Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு இந்தியா ரெடி! 117 வீரர்களில் 8 தமிழர்கள் - யார், யார் என்னென்ன போட்டிகள்?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்

சமீபத்திய ஒலிம்பிக்குகளில் துப்பாக்கி சுடும் வீரர்கள்தான் அதிக பதக்கம் வென்றிருக்கிறார்கள் என்பதால் இப்போட்டியின் மீது அதிக கவனம் குவிந்திருக்கிறது. இதில் தனிபர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் கலப்பு பிரிவு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன் போட்டியிடுகிறார்.

ஜூலை மாதம் வந்தால் ஒலிம்பிக்ஸ் எனக் காத்திருந்த விளையாட்டு உலகம் டோக்கியோவுக்குப் புறப்படத் தயாராகிவிட்டது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடங்க இன்னும் 20 நாள்களே இருக்கின்றன. ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கும் உலகின் உச்சபட்ச விளையாட்டுத்திருவிழாவான ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பில் பெரும்படையே கலந்துகொள்கிறது.

1920 முதல் தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்தியா இதுவரை 9 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸுக்குப்பிறகு இந்தியா தங்கம் வென்றது 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் மட்டுமே. முதல் தனி நபர் தங்கப்பதக்கமாக இந்த ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். ஆனால், அதற்கு அடுத்த இரண்டு ஒலிம்பிக்கிலும் இந்தியா தங்கம் வெல்லவில்லை. அதேபோல் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 6 வீரர், வீராங்கனைகள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றநிலையில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெறும் 2 பதக்கங்கள் மட்டுமே இந்தியாவுக்குக் கிடைத்தது. பேட்மின்டனில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வெல்ல, மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலில் வெண்கலம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

இந்தச் சூழலில்தான் 2021 டோக்யோ ஒலிம்பிக்கிற்குத் தயாராகியிருக்கிறது இந்தியா. டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 117 வீரர்கள் இதுவரை தகுதிபெற்றிருக்கிறார்கள். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

வில்வித்தை

தீபிகா குமாரி
தீபிகா குமாரி

வில்வித்தை பிரிவில் இந்தியாவின் சார்பாக நான்கு வீரர் வீராங்கனைகள் பதக்கத்துக்குப் போட்டியிடுகிறார்கள்.

தீபிகா குமாரி, அட்டானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் யாதவ் என இந்த நான்கு வீரர்களில், தீபிகா குமாரி இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 வயதான தீபிகா குமாரி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர்.

29 வயதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அட்டானுதாஸ் தற்போது உலகத்தர வரிசையில் 17வது இடத்தில் உள்ளார். அட்டானு தாஸும், தீபிகா குமாரியும் இணைந்து 2013 வில்வித்தை உலகக்கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கலப்பு இரட்டையர் பிரிவிலும் போட்டியிடுகிறார்கள்.

தடகளம்

ஆரோக்ய ராஜீவ்
ஆரோக்ய ராஜீவ்

தடகளப் போட்டிகளைப் பொருத்தவரை இதுவரை 19 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றிருக்கிறார்கள்.

இதில் 4x400 மீட்டர் ரிலே போட்டியில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் இந்தியாவுக்காக ஓடயிருக்கிறார். மகளிர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கு ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 வயது டூட்டி சந்த் தகுதி பெற்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலகத் தரவரிசையில் 44 மற்றும் 51-வது இடத்தில் இருக்கிறார் டூட்டி சந்த்.

பேட்மிண்டன்

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடி நான்கு வீரர்கள் தகுதிபெற்றிருக்கிறார்கள். இதில் பெண்கள் தனிநபர் பிரிவில் பி.வி.சிந்து கலந்துகொள்ள இருக்கிறார். ஆண்கள் தனிநபர் பிரிவில் தெலுங்கானவைச் சேர்ந்த சாய் பிரனீத் கலந்துகொள்கிறார். இவர் பிரகாஷ் படுகோனேவுக்குப்பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் விளையாடத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

குத்துச்சண்டை

மேரி கோம்!
மேரி கோம்!

பாக்ஸிங்கில் இந்தியாவின் சார்பில் 9 வீரர்கள் பதக்கவேட்டையில் இருக்கிறார்கள். 38 வயதான இந்தியாவின் தங்க மங்கை மேரி கோம் 51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் போட்டியிட இருக்கிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 30 வயதான பூஜா ராணி 75 கிலோ மிடில்வெயிட் பிரிவில் மோதயிருக்கிறார்.

குதிரையேற்றம்

குதிரையேற்றம் என அழைக்கப்படும் Equestrian போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த ஃபவாத் மிர்ஸா கலந்துகொள்கிறார். இவர் ஆசியப்போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாள்வீச்சு

முதல்முறையாக ஒலிம்பிக்கில் வாள்வீச்சு பிரிவில் கலந்துகொள்ளும் முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் தமிழகத்தின் பவானி தேவி. 27 வயதான பவானி தேவி தற்போது உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் இருக்கிறார்.

பவானி தேவி
பவானி தேவி

கோல்ஃப்

கோல்ஃப் விளையாட்டில் இதுவரை 3 வீரர்கள் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றிருக்கிறார்கள். இதில் பெண்கள் பிரிவில் பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது அதிதி அசோக் கலந்துகொள்கிறார்.

