Published:Updated:

'ஐபிஎல் ப்யூர் ஸ்போர்ட்; பான்டிங் பெஸ்ட் கோச்!' - கங்குலி புகழாரம்

'ஐபிஎல் ப்யூர் ஸ்போர்ட்; பான்டிங் பெஸ்ட் கோச்!' - கங்குலி புகழாரம்
'ஐபிஎல் ப்யூர் ஸ்போர்ட்; பான்டிங் பெஸ்ட் கோச்!' - கங்குலி புகழாரம்

ஐபிஎல் கிரிக்கெட், உலகக்கோப்பை தொடர், ரிக்கி பான்டிங் உடனான நட்பு  எனப் பல்வேறு விஷயங்கள்குறித்து கங்குலி பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கங்குலி மற்றும் ரிக்கி பான்டிங்கின் வழிகாட்டுதலில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக விளையாடிவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசமான வரலாற்றை வைத்திருந்த டெல்லி அணி, நடப்பு தொடரில்  புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு கலவையாக அந்த அணியின் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துவருகின்றனர். டெல்லி அணிக்கு ஆலோசகராக கங்குலியும், தலைமை பயிற்சியாளராக பாண்டிங்கும் உள்ளனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன வென்றால், இவர்கள் இருவரும் 2003-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய கேப்டன்கள். 2003-ல் ஆஸ்திரேலியா அணிக்கு பான்டிங் தலைமைதாங்கினார். இந்திய அணியை கங்குலி வழிநடத்தினார். பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, உலகக்கோப்பையை வென்றது. இந்தியா ரன்னர்- அப் ஆனது.  இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட், உலகக்கோப்பை தொடர், பாண்டிங் உடனான நட்பு  எனப் பல்வேறு விஷயங்கள்குறித்து கங்குலி பேசியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கங்குலி அளித்துள்ள பேட்டியில், “ எந்தத் தொடராக இருந்தாலும், இந்தியா வலிமையானதாக இருக்கும். தற்போது நடக்க உள்ள உலகக்கோப்பை தொடர் என்பது, சிறப்பான ஒன்றாக இருக்கும். உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணிகளில், சிறந்த 4 அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.  என்னுடைய கணிப்பின்படி  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா கோப்பையை வெல்லும்  அணிகளில் ஒன்றாக இருக்கும். குல்தீப் யாதவ் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். அவரைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம். உலகக்கோப்பை தொடரில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார்; விக்கெட்டுகளையும் வீழ்த்துவார். டெல்லி அணியில் இணைந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.  கடந்த காலங்களில், டெல்லி அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அந்த வீரர்களுக்கு உதவுவதைப் பெருமையாக உணர்கிறேன்.  சவால்களைக் கடினமாகப் பார்க்கவில்லை. சில வழிகளைக் கண்டு, அதில் சிறப்பாகவே செயல்பட முயல்கிறேன். சில சமயங்களில், அதில் வெற்றி கிடைக்கிறது. சில நேரங்களில், அது சரிவராமல் போகிறது. டெல்லி அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களைக் கொண்ட கலவையாக உள்ளது. நான், அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். வீரர்கள் அதை களத்தில் செயலாற்றுகிறார்கள். அந்தப் பெருமைகள் அனைத்தும் அவர்களையே சேரும். 

நானும் பான்டிங்கும் நீண்ட கால நண்பர்கள். 2003 உலகக்கோப்பையில், நான் ரன்னர் அப். அவரோ, கோப்பை வென்றவர். அவருக்கு நிறைய அனுபவங்கள் உள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பான ஒன்றாகும். அவர் ஒரு அற்புதமான பயிற்சியாளர். வீரர்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்துவைத்திருப்பவர்.  ஐபிஎல் என்பது ப்யூர் ஸ்போர்ட். கவர்ச்சிபோன்ற பிற விஷயங்கள் 15 சதவிகிதம்தான் உள்ளன. 85 சதவிகிதம், இது தொழில்முறையான விளையாட்டுதான். இது, கடினமான கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு அழுத்தங்கள் உள்ளன. இதற்கிடையில்தான் சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.