‘வயது ஒரு தடையில்லை’ என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் தாய்லாந்தைச் சேர்ந்த சவாங் ஜான்பிரம். 102 வயதாகும் இவர் தன் பிரிவுக்கான 100மீ ஓட்டப் பந்தயத்தை வெறும் 27.08 விநாடிகளில் நிறைவு செய்து புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அவரின் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்லாது 100-105 வயது பிரிவில் ஈட்டி எறிதல், வட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் ஷாட் புட் ஆகிய போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சவாங் ஜான்பிரம் பங்கேற்பது இது நான்காவது முறை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தன் ஆரோக்கியத்திற்கான ரகசியம் பகிரும் ஜான்பிரம், "அன்றாடம் விளையாட்டில் ஈடுபடுவதே என்னை வலிமையாக்குகிறது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவை என் உடலை சீராக வைத்துள்ளன" என்கிறார். தன் 70 வயது மகளுடன் நாள் தவறாமல் நடைப்பயிற்சி செய்து விடும் அவர் தன் தோட்டத்தில் சுத்தம் செய்யும் பணியையும் செய்வாராம். இந்தத் தடகள சாம்பியன்ஷிப்பிற்குத் தயாராவதற்காக உள்ளூர் விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் இரண்டுமுறை பயிற்சிசெய்வதை வழக்கமாய் கொண்டிருந்தார் ஜான்பிரம். இதன் பலனாகவே இந்த ஆண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் தலைவரான விவாட் விக்ரண்னோரோஸ், "மூத்த வயதோருக்கான பிரிவில் போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. தாய்லாந்து மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப்பை 1996-ம் ஆண்டு தொடங்கியபோது வெறும் 300 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர் ஆனால் இன்று 35 முதல் 102 வயது வரை உள்ள பிரிவிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்" என்று கூறினார்.
ஜான்பிரமின் வெற்றி குறித்து அவரின் மகள் கூறுகையில், "எனது தந்தையார் எப்பொழுதும் நல்லெண்ணங்களை மட்டும் கொண்டிருப்பார். அவரது உடல் ஆரோக்கியத்திற்கும் மன நிம்மதிக்கும் அவரிடத்தில் உள்ள பாசிட்டிவ் எண்ணங்களேதான் காரணம். இதுவே அனைவரின் ஆரோக்கியத்திற்குமான முதல்படி" என்கிறார் அவர்.