Published:Updated:

F1-ன் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்வாரா ஹாமில்டன்?

F1-ன் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்வாரா ஹாமில்டன்?
F1-ன் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வெல்வாரா ஹாமில்டன்?

ஆஸ்திரேலியா, பஹ்ரைன் என இரண்டு ஃபார்முலா ஒன் பந்தயங்கள் முடிந்துவிட்டன. இரண்டு போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களை மெர்சிடீஸ் வென்றுள்ளது. போன சீஸனில் ஒரு வெற்றிகூட இல்லாமல் இருந்த வேல்டரி பொட்டாஸ், இந்த முறை ஆரம்பப் போட்டியிலேயே கலக்குகிறார். ரேஸ் டிராக்கின் நேர் பாதைகளில் ஃபெராரியின் வேகம் மிரட்டுகிறது. ஹாமில்டன் இந்தமுறை ஹாட்ரிக் சாம்பியனாக மாறுவாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. F1 விதிகள் மாறிவிட்டன. வளைவுகள், வேகம் என்பதைக் கடந்து, இந்தமுறை போட்டிகள் ஓவர்டேக்கிங்கை மையப்படுத்தி இருக்கின்றன. கார்களும் அதற்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை டிரைவர் சாம்பியனுக்கு சார்லஸ் லெக்லெர்க் சவால்விடுவார் எனத் தெரிகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஹாமில்டன் உட்பட பல டிரைவர்கள் ஆரம்பத்தில் சொதப்பிவிட்டார்கள். இதற்குக் காரணம், லீனியரான கிளட்ச். முந்தைய கார்களில் லீவரை அழுத்தும்போது கிளட்ச் எங்கிருந்து என்கேஜ் செய்ய ஆரம்பிக்கிறது என்பதற்கு ஒரு கருவியை வைத்திருப்பார்கள். புது கார்களில் அது மாதிரி கிடையாது. கிளட்ச்சின் செயல்பாடு லீனியராக இருக்கும். இதனால் டிரைவர்கள் விரல்கள் மூலம் துல்லியமாக கிளட்சைக் கையாள வேண்டும். கிட்டத்தட்ட நம் ஹஃப் கிளட்ச், ஃபுல் கிளட்ச்சுக்கு இருப்பது போன்ற வித்தியாசம். ஹாமில்டன், லெக்லார்க் உட்பட பல டிரைவர்கள் ஸ்டார்ட்டில் சொதப்புவதற்கு இதுதான் கராணம்.

லெக்லார்க் மற்றும் ஃபெராரியின் வேகம் பஹ்ரைனில் மிரட்டியபோதும், காரின் எலெக்ட்ரிக்கல் பவரில் கோளாறு ஏற்பட்டதால் வெற்றி கை நழுவிச் சென்றுவிட்டது. ரேஸ் முடிய 10 லேப்களே இருந்த நிலையில் காரின் 20 சதவிகித பவரை இழந்துவிட்டார் லெக்லார்க். செபாஸ்டின் வெட்டல் சாம்பியன் பட்டம் வாங்குவார் எனக் காத்திருந்து காத்திருந்து காலம் ஓடிவிட்டது. பஹ்ரைன் போட்டியில் 2-ம் இடத்தில் இருந்து ரேஸை ஸ்டார்ட்செய்து 5-ம் இடத்தில் முடித்திருக்கிறார். பின்னோக்கி நகர்ந்ததற்கு முக்கியக் காரணம், வெட்டலின் டிரைவிங். 4-வது திருப்பத்தில் ஹாமில்டன் முந்தும்போது வெட்டல் வேகமெடுக்க முயன்றார். எதிர்க்காற்று வேகமாக வீசியதால் கார் சுழன்றுவிட்டது. சாம்பியன்ஷிப் வாங்கிய டிரைவர் இதைக் கணிக்காமல்விட்டது அபத்தம்.

``ஹாமில்டன் சரியான நேரத்தில் DRS பயன்படுத்தி வெட்டலை முந்தியது சாம்பியன்ஷிப்பை மாற்றியமைக்கும் மூவ்" என்று ஃபெராரியின் தலைவர் டோட்டோ உல்ஃப் பாராட்டு மழை பொழிந்துள்ளார். ஹாமில்டன், சாம்பியன்ஷிப்புக்குத் தகுதியானவர். ஆனால், போட்டிக்கு இப்போது வேல்டரி பொட்டாஸ் இருக்கிறார். பழைய சாம்பியன் நிகோ ரோஸ்பெர்க்கின் சீட்டில் வந்து உட்கார்ந்தவருக்கு, போன சீஸன் பெரிய ஏமாற்றம். ஒரு போட்டியில்கூட ஜெயிக்கவில்லை. யூரோ கப், ஃபார்முலா 3, ஜிபி மூன்று போட்டிகளில் சாம்பியன் பட்டம் வாங்கியிருந்தும், 2017 சீஸனில் 3-ம் இடம் பிடித்திருந்தும் கடந்த ஆண்டு வெற்றியில்லாமல் இருந்தது பெரிய ஏமாற்றமாக இருந்தது. இந்தமுறை முதல் இரண்டு போட்டிகளிலேயே தனது வேகத்தைக் காட்டிவிட்டார். ஹாமில்டனுக்கு கடும் சவால் ஃபெராரியில்லை... அவரது டீம்மேட்தான்.

மேக்ஸ் வெஸ்டப்பனோடு மோதுவதும், நாமே சுவரில் மோதிக்கொள்வதும் ஒன்றுதான். வெஸ்ட்டப்பன் இன்னும் அதே முரட்டுத்தனமான டிரைவிங்கை கடைப்பிடிக்கிறார். இரண்டு போட்டிகளையும் முதல் 5 இடத்துக்குள் முடித்துள்ளார். பஹ்ரைனில் நடந்த கிராஷில் வழக்கம்போல தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் ரேஸைத் தொடந்தார். கிராஷ் பார்க்க வெஸ்டப்பனின் தவறுபோல தெரிந்தாலும் அவரின் தவறு அங்கே எதுவுமில்லை. கார்லஸ் சைன்ஸ், அவரை முந்திய பிறகு கார்னரை சரியாக எடுக்கவில்லை. இதனால், வெஸ்டப்பனின் ரேஸ் லைனில் குறிக்கிட்டு டயரை பஞ்சர் செய்துகொண்டார். கிராஷில் ரெட்புல் மட்டும் எப்படித் தப்பிக்கிறது என்பது இன்னும் ஆச்சர்யம்தான்.

ரெனோவின் இரண்டு கார்களுக்கும் யாரோ செய்வினை செய்திருப்பார்கள்போல, இரண்டுமே ஒரே கார்னரில் கோளாறாகிவிட்டன. கடந்த இரண்டு ரேஸ்களிலும் மோசமான முயற்சி எதுவும் செய்யாமல் ஹாமில்டனும், எந்தக் கோளாறும் இல்லாமல் மெர்சிடிஸும் ரேஸை முடித்திருக்கிறார்கள். வேல்டரி பொட்டாஸின் கம்பேக் மெர்சிடிஸுக்கு பெரும்பலம். அடுத்தடுத்த ரேஸ்கள்தான், ஹாமில்டன் மீண்டும் சாம்பியன் பட்டம் வாங்குவாரா என்று சொல்லும். கடந்த இரண்டு ரேஸ்களைப் பார்க்கும்போது ஹாட்ரிக் கோப்பை சாத்தியம்தான்!

அடுத்த கட்டுரைக்கு