Published:Updated:

அதிகாரத்துக்கு எதிரான மல்யுத்தம்!

வினேஷ் போகத்,  சாக்சி மாலிக்
பிரீமியம் ஸ்டோரி
News
வினேஷ் போகத், சாக்சி மாலிக்

ஒரு நல்ல தீர்வு கிடைக்காமல் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என வினேஷ் போகத் மற்றும் போராட்டக் குழுவினர் தெரிவிக்க, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விளையாட்டுத் துறை அமைச்சகமும் களத்தில் இறங்கியது.

மல்யுத்த ஆட்டங்களை கவனித்திருக்கீறீர்களா? தோள் தழுவி விடாக்கண்டனாக முட்டி மோதி, எதிராளியின் முதுகை யுத்த விரிப்பில் தாழ்ப்படுத்தி வெற்றியை ஈட்டிக்கொள்ள போட்டியாளர்கள் போராடுவார்கள். அதுதான் அந்த விளையாட்டின் அடிநாதம். கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்திலும் இதே போன்ற ஒரு மல்யுத்தம் அரங்கேறியிருக்கிறது. ஆனால், அங்கே வீரர்களும் வீராங்கனைகளும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவில்லை. மாறாக தங்களை நிர்வகிக்கும் ‘இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு'க்கு எதிராக மோதியிருக்கின்றனர்.

ஜந்தர் மந்தர் மைதானம் எத்தனையோ போராட்டங்களைக் கண்டிருக்கிறது. அரசியலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுச் சமூகம் எனப் பலதரப்பட்டோரும் இங்கே போராட்ட முழக்கத்தை எழுப்பியிருக்கின்றனர். ஆனால், இதுவரை இல்லாத வகையில் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் போராட்டக் களத்தில் குதித்ததுதான் கடந்த வாரம் தேசிய ஊடகங்களில் ஹாட் டாபிக்.

பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியா

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், இன்னொரு ஒலிம்பியன் பஜ்ரங் புனியா என மூவரும் முன்னிற்க, அவர்களுடன் 30-க்கும் அதிகமான மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இணைய, ஜந்தர் மந்தரில் கலகக்குரல் கணீரென வெடிக்கத் தொடங்கியது. இவர்களின் புகார் அத்தனையும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் மீதும்தான். குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கைதான் அத்தனை புகார் அம்புகளும் குத்திக் கிழித்திருக்கின்றன. ‘10 முதல் 20 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷணால் பாலியல் தொந்தரவை அனுபவித்திருக்கின்றனர். அதில், ஒரு பெண் சார்ந்த அரை மணி நேர ஆடியோ ஆதாரமே என்னிடம் இருக்கிறது' என அதிர வைத்திருக்கிறார் வினேஷ் போகத். பாலியல் குற்றச்சாட்டு மட்டுமல்லாமல் நிர்வாகக் கோளாறுகள், அதிகார துஷ்பிரயோகம் என பிரிஜ் பூஷண் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியிருக்கின்றனர். இதுபோக, பயிற்சியாளர்களின் திறனற்ற தன்மை, அவர்களின் அத்துமீறல்கள் எனப் புகார்ப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஒரு நல்ல தீர்வு கிடைக்காமல் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என வினேஷ் போகத் மற்றும் போராட்டக் குழுவினர் தெரிவிக்க, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விளையாட்டுத் துறை அமைச்சகமும் களத்தில் இறங்கியது. விசாரணை முடியும் வரை பிரிஜ் பூஷணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்க அறிவுறுத்தியிருக்கிறது. மல்யுத்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தையும் முடக்கி, கூட்டமைப்பை நிர்வகிக்கத் தனி கமிட்டியும் அமைத்திருக்கிறது.

வினேஷ் போகத்,  சாக்சி மாலிக்
வினேஷ் போகத், சாக்சி மாலிக்

பி.டி.உஷா இந்தியா முழுமைக்கும் பேருவகையோடு மதிக்கப்படும் மின்னல் கால்களுக்குச் சொந்தமானவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கும் முதல் பெண் எனும் பெருமையை வெகு சமீபத்தில்தான் பெற்றார். அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு கவனம் பெறும் விளையாட்டு சார்ந்த முதல் விஷயமே பாலியல் குற்றச்சாட்டு என்பது பெரும் வேதனை. மேரி கோம் தலைமையில் பி.டி.உஷா அமைத்திருக்கும் 7 பேர் கொண்ட விசாரணைக்குழுவினர், தங்களின் வீரியத்தையும் திராணியையும் வெளிக்காட்டியே ஆக வேண்டிய முக்கியமான கட்டத்தில் நிற்கின்றனர்.