ஜிம்னாஸ்டிக்ஸ்

பிரனதி நாயக்
பிரனதி நாயக்

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக இந்தியாவின் சார்பில் ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்றவர் எனப் புகழ்பெற்ற தீபா கர்மாகர் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறவில்லை. ஆனால், இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 26 வயதான பிரனதி நாயக் தகுதிபெற்றிருக்கிறார்.

ஹாக்கி

ஒலிம்பிக்கில் 8 தங்கம் உள்பட 11 பதக்கங்கள் வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றிருக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்த 28 வயதான மன்பிரித் சிங்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், தமிழக வீரர்கள் யாரும் இந்திய அணியில் இல்லை. ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் அணியும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றிருக்கிறது. 26 வயதான ஹரியானாவைச் சேர்ந்த ராணி ராம்பால் இந்திய பெண்கள் அணிக்குத் தலைமை தாங்குகிறார். பெண்கள் அணியிலும் தமிழர்கள் யாரும் இல்லை.

ஜூடோ

ஜூடோ போட்டியில் இந்தியாவின் 26 வயதான சுஷிலா தேவி 48 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றிருக்கிறார்.

துடுப்பு படகுப்போட்டி

ரோயிங் என அழைக்கப்படும் துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் லைட்வெயிட் பிரிவில் அர்ஜுன் லால், அரவிந்த் சிங் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பாய்மரப்படகுப் போட்டி

நேத்ரா குமணன், வருண் சரவணன், கே.சி.கணபதி, வருண் தாக்கர்
நேத்ரா குமணன், வருண் சரவணன், கே.சி.கணபதி, வருண் தாக்கர்

செய்லிங் என அழைக்கப்படும் பாய்மரப்படகுப் போட்டியில் நான்கு வீரர்கள் இந்தியாவின் சார்பில் போட்டியிடுகிறார்கள். இதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேத்ரா குமணன், வருண் சரவணன், கே.சி.கணபதி ஆகியோர் தமிழர்கள். இவர்களோடு வருண் தாக்கரும் கலந்துகொள்கிறார். லேசர் ரேடியல் பிரிவில் போட்டியிடும் 23 வயதான நேத்ரா குமணன் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

துப்பாக்கி சுடுதல்

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

சமீபத்திய ஒலிம்பிக்குகளில் துப்பாக்கி சுடும் வீரர்கள்தான் அதிக பதக்கம் வென்றிருக்கிறார்கள் என்பதால் இப்போட்டியின் மீது ஏகப்பட்ட கவனம் குவிந்திருக்கிறது. மொத்தம் 15 வீரர், வீராங்கனைகள் தகுதிபெற்றிருக்கிறார்கள். இதில் தனிபர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன் போட்டியிடுகிறார்.

நீச்சல்

மானா பட்டேல்
மானா பட்டேல்

முதல்முறையாக ஒலிம்பி நீச்சல் போட்டிகளில் நேரடியாகக் கலந்துகொள்ளத் தகுதிபெற்றிருக்கிறது இந்தியா. கர்நாடகாவைச் சேர்ந்த ஶ்ரீஹரி நட்ராஜ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சஜன் பிரகாஷ் ஆகியோர் நேரடியாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார்கள். நீச்சலில் முதல் பெண் வீராங்கனையாக குஜராத்தைச் சேர்ந்த மானா பட்டேல் 100மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றிருக்கிறார்.

டேபிள் டென்னிஸ்

மனிகா பத்ரா - சரத் கமல்
மனிகா பத்ரா - சரத் கமல்

டேபிள் டென்னிஸ் போட்டியில் நான்கு இந்தியர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் மற்றும் சரத் கமல் ஆகியோர் போட்டியிட, பெண்கள் பிரிவில் மனிகா பத்ரா, சுகிர்தா முகர்ஜி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கலப்பு இரட்டையர் போட்டியில் சரத் கமல் - மனிகா பத்ரா இணைந்து விளையாட இருக்கிறார்கள்.

டென்னிஸ்

சானியா மிர்ஸா - அங்கிதா ரெய்னா
சானியா மிர்ஸா - அங்கிதா ரெய்னா

இந்தியாவின் சார்பில் இதுவரை இரண்டு பெண்கள் டென்னிஸ் போட்டுக்குத் தகுதிபெற்றிருக்கிறார்கள். இரட்டையர் பிரிவிலான ரேங்கிங் அடிப்படையில் சானியா மிர்ஸா தகுதிபெற்றிருக்கிறார். குஜராத்தைச் சேர்ந்த 28 வயது அங்கிதா ரெய்னாவும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து பெண்கள் இரட்டையர் போட்டியில் விளையாடுகிறார்கள்.

பளு தூக்குதல்

மிராபாய் சானு
மிராபாய் சானு

பளு தூக்குதல் பிரிவில் மிராபாய் சானு மட்டுமே தகுதிபெற்றிருக்கிறார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயது மிராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட இருக்கிறார்.

மல்யுத்தம்

அன்ஷு மாலிக்
அன்ஷு மாலிக்

மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 7 வீரர்கள் போட்டியிடுகிறார்கள். ரவி குமார் தஹியா, பஜ்ரங் பூனியா, தீபக் பூனியா என மூன்று ஆண்களும், சீமா பிஸ்லா, வினேஷ் போகத், அன்ஷு மாலிக், சோனம் மாலிக் என நான்கு பெண்களும் தகுதிபெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் சார்பில் யாரெல்லாம் பதக்கம் வெல்லக்கூடும். உங்கள் கணிப்பு என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு