வருடத்தில் நடைபெற்ற மற்றொரு தேசிய ஓட்டத்தில் 8.29.80 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்து தன் முதல் தேசிய சாதனையை படைத்தார். தன் முதல் சாதனையை அதற்கடுத்த வருடமே 8.28.94 என்ற நேரத்தில் முடித்து முறியடித்து 2019-ம் ஆண்டு உலக மற்றும் தேசிய தடகள தொடர்களுக்கு தகுதியும் பெற்றார். உலக அளவிலான ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் 1991-ம் ஆண்டு தீனா ராமிற்கு பிறகு பங்கேற்கும் முதல் இந்திய வீரர் அவினாஷ்.
ஆசிய போட்டியில் புதிய தேசிய சாதனையை படைத்தார். உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும், முதல் இந்திய வீரராகவும் உயர்ந்தார் அவினாஷ். இறுதிச்சுற்றில் மேலும் ஒரு தேசிய சாதனை (8.21.37). 2020-ம் ஆண்டு அரை-மாரத்தான் போட்டி ஒன்றை 1.00.30 விநாடிகளில் முடித்தார் அவினாஷ். ஓர் இந்தியர் அரை-மாரத்தான் ஓட்டத்தை 61 நிமிடங்களுக்குள் கடப்பது அதுவே முதல்முறை.

5000 மீ ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவினேஷ் சேபில் முதல்முறையாக கலந்துகொண்டது இந்த ஆண்டில்தான். ஆனால் தொடக்கத்திலேயே 13.39.43 என்ற புதிய சாதனை அவர் வசம் வந்து சேர்ந்தது. அவினாஷ் சாப்லே மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டம் பகுதியில் உள்ள மண்ட்வா கிராமத்தில் பிறந்தவர். எந்த ஒரு போக்குவரத்து வசதிகளும் இல்லாத தன் கிராமத்திற்கும் பள்ளிக்கும் இடையேயான தூரம் 7 கி.மீ. அத்தூரத்தை தினமும் நடந்தே கடப்பாராம் அவினாஷ். பள்ளி படிப்பிற்கு பின் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர் ஸ்டீபிள் சேஸ் பயிற்சியை தொடங்கியது 2015-ம் ஆண்டிற்கு பிறகுதான்.
இந்திய நாட்டின் சிறிய கென்யா என்றழைக்கப்படும் பீட் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இயற்கையாகவே மிக வலிமையானவர்கள். அவினாஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இன்றைய தேதியில் நம் நாட்டில் வேறு வீரர்கள் கிடையாது !