ஜந்தர் மந்தர் போராட்டம் சார்ந்த விஷயத்தில் பிரிஜ் பூஷண் குற்றவாளியா இல்லையா என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருக்கதான் வேண்டும். அதேநேரத்தில், அவரின் பின்னணி அவ்வளவு உவப்பானதாகவும் இல்லை. உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்று எம்.பி-யாக இருக்கும் பிரிஜ் பூஷணின் ட்ராக் ரெக்கார்டு முழுக்க குற்றப்பின்னணிகளால் நிரம்பியிருக்கிறது. கொள்ளை, கொலை முயற்சி உட்பட நான்கு வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான தடா சட்டத்திலும் கைதான வரலாற்றுக்குரியவர். ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்த சமயத்திலுமே பிரிஜ் பூஷண் கொஞ்சம் அடாவடித்தனமாகத்தான் பேசியிருக்கிறார். ‘‘காங்கிரஸ்காரர்கள் தூண்டிவிட்டு இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. ஷாகீன்பாக்கில் கூடிய அதே கூட்டம்தான் இங்கேயும் கூடியிருக்கிறது'’ என சி.ஐ.ஏ-வுக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு வெறுப்பைக் கக்கினார்.

பி.டி.உஷா
பி.டி.உஷா

2012 முதல் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் இவருக்கும் வினேஷ் போகத்துக்கும் ஏற்கெனவே முட்டல் மோதல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மூன்று முறை காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகத்தால் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்ல முடியவில்லை. 2016 ரியோ மற்றும் 2021 டோக்கியோ ஒலிம்பிக் ஆகிய இரண்டிலுமே வினேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தச் சமயத்தில்தான் பிரிஜ் பூஷண் வினேஷை ‘செல்லாக்காசு' என விமர்சித்திருந்தார். மேலும், வினேஷின் வெளிநாட்டுப் பயிற்சியாளர் வினேஷின் பயிற்சிக்காக ஒதுக்கும் பணத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகிறார் எனக் குற்றம்சாட்டியிருந்தார். ஒழுங்கீனமாகச் செயல்பட்டார் என வினேஷ் போகத்திற்கு சிறிது காலம் தடையும் வழங்கப்பட்டது. இந்தப் புகார்கள் சார்ந்து சுய விளக்கத்தைக் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்ட பிறகே வினேஷின் மீதான தடை நீக்கப்பட்டது. இவையெல்லாமும்கூட தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதற்காகவே செய்யப்பட்டது என வினேஷ் போகத் இப்போது குற்றம் சாட்டியிருக்கிறார்.

‘‘பிரிஜ் பூஷண் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் போராட்டத்தில் குதித்த எங்களின் எதிர்காலமே வீணாகிவிடும். இது எங்களின் சுயமரியாதைக்கான போராட்டம். இதிலிருந்து பின்வாங்கமாட்டோம்'’ என உரத்த குரலில் பேசிவிட்டு தற்காலிகமாக இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கியிருக்கின்றனர் இவர்கள்.

இது மல்யுத்தக் கூட்டமைப்பு சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக் கூட்டமைப்புகளில் ஏறக்குறைய பாதிக்குப் பாதி அமைப்புகள், விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத அரசியல்வாதிகளாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. பெரும்பாலும் அந்தக் கூட்டமைப்புகள் அத்தனையுமே ஏதோ ஒரு சிக்கலிலும் குழப்பத்திலும்தான் சிக்கியிருக்கின்றன. கால்பந்து, ஹாக்கி, சைக்கிள், படகு என எந்த விளையாட்டும் விதிவிலக்காக இல்லை. எல்லாவற்றிலும் நிர்வாகக் கோளாறு, அதிகார துஷ்பிரயோகம், பாலியல் குற்றச்சாட்டு எனப் புகார்கள் நிரம்பி வழிகின்றன.

பிரிஜ் பூஷண்
பிரிஜ் பூஷண்

சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் விளையாட்டுத்துறை ஒரு ஒழுங்கே இல்லாமல் இருந்தது. முழுக்க முழுக்க அதிகார ஆதிக்கத்தால் நிரம்பியிருந்தது. நாங்கள் அந்தக் கறைபடிந்த சிஸ்டத்தைத் தூய்மைப்படுத்தியிருக்கிறோம். இளைஞர்கள் மத்தியில் புது நம்பிக்கையைப் பாய்ச்சியிருக்கிறோம்'’ என்றார். மோடி தூய்மையாக்கிவிட்டதாகச் சொன்ன அதே சிஸ்டத்திற்குள்தான் பிரிஜ் பூஷண் இருந்திருக்கிறார் என்பது அவல நகைச்சுவை.

விளையாட்டுத்துறையில் இந்தியா பெரிய பெரிய கனவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் புதிய புதிய விளையாட்டுகளில் நம்பமுடியாத சாதனைகள் புரிந்து பதக்கங்களை வெல்ல எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் 100-வது சுதந்திர தினத்திற்குள் ஒலிம்பிக்ஸை நடத்தியே தீர வேண்டும் என்கிறார்கள். விளையாட்டிலும் ஒரு சூப்பர் பவராக வல்லரசு என்கிற இடத்தை நோக்கி நகர வேண்டும் என்கிறார்கள். வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் சுயமரியாதையையும் உறுதிசெய்யாமல் இவை எதுவும் சாத்தியமில்லை என்பதை அதிகார பீடத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.