Published:Updated:

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

விளையாட்டு, வீடியோ கேம்களுக்குள் அடைக்கப்பட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மொபைல், கம்ப்யூட்டர், பிளே ஸ்டேஷன் ஆகியவைதான் இன்று ஆடுகளங்கள். இது ஒருபுறமிருக்க, சமீப காலமாக ஃபேன்டசி கேம்களுடன் ஃபேன்டசி உலகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் விளையாட்டுப் பிரியர்கள். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் என விளையாட்டுகளைப் பற்றிய விவாதங்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் என செல்போனுக்குள் முடங்கிக்கிடக்கிறது. இப்படியான இந்த ‘விர்சுவல் ஸ்போர்டிங்' காலத்தில், விளையாட்டுக் காதலர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கென ஒரு சிறு சமுதாயத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது 'ஸ்போர்ட்வாக்'.

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

விளையாட்டும், விளையாட்டு நிமித்தமுமாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். கிரிக்கெட், கால்பந்து விவாதங்கள், ஃபேன்டசி லீக், கேமிங் என இன்றைய இளம் தலைமுறைக்குப் பிடித்த அதே விஷயங்கள்தான். ஆனால், அதை ஒரு பொது வெளியில் எடுத்துவந்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் மெர்சண்டைஸ், காமிக் புத்தகங்கள், டீ ஷர்ட் எனப் பல கமர்ஷியல் விஷயங்களுக்கு நடுவே, அவர்கள் நடத்தும் ‘Sportwalk - Huddle' நிகழ்ச்சிகள் வேறு ஒரு பரிமாணம் காட்டுகிறது.

மாதாமாதம் சுமார் 50 பேர் கூடி ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒருமுறை ஆஸ்திரேலிய ஓப்பன் பற்றி, ஒருமுறை டிராவிட் பற்றி, அடுத்த முறை ஃபிஃபா உலகக் கோப்பைப் பற்றி. இப்படி ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விளையாட்டின் ரசிகர் பட்டாளத்தையும் ஒருங்கிணைக்கிறார்கள்.

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

உதாரணமாக, டிராவிட் பற்றிய Huddle அமர்வில், முழுக்க முழுக்க டிராவிட்தான். டிராவிட் பற்றிய க்விஸ், கேம்கள் முடிந்து உரையாடல் அமர்வு. இரண்டரை முதல் மூன்று மணி நேரம், டிராவிட் பற்றி ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்தைப் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் நாஸ்டால்ஜியா கிணற்றில் விழுந்து, இந்தியச் சுவர் பற்றிய நினைவுகள் பற்றிப் பேசும்போது, சிறுவயதில் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் அமர்ந்து அவரை ரசித்த நாள்கள் ஹோலோகிராமாக வந்துபோகிறது.

சோஷியல் மீடியாவில் உண்மையான முகவரி தெரியாமல், முறைத்துக்கொண்டு, தன் அறிவை நிரூபிக்க உக்கிரமாக டைப் செய்துகொண்டிருக்காமல், மனம் திறந்து தங்களுக்குப் பிடித்த விஷயத்தை அங்கு எல்லோரும் பேசுகின்றனர். பள்ளி, கல்லூரி, அலுவலகம் தாண்டி, ஒரு அற்புதமான நட்பு வட்டம்... ஒரே வேவ்லென்த்தில் இருக்கும் நட்பு வட்டம் உருவாகிறது.  கல்லூரிக் காலத்தோடு விளையாட்டுகளை மறந்துவிட்டு, ‘நாங்க கிரிக்கெட் பார்த்த காலத்துல' என்று நினைவுகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அது மறக்க முடியாத நாளாக இருக்கும். ஃபெடரர் பற்றி, கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி... ஒவ்வொரு ரசிகர்களுக்குமே அந்த நினைவுப் பட்டறையைக் கொண்டாடுவதற்கான தருணம் கிடைக்கிறது.

ஸ்போர்ட்வாக் நிறுவனத்தை உருவாக்கிய திவாகரைச் சந்தித்தேன். சிவில் இஞ்சினியரிங் படித்தவர். ஆனால், விளையாட்டு தொடர்பான நிறுவனம் உருவாக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்துள்ளார். ‘‘காலேஜ் டைம்ல இருந்தே ஸ்போர்ட்ஸ் சம்பந்தமா வொர்க் பண்ணனும்னு உறுதியா இருந்தேன். ஆனா, அது புதுசா இருக்கணும். எல்லோருக்கும் பிடிக்கணும். வித்யாசமா இருந்தாதான் சக்சஸ் ஆகும். அதே சமயம் ரெவன்யூவும் வரணும். 2013 டைம்ல ஃப்ரண்ட்ஸ் கூட இதுபத்தி பேசிட்டு இருந்தேன். 2015 ஐபிஎல் அப்போ கம்பெனிய லான்ச் பண்ணிட்டோம். அப்போ 3 பேரு வொர்க் பண்ணோம். ப்ராடக்ட்ஸ், ஈவன்ட்ஸ் எல்லாத்துக்குமே நல்ல ரெஸ்பான்ஸ். நிறைய வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். பிறகு அப்படியே டீம் கொஞ்சம் கொஞ்சமா பெரிசாச்சு.  இப்போ ஏழு பேரு ஃபுல் டைமா வொர்க் பண்ணிட்டு இருக்கோம்’’ என்ற திவாகர், அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை விளக்கும்போது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

வீரர்களைப் பற்றி, விளையாட்டு நிகழ்வுகளைப் பற்றி இவர்கள் வெளியிடும் காமிக் புத்தகங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுகின்றன. ஒரு கார்டூன், ஒரு பக்கம் கதை என ஜாலியாக படிக்கும்விதம் இவர்களே அதைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், இவர்களின் டீ ஷர்ட்கள், இளைஞர்களிடம் ட்ரெண்டாகியுள்ளன. ரோஜர் ஃபெடரர் டீ ஷர்ட், ஆஸ்திரேலிய ஓப்பன் நடந்தபோது ராட் லேவர் அரங்கிலேயே அவரின் ஆட்டோகிராஃபிற்காக காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. புரொடக்ஷன் ஏரியாவில் மட்டுமல்லாமல், ப்ரமோஷன் பக்கமும் தங்களின் கிளைகளைப் பரப்பியிருக்கிறார்கள். பாண்டிச்சேரி கிரிக்கெட் அணி, மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் டி.என்.பி.எல் அணிகள் சென்னை ஸ்பார்டன்ஸ் வாலிபால் அணி எனப் பல அணிகளுக்கு இப்போது இவர்கள்தான் சோஷியல் மீடியா ஹேண்ட்லிங்.

இப்போது ‘சர்வீஸ்' ஏரியாவிலும் செயல்படத் தொடங்கியிருக்கிறது ஸ்போர்ட்வாக். சொந்த பொருள்கள் என்று இல்லாமல், மற்றவர்களுக்கும் ஆர்டர் எடுத்து செய்துகொடுக்கிறார்கள். மான்செஸ்டர் யுனைடட், செல்சீ, அர்செனல் போன்ற பிரீமியர் லீக் அணிகளின் ஃபேன் கிளப்களுக்கு மெர்சண்டைஸ் செய்து கொடுப்பவர்கள், மேலும் ஒரு பெரிய அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ‘பாரத் ஆர்மி' - இந்தியாவின் அஃபீஷியல் கிரிக்கெட் ஃபேன் கிளப்போடு இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விளையாட்டையே முழு மூலதனாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்!

ஓரளவு வரவேற்பு கிடைத்ததும் வேளச்சேரியில் இருந்த அலுவலகம், அண்ணா நகருக்கு மாறியிருக்கிறது. சென்னையில் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு நகரங்களையும் மையமாக வைத்தும் இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என ஒவ்வொரு இடத்திலும், அந்த நகரைச் சேர்ந்த இளைஞர்கள் பகுதி நேரமாக இவர்களோடு இணைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு டீம் - டீம் சென்னை, டீம் கொல்கத்தா என்பதுபோல். அந்த நகரை மையப்படுத்திய விளையாட்டு அணிகளோடு தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், வளர்ந்துகொண்டே இருக்கிறது ஸ்போர்ட்வாக்.

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

இந்தமாத Huddle நிகழ்வில் ஐபிஎல் ஏலம் நடத்தப்போவதாகச் சொன்னார்கள். ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் நடக்கிறது என்று பார்க்க அடையாறு கிளம்பினேன். சுமார் 50 இளைஞர்கள்... பெண்கள் உள்பட. அணிகளாகப் பிரிந்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் பெரும் விவாதம். ஐபிஎல் ஏலம் போன்ற ஃபீலில்தான் எல்லோருமே அமர்ந்திருந்தனர். அதுவரை அங்கு அமர்ந்திருந்த அர்செனல் ஜெர்சி அணிந்திருந்த வட இந்தியாவைச் சேர்ந்த இரு கால்பந்து ரசிகர்கள், ‘‘We have no idea about Cricket. Let's meet again’’ என்று சொல்லிக் கிளம்பினார்கள். அந்த அறையின் மையப்பகுதிக்கு வந்த இருவர், ‘‘தொடங்கலாம்’’ என்று சொல்லி விதிமுறைகளை சொல்லத் தொடங்கினார் திவாகர்.

‘‘இது ஆக்ஷன் (auction) கிடையாது. Draft. 4 கோடி, 7 கோடி, 10 கோடி, 15 கோடினு ஒவ்வொரு பிளேயருக்கும் ஒரு ஃபிக்ஸுடு ரேட் இருக்கு. 12 டீம் இருக்கீங்க. ஒவ்வொரு டீமும், வரிசையா உங்களுக்கான பிளேயர்ஸை வாங்கணும். ஒரு குவிஸ் வைப்போம். அதுல வாங்குற மார்க் படி, எந்த டீம் முதல்ல ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணிக்கலாம். மொத்தம் 100 கோடி. அதுக்குள்ள 11  பிளேயரும் எடுக்கணும். எத்தனை பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பௌலர், ஃபாரீன் பிளேயர் அப்டின்ற ரூல்ஸ்லாம் இந்த பேப்பர்ல இருக்கு’’ என்று ஒவ்வொரு அணிக்கும் விதிமுறைகள் அடங்கிய பேப்பர்களை வழங்கினார். உடனே அந்த அறையில் அவ்வளவு பரபரப்பு.

எதிர்பார்த்ததும் இருக்கும்... எதிர்பாராததும் இருக்கும்!

ஒவ்வொரு அணியும் தங்கள் பெயர்களை அறிவித்ததிலேயே, அவர்களின் கிரிக்கெட் வெறி தெரிந்தது. டெம்ப்ரரி கேப்டன், பேபி சிட்டர்ஸ் என களத்தில் அனல் மூட்டிய வார்த்தைகளே அணிகளின் பெயர் ஆகின. குவிஸ் முடிந்ததும் draft தொடங்கியது. யாரும் எதிர்பாராத விதமாக கே.எல்.ராகுலை முதல் ஆளாக எடுத்தனர். ஒவ்வொரு வீரர் எடுக்கப்பட்டதும் அவ்வளவு பரபரப்பு. பிரீத்தி ஜிந்தாவைத் தவிர, ஐ.பி.எல் ஏல அரங்கிலேயே வேறு யாரும் ரியாக்ஷன் கொடுக்க மாட்டார்கள். அதிலும் காலிஸ், ஃபிளெமிங் போன்றவர்களெல்லாம் paddle தூக்குவதே ஸ்லோ மோஷனில்தான் இருக்கும். ஆனால், இவர்கள்... தாங்கள் பிளான் போட்ட வீரரை மற்ற அணிகள் எடுக்கின்றன என்ற கவலை, அந்த பட்ஜெட்டுக்குள் எப்படி எடுப்பது என்ற ஆலோசனை, எடுக்கும் வீரர் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்ற விவாதம்... என அவ்வளவு எனர்ஜி அந்த இடத்தில். நமக்கே அந்த பரபரப்பு ஒட்டிக்கொள்கிறது.

எல்லாம் முடிந்ததும், ‘நீ அந்த பிளேயர் எடுத்திருக்கலாம்', ‘நீ எடுக்கலைனா லியாம் லிவிங்ஸ்டனை நான் எடுத்திருப்பேன்', ‘புவிய யாருமே எடுக்கல பாரேன்', ‘ராகுல் தெவேதியாவுக்கு 10 கோடி அதிகம்' என 12 அணிகளும் அடுத்தகட்ட டிஸ்கஷனை ஆரம்பித்திருந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே ‘‘ஹைலைட்ஸ்னு ஒரு ஈவன்ட் பிளான் பண்ணியிருக்கோம். 5 வீக் எண்ட் நடக்கும். ஃபுட்சால்கூட இருக்கு’’ என்று திவாகர் சொன்னபோது கொஞ்சம் பிரம்மிப்பாகத்தான் இருந்தது. விளையாட்டையே எதிர்காலமாக்கியிருக்கிறார்கள். அதற்குள்ளே, பலரையும் தங்கள் பழைய நினைவுகளுக்குள் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்போர்ட்வாக், வேறு மாதிரியான உலகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

- மு.பிரதீப் கிருஷ்ணா,  படங்கள்: தே.அசோக்குமார்