Published:Updated:

தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி!
தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி!

தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி!

திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில், எவர் ஒருவராலும் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு மாணவி மீரா மிகச் சிறந்த உதாரணம். சென்ற கல்வி ஆண்டில், சென்னை, வில்லிவாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இவர் 8-ம் வகுப்பு படித்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் பதக்கம் ஒன்றை வென்று வந்திருக்கிறார் என்பது பெருமையான விஷயம் அல்லவா! எப்படி இது சாத்தியமானது என்று அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மோகன் ராஜிடம் கேட்டோம். 

தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி!

``எங்கள் பள்ளியில், பாட நேரம் முடிந்ததும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கலைகளைக் கற்றுத்தருகிறோம். அவற்றில் டேக்வாண்டோ, ஜூடோ, கராத்தே, செஸ், யோகா, கபடி, சிலம்பம், வெஸ்ட்ரன் மியூசிக் என மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சி அளித்துவருகிறோம். அதில் டேக்வாண்டோவை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட மாணவர்களில் ஒருவர்தான் மீரா. இதுவும் கராத்தே போன்றது. கராத்தே தாக்குவது, தற்காத்துக்கொள்வது என்று இருக்கும். டேக்வாண்டோ என்பது பாயின்ட்ஸ் வைத்து விளையாடக்கூடியது. சென்ற ஆண்டில் சென்னை, ரெட்டேரியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியை, கராத்தே தியாகராஜன் நடத்தியபோது, மீரா உள்ளிட்ட 16 மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தேன். சிறப்பு அனுமதி வாங்கி, நுழைவுக்கட்டணம் கட்டாமல் கலந்துகொண்டேன். அப்போதுகூட, மீரா மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஏனென்றால், மீரா உடல் வலுவாக இருப்பதுபோல தெரியாது. மற்றவர்கள்தான் எதிலாவது வெற்றி பெறுவார்கள் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அரையிறுதி போட்டி வரை முன்னேறி, அதில் வென்று வெள்ளிப் பதக்கத்தைத் தட்டி வந்தாள். அப்போதுதான், உடல் வலுவை விட, போட்டியிடும்போது பயன்படுத்தும் டெக்னிக்ஸ் ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதிலிருந்து மீராவுக்கு நல்ல பயிற்சி அளித்தோம். 

பயிற்சியாளர் கெபிராஜ் என்பவர் ஜப்பானுக்குச் சென்று பல பட்டங்களை வாங்கியவர். தமிழ்நாடு டேக்வாண்டோ அமைப்பின் தலைவரும்கூட. அவர்தான், மீரா ஆடும் டெக்னிக் நன்றாக இருக்கிறது என்று மீராவை தெற்காசிய டேக்வாண்டோ போட்டிக்கு அனுப்பலாம் எனத் தேர்வு செய்தார். இது நடந்தது பிப்ரவரியில். ஆனால், எங்களுக்கு ஒரு தயக்கம். ஏனென்றால், மீராவின் குடும்பம் ஏழ்மையானது. அவரின் அத்தைகள்தான் வளர்த்து வருகிறார்கள். போட்டிக்கான கட்டணம் 100 டாலரும், பயணச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதுதான். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் 20,000 ரூபாயாகிவிடும். நல்லவேளை போட்டியில் டெல்லியில் நடக்கவிருந்ததால் இதையெல்லாம் யோசிக்கவாது முடிந்தது. வெளிநாடு என்றால், ரொம்ப கஷ்டம். பள்ளியின் ஆசிரியர்கள், சோஷியல் மீடியா வழியே உதவியவர்கள் என ஒருவழியாகப் பணத்தைத் திரட்டி விட்டோம். மீரா ஏற்கெனவே படித்த அரியலூர் மாவட்டத்துப் பள்ளியிலிருந்து 5,000 ரூபாய் கொடுத்தது பெரிய பலமாக இருந்தது. டெல்லிக்கு ரயிலில்தான் சென்றார் மீரா. மாநகராட்சிப் பள்ளியிலிருந்து ஒரு மாணவி செல்வதே பெரிய அனுபவம்தான் என்று நினைத்தோம். 35 கிலோகிராம் எடை பிரிவில் மீரா வெண்கலப் பதக்கம் பெற்றது எங்களுக்கு ரொம்பவே பெருமையானது. மீரா சென்னைக்கு வந்தபோது, எல்லோரும் கூடி வரவேற்றது எங்களால் மறக்கவே முடியாது. 

தெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி!

அரசு பள்ளி சார்பாகச் சென்று பதக்கத்தை வென்று வந்தது மீரா மட்டும்தான். இது அவளுக்குப் பெரிய தன்னம்பிக்கையைத் தந்திருக்கிறது. இன்னும் நிறைய பதக்கங்களையும் பரிசுகளையும் வெல்வார் என்பதற்கான அடையாளமே இது. பல போட்டிகளில் எங்கள் மாணவர்கள் கலந்துகொண்டு வென்றாலும், மீராவின் வெற்றி எங்கள் பள்ளிக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. மீராவைப் போன்றவர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்களின் திறமைகளை வெளியுலகிற்குக் கொண்டுவருவதே எங்களின் முக்கியமான பணி" என்கிறார் மோகன் ராஜ். 

திறமைகளுக்கு உரிய அங்கீகாரமும் உதவிகளும் கிடைக்கட்டும்.  

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு