Published:Updated:

``வாள்வீச்சுன்னா என்னனே தெரியாதப்ப, என்னை முதல்ல அங்கீகரிச்சது அம்மாதான்!'' - பவானிதேவி

"மனதளவிலும், உடலளவிலும் தைரியமா இருந்தால்தான் விளையாட்டில் நமக்கான அடையாளத்தை உருவாக்க முடியும். நான் பயிற்சி எடுக்குறேன்னா அதுக்கு என் அம்மா மட்டும்தான் காரணம். எனக்குப் பின்னாடி அவங்களுடைய உழைப்பு இல்லைன்னா நான் இந்த இடத்தில் நிச்சயம் இருக்க முடியாது."

``வாள்வீச்சுன்னா என்னனே தெரியாதப்ப, என்னை முதல்ல அங்கீகரிச்சது அம்மாதான்!'' - பவானிதேவி
``வாள்வீச்சுன்னா என்னனே தெரியாதப்ப, என்னை முதல்ல அங்கீகரிச்சது அம்மாதான்!'' - பவானிதேவி

ந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. இவர், தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றுப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளவர். 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச 'டர்னாய் சாட்டிலைட் வாள்வீச்சு'ப் போட்டியில், 'சேபர்' பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருப்பவர்... தற்போது என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

ஸ்கூல் படிக்கும்போது விளையாட்டாக ஆரம்பிச்சதுதான் என்னுடைய ஸ்போர்ட்ஸ் பயணம். இந்தியாவுக்காக நாம விளையாடுவோம்னுலாம் அப்போ துளிகூட நினைச்சுப் பார்க்கலை. எதார்த்தமா ஆரம்பிச்சதுதான் வாள்வீச்சு. அப்போ வாள்வீச்சுன்னா என்னன்னு தெரியாததால் ரொம்ப ஆர்வமா அந்த விளையாட்டைப் பற்றி கத்துக்க ஆரம்பிச்சேன். போகப்போக அதன் மீது தீராக்காதல் ஏற்பட ஆரம்பிச்சிடுச்சு. நானாகவே விருப்பப்பட்டு ஒவ்வொரு விஷயமா கத்துக்க ஆரம்பிச்சேன். இனி வாள்வீச்சுதான் எனக்கான அடையாளம்னு உணர்ந்ததுக்கு அப்புறம் என் முழு திறமையையையும் வெளிப்படுத்த ஆரம்பிச்சேன். இப்படி ஆரம்பிச்ச பயணத்தில் பல தோல்விகளை சந்திச்சிருக்கேன். தோற்கும்போதெல்லாம் அதற்கான காரணம் என்னன்னு புரிஞ்சுகிட்டு அதை சரிபண்ணினேன். அப்படித்தான் இந்தியாவுக்கு என்னால தங்கம் வாங்கிக் கொடுக்க முடிஞ்சது. தொடர்ந்து பல தங்கங்கள் இந்தியாவுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்'' எனப் புன்னகைத்தவரிடம் குடும்பம் குறித்துக் கேட்டோம்.

``நான் சென்னைப் பொண்ணு. விளையாட ஆரம்பிச்ச புதுசுல தனியா வெளிநாடுகளுக்குப் பயணம் பண்ணும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கும். சில நாள்களில் திடீர்னு கிளம்புற சூழல் ஏற்படும். அந்த சமயத்திலெல்லாம் டிக்கெட் கிடைக்கிறதில் பிரச்னை வரும். அப்படி பிராக்டீஸுக்காக வெளிநாடு போகிற சமயம் என் ஃபேமிலியை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். மனதளவிலும், உடலளவிலும் தைரியமா இருந்தால்தான் விளையாட்டில் நமக்கான அடையாளத்தை உருவாக்க முடியும். நான் பயிற்சி எடுக்குறேன்னா அதுக்கு என் அம்மா மட்டும்தான் காரணம். எனக்குப் பின்னாடி அவங்களுடைய உழைப்பு இல்லைன்னா நான் இந்த இடத்தில் நிச்சயம் இருக்க முடியாது. என்னுடைய பலம் என் அம்மா தான்! நான் விளையாட வந்த சமயம் வாள்வீச்சு ஃபேமஸானதெல்லாம் இல்லை. பலருக்கும் தெரியாது. அப்போ, `உன் ஆசைப்படி வாள்வீச்சு போட்டியிலேயே விளையாடு. நிச்சயம் உன்னால் இந்தியாவுக்குப் பெருமை கிடைக்கும்'னு என்னை சப்போர்ட் பண்ணது என்னுடைய பெற்றோர்தான்.

