Published:Updated:

வாள் வித்தை வித் கண்டிஷன்ஸ் அப்ளை!

வாள் வித்தை
பிரீமியம் ஸ்டோரி
News
வாள் வித்தை

ரொம்பவே பழைமையான விளையாட்டுகளில் வாள் வித்தையும் ஒன்று. 1896-ல் ஏதென்ஸில் நடந்த முதல் ஒலிம்பிக்ஸ் தொடரிலேயே வாள் வித்தையும் இடம்பெற்றிருந்தது

யூடியூப் ‘Food Vlogger'களின் பாணியில் ரொம்பவே யதேச்சையாக சமீபத்தில், ‘நினைத்ததை முடிப்பவன்' எனும் எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்... நிச்சயமாக அது க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியாகத்தான் இருக்கமுடியும். சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து முடித்த பிறகு போலீஸான நம்பியார் என்ட்ரி கொடுத்தார். இதிலிருந்து நானாகவே அதுதான் க்ளைமாக்ஸாக இருக்கும் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன். விஷயம் அதுவல்ல. க்ளைமாக்ஸ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். குறிப்பிடப்படும் அந்தச் சண்டைக் காட்சியில் இரண்டு எம்.ஜி.ஆர்களும் நேரெதிராக நின்றுகொண்டு வாளேந்திச் சண்டை செய்வார்கள். இந்த வாள் சண்டைதான் ஹைலைட். இருவரும் கோட் சூட் அணிந்து அந்த ஆடம்பர மாளிகையையே ஒரு ரவுண்ட் அடித்திருப்பார்கள். இடையில் ஒரு எம்.ஜி.ஆர் செம கூலாக தரையில் படுத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டபடி வாள் வீசுவார். இன்னொருவர் சோபா மேலெல்லாம் ஏறி வித்தை காட்டுவார். இந்தச் சண்டையில் பச்சை கோட் போட்ட ஒரு எம்.ஜி.ஆருக்கு மட்டும் லேசாகக் கன்னத்தில் ஒரு சிராய்ப்பு ஏற்படும். அவ்வளவுதான்!

வாள் வித்தை வித் கண்டிஷன்ஸ் அப்ளை!

இதே பாணியில் தமிழ் ஹீரோக்கள் பலரும் வாளேந்திச் சண்டை செய்திருக்கிறார்கள். இந்தச் சண்டைகள்தான் நமக்கு வாள் சண்டைகளாகவும் கத்திச்சண்டைகளாகவும் காலம்காலமாக மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், உண்மையான வாள் சண்டை அல்லது வாள் வித்தை என்பது அது இல்லை.

ரொம்பவே பழைமையான விளையாட்டுகளில் வாள் வித்தையும் ஒன்று. 1896-ல் ஏதென்ஸில் நடந்த முதல் ஒலிம்பிக்ஸ் தொடரிலேயே வாள் வித்தையும் இடம்பெற்றிருந்தது. ஒலிம்பிக்ஸில் இடையிடையே பல விளையாட்டுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. பல விளையாட்டுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆதியிலிருந்து இன்று வரை ஒலிம்பிக்ஸில் தொடரும் முக்கியமான ஆட்டமாக வாள் வித்தை இருக்கிறது.

வாள் வித்தை வித் கண்டிஷன்ஸ் அப்ளை!

வாள் வித்தை ஆடப்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு ஃபாயில், சேபர், எப்பே என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று வகையிலுமே வடிவமைப்பில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்ட வெவ்வேறு வாள்களே பயன்படுத்தப்படும். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவதைப் போல வாளேந்தி கன்னாபின்னாவென எதிராளியை அட்டாக் செய்ய முடியாது. ஒவ்வொரு விதமான போட்டிக்கும் தனித்தனியே சில வரைமுறைகள் உண்டு. ஃபாயில் வகை வாள் வித்தைப் போட்டியில் எதிராளியின் கையைத் தவிர்த்து கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டுமே அட்டாக் செய்ய முடியும். மற்ற பகுதிகளைத் தொடவே கூடாது. தொட்டாலும் பாயின்ட் கிடையாது. அதேமாதிரி, சேபர் வகை போட்டியில் இடுப்புக்கு மேற்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் அட்டாக் செய்துகொள்ளலாம். எப்பே வகை போட்டியில் தலையிலிருந்து பாதம் வரை எங்கே வேண்டுமானாலும் அட்டாக் செய்யலாம்.

எதிராளியின் வாள் சுழற்றலை முறியடித்து அவர்களின் உடலின் வரையறுக்கப்பட்ட பகுதியை அட்டாக் செய்தால் ஒரு புள்ளி வழங்கப்படும். முதலில் 15 புள்ளிகளை எடுக்கும் நபர் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு அதிக புள்ளிகளை எடுக்கும் நபரே வெற்றியாளர்.

சகட்டுமேனிக்கு கோலிவுட் ஸ்டைலில் கோட் சூட் போட்டுக்கொண்டோ அல்லது வழக்கமான விளையாட்டுகளின் பாணியில் ஜெர்சி அணிந்து கொண்டோ வாள் வித்தையில் பங்கேற்க முடியாது. இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட், கையுறைகள், காலணி ஆகியவற்றை மட்டுமே அணிய முடியும். உடைகளின் மீது வாள் படும்பட்சத்தில் அதைக் காட்டிக் கொடுக்கும் வகையில் சில எலக்ட்ரானிக் செட்டப்களும் செய்யப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்ட அந்த பிரத்யேக உடைகள் மற்றும் வாள் கொஞ்சம் காஸ்ட்லி. சாமானியர்களால் எளிதில் வாங்கிக்கொள்ள முடியாத வகையிலேயே இருக்கும். வாள் வித்தை பரவலாகாமல் இருப்பதற்கு இதுவுமே ஒரு முக்கிய காரணம்தான்.

வாள் வித்தை வித் கண்டிஷன்ஸ் அப்ளை!

இந்தியா சார்பில், கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில்தான் முதல் முறையாக வாள் வீச்சில் பங்கேற்பு பதிவானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவிதான் அந்த சாதனையைச் செய்திருந்தார். அவருமே பல சிரமங்களுக்குப் பிறகே வாள் வீச்சில் ஒலிம்பிக்ஸ் வரை முன்னேறியிருந்தார். “வாள் வீச்சுக்காக ஆட்கள் தேர்வு செய்யும்போது குடும்ப வருமானத்தைக் கொஞ்சம் அதிகமாகவே குறிப்பிட்டுத்தான் சேர்ந்தேன்” என பவானி தேவியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “போட்டியில் பயன்படுத்தும் வாளையே பயிற்சிக்காகவும் பயன்படுத்தினால் வாள் அடிக்கடி சேதமடையும். மீண்டும் மீண்டும் புதிய வாளை வாங்கப் பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காது என்பதால் பயிற்சிகளின்போது குச்சிகளையோ கட்டைகளையோ வைத்துதான் பயிற்சி செய்வேன்” என்றும் பவானி கூறியிருக்கிறார். இந்த விளையாட்டில் சாதிக்க சமூக பொருளாதாரச் சூழலுமே ஒரு முக்கியக் காரணியாக இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

வாள் வீச்சிலுமே வீரர்களின் செயல்பாட்டை முறைப்படுத்தும் வகையில் கால்பந்தில் வழங்கப்படும் சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டை போன்றவையும் வழங்கப்படுகின்றன. மஞ்சள் அட்டை வீரர்களுக்கு எச்சரிக்கைக்காக வழங்கப்படுகிறது. சிவப்பு அட்டையைப் பெற்றால் எதிராளிக்கு ஒரு புள்ளியைத் தாரைவார்க்க வேண்டியிருக்கும். இது இரண்டையும் தவிர்த்து கறுப்பு அட்டை ஒன்று இருக்கிறது. கறுப்பு அட்டையைப் பெறும் வீரர் ஆட்டத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். அடிப்படையே புரியாமல் நம்மூரில் முரட்டுத்தனமாக வாள் சுழற்றும் அத்தனை ஹீரோக்களுக்குமே கறுப்பு அட்டைதான் கொடுக்கவேண்டும்போல!