வாள்வீச்சை பொறுத்தவரைக்கும் இந்தியாவிலிருந்து யாராவது வந்தாங்கன்னா அவங்க டஃப் பைட் கொடுக்க மாட்டாங்கங்குற எண்ணம் இருந்துச்சு. இப்போ அந்த எண்ணம் மாறிட்டு வருதுங்குறது சந்தோஷமான விஷயம். இந்தியாவிலிருந்து வந்துருக்கீங்களா... பரவாயில்ல இவ்வளவு நல்லா விளையாடுறீங்களேன்னு வேற கோச் சொல்லும்போது எனர்ஜி பூஸ்ட்டா இருக்கும். அந்தச் சமயத்திலெல்லாம் இன்னும் நல்லா விளையாடணுங்குற எண்ணம் வரும். இங்கே வாள்வீச்சு சொல்லிக் கொடுக்கிறதுக்கு நிறைய கோச்சர்ஸ் இருக்காங்க. ஆனா, யாருக்கும் சரியான வழிகாட்டி இல்ல. அதனால, பிளேயர்ஸுக்கு ஒரு வழிகாட்டியா இருக்கணும்னு ஆசைப்படுறேன். 2005-ல் இருந்து விளையாடுறேன். பல அனுபவங்கள் கிடைச்சிருக்கு. என் அனுபவத்தை அவங்ககிட்ட பகிர்ந்து அடுத்தகட்டத்துக்கு அவங்களைக் கொண்டு போகணும்னு நினைக்கிறேன்" என்றவரிடம் மறக்கமுடியாத தருணம் குறித்துக் கேட்டோம்.

"2007-ல் என்னுடைய முதல் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்துக்க போயிருந்தேன். அந்தப் போட்டி நடக்கிற இடத்துக்கு மூன்று நிமிஷம் லேட்டா போனதால என்னை விளையாட அனுமதிக்காமல் பிளாக் கார்ட் கொடுத்துட்டாங்க. அதை எப்பவும் என்னால மறக்கவே முடியாது. ரொம்பவே உடைஞ்சு போன தருணம் அது.. இன்னொன்னு, 2017-ல் ஐஸ்லாந்தில் தங்கம் வின் பண்ணேன். அப்போ அதுதான் இந்தியாவுக்கு கிடைச்ச முதல் தங்கம். அந்த நிமிஷத்தை வாழ்நாள்ல மறக்கவே முடியாது. ரொம்ப சந்தோஷமா இருந்த தருணம்னா அது! 

இப்போ இத்தாலியில் டிரெயினிங் பண்ணிட்டு இருக்கேன். அதே மாதிரி, சென்னையிலுள்ள செயின்ட் ஜோசப் காலேஜில் எம்.பி.ஏ படிச்சிட்டு இருக்கேன். ஒலிம்பிக்கில் மெடல் வின் பண்ணனுங்குறது மட்டும்தான் இப்போதைக்கு என் கனவு. அதை நோக்கித்தான் இப்போ பயணிச்சிட்டு இருக்கேன். பிராக்டீஸுக்கு கிளம்புறேன்!" எனப் புன்னகைத்து விடைபெற்றார்.

கனவு மெய்ப்பட வாழ்த்துகள் பவானி!